இன்றைக்கு இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்துக்குத்தான்
முதலிடம். பல ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் நடைபெறுகிறது
என்றாலும், ஹிதேந்திரனின் தானம் தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.
சென்னையில் 2008-ல் ஒரு விபத்தில் சிக்கினார் ஹிதேந்திரன். மூளைச்சாவு
அடைந்த அவருடைய உறுப்புகளைத் தானம் அளிக்க முடிவெடுத்தனர் அவருடைய
பெற்றோர். மருத்துவத் துறையினரோடு காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும்
கை கோக்க, இந்த தானம் மிகத் துரிதமாக யாருக்குத் தேவையோ அவர்களைச்
சென்றடைந்தது. ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் எழுத, தமிழகத்தில் மிகப் பெரிய
விழிப்புணர்வு உருவாகக் காரணமானார் ஹிதேந்திரன். இதன் தொடர்ச்சியாக,
மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டது. எண்ணற்றோர்
தங்கள் உயிருக்கு நெருக்கமானவர்கள் மரணத்தை நெருங்கும்போது, அவர்களுடைய
உடல் உறுப்புகளைத் தானம் அளித்து தங்கள் உயிரானவர்களுக்கு மரணமில்லாப்
பெருவாழ்வை அளிக்கிறார்கள்.’
தமிழகத்தில் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் 8 அரசு
மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 2008 அக்டோபர் முதல் மே மாதம் வரை மூளைச்சாவு அடைந்த 528
ஆண்கள், 121 பெண்கள் என மொத்தம் 649 பேரின் உடல் உறுப்புகள் தானம்
அளிக்கப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து மொத்தம் 3,572 உறுப்புகள் தானம்
பெறப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 78 பேரும், கடந்த மே மாதத்தில்
மட்டும் 18 பேரும் உடல் உறுப்புகளைத் தானம் அளித்துள்ளனர்.
பொதுவாகவே, அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளே உடல்
உறுப்பு தானம் பெறுவதில் முன்னணியில் இருக்கின்றன. இதுவரை மூளைச்சாவு
அடைந்து தானம் அளித்துள்ளவர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் 119
பேர்; தனியார் மருத்துவமனைகளில் 530 பேர். அரசு மருத்துவமனைகளில் 244
சிறுநீரக, 4 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. தனியார்
மருத்துவமனைகளில் 882 சிறுநீரக, 122 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள்
நடந்துள்ளன. எல்லை தாண்டியும் தானங்கள் உயிர்களைக் காக்கின்றன. இதுவரை
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் 9 உறுப்புகள் வெளிமாநிலங்களில்
சிகிச்சை பெற்றவர்களுக்கும், வெளிமாநிலங்களில் மூளைச்சாவு அடைந்தவர்களின்
13 உறுப்புகள் தமிழகத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
இங்கு சிகிச்சையில் இருந்த ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தை
கிளெப்க்கு, கடந்த ஆண்டு பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது ஆண்
குழந்தையின் இதயம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது.
இதுவரையிலான பதிவுகளைப் பார்க்கும்போது, இத்திட்டத்தால் பலனடைந்தவர்களில்
ஏழைகளின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான். அரசு மருத்துவமனைகளில் இத்திட்டத்தை
முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எளிய
மக்கள் பலன் அடைய முடியும்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.