1886-ல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜூலியஸ் மேகியால் தயாரிக்கப்பட்ட மேகி
இந்தியாவுக்கு வந்தது 1982-ல். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில்
மேகி நூடுல்ஸை விற்று நெஸ்லே நிறுவனம் சம்பாதித்தது ரூ. 1,500 கோடி
என்கிறார்கள். இந்தியச் சமையலறைகளில் எந்த அளவுக்கு வேகமாக மாற்றங்கள்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இது.
காரீயமும் மோனோ சோடியம் குளுட்டமேட்டும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்
அதிகமாக இருப்பதாகச் சொல்லி, இப்போது மேகி நூடுல்ஸுக்குத் தடை
விதித்திருக்கிறார்கள். மேகியினால் உண்டாகக்கூடிய ஆபத்துகளைப் பற்றி
மருத்துவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களும் பேசுகிறார்கள். ஆனால், இது
எதுவும் புதிதல்ல. மேகி அறிமுகமான காலத்திலேயே மருத்துவர்கள் இதுபற்றி
எச்சரித்தது உண்டு. இன்றைக்குப் போலத்தான் அன்றைக்கும். படிக்கிற/கேட்கிற
நேரத்தில் அதையெல்லாம் படித்து/கேட்டுவிட்டு, சாப்பிடுகிற நேரத்தில்
வழக்கம்போலச் சாப்பிட்டிக்கொண்டிருந்தது இந்தியச் சமூகம்.
சரி, இப்போது மேகிக்குத் தடை விதித்தாயிற்று. ஆபத்துகள் அதோடு போச்சா?
கிடையவே கிடையாது. ஒவ்வொரு நாளும் 100 நோயாளிகளைச் சந்திப்பவன் என்கிற
முறையில் சொல்கிறேன், மதுப்பழக்கம், புகைப்பழக்கத்துக்கு இணையாக இன்று
இந்தியர்களின் உடல்நலனைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது துரித உணவுப் பழக்கம்.
மைதாவுக்கு மயங்காதீர்கள்
தெரிந்தோ, தெரியாமலோ இன்றைய இளைய சமூகத்தை மயக்கிவைத்திருக்கும் துரித உணவு
அத்தனையையும் உடைத்துப்பார்த்தால் உள்ளே பதுங்கிக்கொண்டிருந்த பூதமாக
வெளிவருவது மைதா. புரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா,
பீட்சா, குல்ச்சா, பர்கர்… எல்லாமே மைதா. கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு
சில வேதிப்பொருட்களைச் சேர்த்து வெண்மையாக்கப்படுவதே மைதா. இப்படியான
உருவாக்கத்தின்போதே நார்ச்சத்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறது மைதா.
அடுத்து,
பி-காம்ளெக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற
தாதுச்சத்துகளும் குறைந்துவிடுகின்றன. மைதாவால் ஆன உணவு என்பதே குப்பை
உணவுதான். கூடவே, கோளாறு தரும் உணவாகவும் மாறிவிடுகிறது. செரிமானத்தில்
தொடங்கும் கோளாறுகளின் பயணம் மலச்சிக்கல், மூலநோய் என நீண்டு உடல் பருமன்,
நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு என்று மேலும் விரிகிறது.
மைதாவுக்கு வெண்மை நிறம் தருகிற பென்சோயில் பெராக்சைடு புற்றுநோயை
உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டது. மைதாவை மிருதுவாக்கச் சேர்க்கப்படும்
அலெக்சான், கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவுநோய்க்கு
வழிவகுக்கக் கூடியது. சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மைதாவில்
சேர்க்கத் தடை விதிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் இவை. இந்தியாவிலோ இது
தொடர்பான விழிப்புணர்வே இன்னும் உருவாகவில்லை.
சேர்மானங்களும் சரியில்லை
துரித உணவுகளின் மூலப்பொருளான மைதா மட்டும்தான் என்றில்லை, துரித உணவில்
சேர்க்கப்படும் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறது ஆபத்து. துரித உணவுத்
தயாரிப்பில் எண்ணெய்க்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. சுத்திகரிக்கப்பட்ட
எண்ணைய் நல்லது என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அப்படியல்லவே?
எண்ணெய் சுத்திகரிப்பு என்பதே பல வேதிப்பொருட்களைச் சேர்த்து, வெப்பநிலையை
மாற்றி, பலகட்டங்களைக் கடப்பதுதான் என்று ஆகிவிட்டதே? சரி, வீட்டிலும் அதே
எண்ணெயைத்தானே பயன்படுத்துகிறோம் என்று கேட்காதீர்கள். வீட்டில் ஒருமுறை
பயன்படுத்திய எண்ணெயை 10 முறை மீண்டும் மீண்டுமா பயன்படுத்துகிறோம்? ‘ஃபிரி
ரேடிக்கல்ஸ்’எனும் நச்சுகள் அதிகரிக்க வழிவகுப்பது இந்த எண்ணெய்க்
கலாச்சாரம். இப்படித் துரித உணவுகளில் ஒவ்வொரு சேர்மானங்களில்
புதைந்திருக்கும் ஆபத்துகளையும் பெரிய பட்டியல் போடலாம்.
