அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும், இந்தியாவின்
பாதுகாப்பு (ராணுவம்) அமைச்சர் மனோகர் பாரிக்கரும் ராணுவ வர்த்தக,
தொழில்நுட்ப முன்முயற்சிகளுக்கான ஒப்பந்தத்தில் சில நாட்களுக்கு முன்னர்
கையெழுத்திட்டனர். 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய
முயற்சிகளுக்கான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்புத்
துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு வழிவகை செய்யும். ‘இதுவரை
நடந்திராத நிகழ்ச்சி’ என்று இந்த ஒப்பந்தம் வர்ணிக்கப்பட்டது. ஆனால், இந்த
ஒப்பந்தம் நமது ராணுவத் தேவைகளைப் பூர்த்திசெய்யுமா என்பதுதான் மிகப் பெரிய
கேள்வி.
எந்த நாடும் தன்னிடமுள்ள நவீன ஆயுதத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைப் பிற
நாடுகளுக்கு முழுவதையும் கொடுத்துவிடாது. அப்படி எதிர்பார்ப்பதும்
சிறுபிள்ளைத்தனம். இரண்டாவது ஆண்டில் அடி எடுத்துவைத்திருக்கும் மோடி அரசு,
நாட்டின் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை மனதில் கொண்டு,
அதற்கேற்ப ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்த வேண்டிய
தருணம் இது. பாதுகாப்புத் தேவைகளுக்கான ஆயுதங்கள், சாதனங்களை உள்நாட்டில்
தயாரிப்பதைவிட நமக்கு வேறு வழியே இல்லை.
குறைந்த நிதி
நம் நாட்டு மக்கள்தொகையில் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமைக்
கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில், பாதுகாப்புத் தேவைகளுக்காக மொத்த
உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 2%-க்கும் குறைவாகத்தான் நம்மால் நிதி
ஒதுக்க முடிகிறது. எதிர்காலத்தில் அது 2% அளவைத் தாண்டுமா என்பதும்
சந்தேகம்தான். மிகவும் அரிதான இந்த நிதியை நிர்வாகரீதியாகவும் செயல்திட்ட
வழியாகவும் திட்டமிட்டுச் செலவிட வேண்டியது அவசியம்.
செயல்திட்ட வழியில் முதலில் இரு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாவதாக, பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறைகள் மிகவும் விரைவாகச்
சீர்திருத்தப்பட வேண்டும். “முப்படைகளுக்கும் தேவைப்படும் ஆயுதங்கள்,
படைக்கருவிகள், குண்டுகள் போன்றவை ‘ஒரு சில நாட்களுக்கு மட்டுமே’ போதுமான
அளவுக்குத்தான் கைவசம் இருக்கின்றன” என்று ஒரு தளபதி கூறியிருப்பதை இங்கே
நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ராணுவக் கொள்முதலின்போது வாங்கும் சாதனங்களை உள்நாட்டிலேயே
தயாரிப்பது, பாகங்களைத் தயாரிப்பது, வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பெற்று
இணைந்து தயாரிப்பது போன்றவற்றைத் தீர்மானித்து இறுதி செய்யத் தனிப்
பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும். இறக்குமதி செய்தால்தான் போர்க்
கருவிகளையும் சாதனங்களையும் பெற முடியும் என்ற நிலையிலிருந்து நாட்டை
மீட்கத் தவறிவிட்டது அரசு.
பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) செயல்பாடுகள்
மிகவும் மோசமாக இருக்கின்றன. ராணுவ உற்பத்தியில் தன்னிறைவுக் கொள்கையை
வகுத்துச் செயல்படுத்தினால்கூட நாம் முழுத் தன்னிறைவு பெற இன்னும் 20
ஆண்டுகள் தேவைப்படும் என்பதே இப்போதைய நிலை.
யார் பொறுப்பு?
