மனைவி ஸ்டெபானி, கைக்குழந்தை வயாத்தை அந்த மருத்துவமனையில் நடுநிசியில்
விட்டுவிட்டு மனமில்லாமல் பிரிந்தார் ஆஸ்டின் பிளாகர். இத்தம்பதிக்கு வயாத்
மூன்றாவது குழந்தை. குழந்தையின் இதயத்தில் இடது பகுதி இல்லை என்பது
வயிற்றிலிருந்து கருவை ஸ்கேன் செய்த ஆறாவது மாதத்தில் தெரிந்தது.
பொதுவாக, இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு வலி மறப்பு மருந்துகளைக்
கொடுத்து, இயற்கை அதைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும்வரை பராமரிப்பார்கள்.
குழந்தை அப்படியே பிறக்கட்டுமா அல்லது கருவைக் கலைத்துவிடலாமா சொல்லுங்கள்
என்று மருத்துவமனையில் கேட்டார்கள். ஒரு நாள் முழுக்க முடிவுக்கு வர
முடியாமல் தவித்த ஸ்டெபானி, “கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த ஜீவனை
எனக்குள் அனுப்பியிருக்கிறார். அது பிறக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம்”
என்றார். மருத்துவர்களும் சரியென்று கரு நன்கு வளர சிகிச்சை அளித்தார்கள்.
குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் மருத்துவமனைக்கு வரச் சொல்லி, அதன் வலது
வென்டிரிக்கிள் வழியாகவே உடல் முழுவதற்கும் ரத்தம் அனுப்பப்படும் வகையில்
நார்வூட் அறுவைச் சிகிச்சையைச் செய்தனர். 2 மாதங்களுக்குப் பிறகு வயாத்
மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான். செயற்கை சுவாசக் கருவியைப்
பொருத்திய மருத்துவர்கள், நிறைய மருந்துகளை உட்செலுத்தினார்கள். உடல் எடை
10 பவுண்டுகூட இல்லை. இனி இதய அறுவைச் சிகிச்சை மூலம் அவனைப் பிழைக்க வைக்க
முடியாது. புதிய இதயம்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால்,
அதனாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. புதிய இதயத்தை ஏற்காமல் உடல்
மறுக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பிறக்கட்டும் என்று முடிவு செய்த
ஸ்டெபானி, அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு கடினமான முடிவை எடுக்க
வேண்டிய நிலைக்கு ஆளாகிக்கொண்டிருந்தார்.
இவ்வளவு சிறிய சிசுவுக்கு மாற்று இதயம் எப்படிக் கிடைக்கும், அதற்கான
வாய்ப்புகள் என்ன என்று சிந்தித்ததில் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது
புரிந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் வேண்டும் என்றால், இன்னொரு
குழந்தையின் வாயிலாகத்தான் சாத்தியம். அதுவும் இந்த மருத்துவமனை இருக்கும்
இடத்திலிருந்து 1,000 மைல் தொலைவுக்குள் இருக்கும் குழந்தையின் இதயம்
கிடைத்தால்தான், அதை அந்த உடலிலிருந்து அகற்றி 4 மணி நேரத்துக்குள்
விமானத்தில் கொண்டுவந்து வயாத்துக்குப் பொருத்த முடியும். 4 மணி நேரம்
கடந்துவிட்டால் அந்த இதயமும் செயலற்றுவிடும்.
வயாத் போன்ற குழந்தையின் ரத்த வகை, உடல் நிலை, இதயக் கோளாறின் தன்மை,
தேவைப்படும் இதயத்தில் இருக்க வேண்டிய அளவு, அம்சம் போன்ற அனைத்தும்
கணினியில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால், விபத்து அல்லது வேறு வகையில் இதே
வயதுக் குழந்தை இறந்தால் அதன் இதயம் இக்குழந்தைக்குப் பொருந்துமா,
பொருந்தாதா என்று சில நிமிடங்களில் தீர்மானித்துவிட முடியும். இதற்காக
அமெரிக்கா முழுவதற்கும் பயன்படக்கூடிய தேசிய தகவல் இணைப்பு
உருவாக்கப்பட்டிருக்கிறது. 2 அல்லது 4 மாதங்கள் மாற்று இதயத்துக்காகக்
காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். வழக்கமாக இந்தக்
காலத்தில் பெற்றோர்கள் தங்களுடைய நம்பிக்கையையும் பொறுமையையும் ஒருசேர
இழந்துவிடுகிறார்கள். அப்படிக் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? காலம்
பூராவும் செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட சாதனங்களுடன் செயற்கையாகவே
வாழவைப்பதா என்ற முடிவைப் பெற்றோர் எடுத்தாக வேண்டும்.