எமபானம் குளிர்பானம்!
துரித உணவுக் கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களால் தவிர்க்கவே முடியாதது
குளிர்பானம். பீட்சாவோ, பர்கரோ கூட நமக்கு ஒரு பாட்டில் குளிர்பானமும்தானே
தேவைப்படுகிறது? குளிர்பானங்களின் உருவாக்கத்தில் ‘காஃபீன்’எனும்
வேதிப்பொருளுக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பை நிலைப்படுத்துவதற்காக,
சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு.
கேரமல் மற்றும் பீட்டா கரோட்டீனை வண்ணமூட்டுவதற்காகப்
பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல்
உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருபவை. உதாரணமாக, பாஸ்பாரிக் அமிலம் பல்லின்
மேற்பூச்சாக இருக்கின்ற எனாமலைச் சீக்கிரம் சிதைத்து பற்சிதைவுக்கு
வழிவகுக்கக் கூடியது. கோலா பானங்களுக்குக் கருப்பு வண்ணம் தருகின்ற கேரமல்
புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. காஃபீன் ரத்த அழுத்தத்தை அதிகரித்து
நரம்புத்தளர்ச்சிக்கும் இதய நோய்க்கும் வழிவகுக்கக் கூடியது.
முன்பருவமடைதலில் தொடங்கி மலட்டுத்தன்மை வரை
மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பெண்கள்
பருவமடைதலைப் பற்றிப் பேசினால், ஒரு உண்மை தெரியவரும். முன்புபோல இல்லை,
இன்றைய குழந்தைகள் சீக்கிரம் பருவம் அடைந்துவிடுகிறார்கள். அதாவது
முன்பருவமடைதல். எட்டு வயதிலேயே பூப்பெய்திவிட்ட குழந்தைகளை நான்
சந்தித்திருக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும், நம்முடைய
உணவுப் பழக்கத்துக்கு அதில் முக்கிய இடம் உண்டு. பெண்கள் பூப்பெய்வதற்குக்
காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனைப் பதப்படுத்தப்பட்ட / துரித உணவுகள்
அதிகமாகச் சுரக்கச்செய்யும் தன்மை கொண்டவை என்கின்றன ஆய்வு முடிவுகள்.
முன்பருவமடைதல் என்பது வெறும் உடல் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல.
உதாரணமாக, முன்பருவம் அடையும் ஒரு குழந்தையின் எலும்பு வளர்ச்சி சீக்கிரம்
நின்றுபோகிறது. இதனால், அவர்களுடைய உயரம் குறைந்துபோகிறது. இது
உடல்ரீதியாக, மன ரீதியாக, சமூகரீதியாகப் பல பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது.
மேலும், தினமும் துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் 60% பேர் அடுத்த
ஒன்றரை ஆண்டுகளில் உடற்பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடற்பருமன் ஒன்று
போதுமே, நமது உடலின் சீரான நிலையைக் குலைக்க.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் செயற்கைக் கருவூட்டலுக்கு உள்ளாகிற இளம்
தம்பதியரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எங்கோ எப்போதோ
கேள்விப்பட்ட நிலை மாறி, பல இளம் தம்பதியினர் குழந்தையின்மைப் பிரச்சினையை
எதிர்கொள்வதை இன்று நேருக்கு நேர் பார்க்கிறோம். காரணம் என்ன? ஹார்வர்டு
பல்கலைக்கழகமும் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து சமீபத்தில் ஓர் ஆய்வை
மேற்கொண்டன. நொறுக்குத்தீனி, துரித உணவுக் கலாச்சாரத்துக்கு ஆட்பட்ட
இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுவதை அவை அந்த ஆய்வின் மூலம்
கண்டறிந்தன. மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் நம்முடைய உணவுப்
பழக்கத்துக்கும் முக்கியப் பங்கிருப்பதை அவை உறுதிசெய்தன.
இவ்வளவு பாதிப்புகளை எதிர்கொள்கிறோம். ஆனால், என்ன படிப்பினையைப் பெறுகிறோம்?
மேகியை நாம் துரத்தியிருக்கலாம், குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும். ஆனால்,
இன்னும் துரத்த வேண்டியவை நிறைய இருக்கின்றன. அரசாங்கத்தின் தடை அறிவிப்பு
வரும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. துரித உணவுகளை நாமே துரத்தலாம்!
கு. கணேசன், பொது நல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.