Saturday, 27 June 2015

தானமும் வியாபாரமும்!



இந்திய அளவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருக்கிறது. பொதுவாக, அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளே மாற்று உடல் உறுப்புகளைப் பெறுவதில் முன்னணியில் இருக்கின்றன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக தொடங்கப்பட்ட மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் மருத்துவர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அரசு மருத்துவமனைகளில் முழு அளவில் செயல்படாமல் போனதுதான் இதற்கான முக்கியக் காரணம்.
தமிழகத்தில் மாற்று உடல் உறுப்புகளைப் பெறும் தனியார் மருத்துவமனைகள் மீது சமீப காலமாகச் சில குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதில் உண்மை இல்லாமல் இல்லை. முக்கியமாக இரு குற்றச்சாட்டுகள்.
முதலாவது, மூளைச்சாவு அடைபவர்களிடமிருந்து உடல் உறுப்புகளைப் பெறுகின்ற தனியார் மருத்துவமனைகளிடம் போட்டி இருக்கிறது. அந்தப் போட்டியானது அக்கறையின் அடிப்படையிலான ஆரோக்கியமான போட்டியாக இல்லாமல் சந்தையுடன் இணைந்த போட்டியாக இருக்கிறது. ஒரு மருத்துவமனையில் நோயாளியிடமிருந்து தானமாகப் பெறப்படும் உறுப்பைப் பெறுவதில், நிச்சயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத்தான் முன்னுரிமை. ஆனால், இப்படித் தானமாகப் பெறப்படும் உறுப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது மற்ற மருத்துவமனைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது, தனியார் மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைபவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தால், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளிடம் வழக்கத்தைவிடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
பொதுவாக, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக உறவினர்கள் தெரிவித்த பிறகு, அதற்குப் பின் அப்படியான நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் நாட்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஒருவேளை அந்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் தள்ளுபடிசெய்யலாம் என்றால், அது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் விருப்பம். ஆனால், ஒருபோதும் அந்தக் கட்டணத்தை உறுப்புகள் பொருத்தப்படும் நோயாளிகளிடம் மறைமுகமாக வசூலிக்கக் கூடாது. அதேபோல, தானமாகப் பெறப்படும் ஒரு உறுப்பு மற்றவர்களுக்கும் தானமாகத்தான் அளிக்கப்பட வேண்டும். உறுப்புக்கு என எந்த மருத்துவமனையும் மறைமுகமாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அது குற்றம்.
இதுபற்றியெல்லாம் யாரும் எழுத்துபூர்வமாகப் புகார் கொடுப்பதில்லை. அப்படிப் புகார் கொடுத்தால், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் நடவடிக்கைக்கு உள்ளாகும்!
டாக்டர் அமலோற்பவநாதன், மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்.



 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.