இந்த நிலையில்தான் மாற்று இதயத்தைப் பொருத்துவதற்காக மருத்துவமனையில் வயாத்
சேர்க்கப் பட்டான். ஆஸ்டின் பிளாகர் மற்ற இரு குழந்தைகளைப்
பார்த்துக்கொள்ள வீட்டில் தங்கிவிட்டார். மருத்துவமனையில் ஸ்டெபானி
செய்வதற்கு ஏதுமில்லை. சிறிது நேரம் உட்கார்ந்து மகனுடன்
பேசிக்கொண்டிருப்பார். அவனைத் தாங்கள் நேசிப்பதையும் அவன் நலமுடன்
திரும்பப் போவதையும் கூறி நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருப்பார். அவனுடைய
உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தினசரி குறிப்புகள் எழுதிவைப்பார். பூரண
சுகம்பெற ஜெபமாலை உருட்டி பிரார்த்தனைகள் செய்வார். இப்படியேதான் நாட்கள்
கழிந்துகொண்டிருந்தன.
ஒரு நாள் ஸ்டெபானியிடம் அந்த நல்ல செய்தியை மருந்துவர்கள் சொன்னார்கள்.
ஆம், வயாத்துக்கு ஒரு மாற்று இதயம் கிடைக்கப்போகிறது. சிரிக்கக்கூட
முடியாமல் அழுதார் ஸ்டெபானி. எங்கிருந்தோ ஹெலிகாப்டரில் வந்தது அந்த இதயம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், விமானப்
போக்குவரத்துத் துறையினர், காவல்துறை, விமான நிலையக்கட்டுப்பாட்டு அறை
ஊழியர்கள் என்று எவ்வளவோ பேரின் உதவி, ஒத்துழைப்பின் விளைவாக அறுவைச்
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மாற்று இதயம் பெற்று வயாத் சுவாசிக்கத்
தொடங்கினான். அன்றலர்ந்த ரோஜாபோல இருந்த அவனை ஸ்டெபானி இரு வாரங்களுக்குப்
பின் தூக்கிக்கொண்டு வீடு திரும்பினார்.
எனினும், கதை இத்துடன் முடியவில்லை. குழந்தைகளுக்குப் பொருத்தப்படும்
மாற்று இதயம் அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்குத்தான் வேலை செய்யும். அதற்குப்
பிறகு வளர்ந்த மனிதர்களின் இதயம் பொருத்தப்பட வேண்டும். இது அடுத்து, வயாத்
எதிர்கொள்ளவிருக்கும் பெரிய சவால். அதற்குள் இன்னும் நிறைய சவால்கள்
இருக்கின்றன. அவனுடைய உடல்நிலையை ஒவ்வொரு நாளும் ஸ்டெபானி தம்பதி கவனிக்க
வேண்டும். மருத்துவர்கள் சொல்படி ஒவ்வொரு நாளையும் அவன் நகர்த்த வேண்டும்.
என்றாலும் இதெல்லாம் சாத்தியம்தான். அன்பே உருவான ஒரு பெற்றோர் அவனுக்கு
இருக்கின்றனர். உலகில் தங்கள் உயிருக்கு இணையானவர்கள் மரணத்தை
நெருங்கினாலும், ஏதேனும் ஒருவகையில் அவர்கள் இந்த பூமியில் வாழ வழிவகை
செய்யும், இன்னொரு உயிருக்கு வாழ்வளிக்கும் பெருந்தன்மையாளர்கள் ஒவ்வொரு
நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகை அன்பு ஆளும்போது வயாத்துகள்,
ஸ்டெபானிகள் நீண்ட காலம் கண்ணீர் விட வேண்டியதில்லை!
©: ‘தி கார்டியன்’
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.