உள்நாட்டிலேயே ஆயுதங்களையும் சாதனங்களையும் தயாரித்தால் நல்ல தரத்தில்,
நமக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில், கட்டுப்படியாகக்கூடியச் செலவில்,
தொடர்ச்சியாகத் தயாரித்துக்கொண்டிருக்க முடியும். நம்முடைய பாதுகாப்புக்
கொள்முதல் கொள்கை இதை மனதில் கொள்ள வேண்டும். ஒருவேளை, நினைத்ததைவிட அதிக
நாட்களுக்குச் சண்டை நீடித்தால் நமது துருப்புகளுக்குத் தேவைப்படும்
ஆயுதங்களையும் சாதனங்களையும் தொடர்ந்து தயாரித்து இடைவெளியில்லாமல்
அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அரசுத் துறையிலோ தனியார் துறையிலோ அந்த
நிறுவனங்கள் நம் நாட்டிலேயே இருந்தால்தான் அது சாத்தியம். எனவே,
தேவைப்படும் ஆயுதங்களையும் சாதனங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான
அடிப்படைகளை ஏற்படுத்துவதாகவே ஆயுதக் கொள்முதல் கொள்கை இருக்க வேண்டும்.
போருக்குத் தேவைப்படும் கருவிகளைத் தயார் செய்யக்கூடிய அமைப்பே நம்மிடம்
இல்லை என்பதுதான் நமக்கிருக்கும் மிகப் பெரிய பின்னடைவு. அமைப்பே
இல்லாததால் இலக்குகள், பொறுப்பு, பதில் சொல்லும்படியான கட்டாயம் ஆகியவற்றை
யார் மீதும் சுமத்தும் நிலை இப்போது இல்லை. பாதுகாப்புத் துறைக்கான
பொருட்களை உற்பத்தி செய்யும் துறையும், கொள்முதலுக்கான தலைமை இயக்குநர்
அலுவலகமும் பாதுகாப்பு அமைச்சகமும் தங்கள் அளவில் குட்டி ராஜாக்கள். ராணுவ
சாதனங்கள் கையிருப்பில் இல்லை என்பதற்காகவோ, உள்நாட்டில்
தயாரிக்கப்படவில்லை என்பதற்காகவோ இந்த மூன்றில் ஒன்றுகூடப் பொறுப்பேற்க
வேண்டிய அவசியமில்லாத நிலை!
வழிகாட்டும் வெளிநாடுகள்
அமெரிக்காவிலும் இதே போன்ற நிலைமை ஆரம்பத்தி லேயே உணரப்பட்டதால் ராணுவக்
கொள்முதலுக்காகவே தனித் துறை ஏற்படுத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல்
படுகிறது. இதை அந்நாட்டு ராணுவத் துறை வரலாற்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் ராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்கள்,
ஆயுதங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதற்காகவே
ராணுவத் துறையில் நிரந்தரத் தனிப் பிரிவு அதிகாரிகள் இருக்கின்றனர்.
இந்தியாவிலோ வேறு துறைகளிலிருந்து ‘அயல் பணி நியமன’ அடிப்படையில்
அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர். பாதுகாப்புத் துறைக்காகப் பாடுபட்டு
எதையும் செய்யும் மன நிலையும், பொறுப்பும் அவர்களுக்குக் கிடையாது.
குறிப்பிட்ட காலம் முடிந்ததும் தங்கள் தாய்த் துறை வேலைக்குத்
திரும்புவதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். ராணுவத்துக்குத்
தேவையானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும், அதற்குத் திட்டம் வேண்டும்,
அமைப்பு வேண்டும், செயல்திட்டம் வேண்டும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ள
வேண்டும் என்கிற பொறுப்பு, அக்கறையெல்லாம் கிடையாது.
ராணுவக் கொள்முதல் துறைக்கான சீர்திருத்தத்தைத் தொடங்குவது என்றால்
அதற்கென்று நிரந்தரமான, தனி நிர்வாகப் பிரிவைத் தொடங்க வேண்டும்.
ராணுவத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் தேவைப்படும் சாதனங்களைப்
பட்டியலிட்டு, உள்நாட்டில் தயாரித்து வழங்க கொள்கை வகுக்கவும்
செயல்படுத்தவும் தனித்துறை அதிகாரிகள் வேண்டும். அவர்களுடைய முழு நேரப்
பணியும் இந்தத் துறையிலேயே இருக்க வேண்டும். இதெல்லாம் தேவையா, சாத்தியமா
என்ற கேள்வி அர்த்தமற்றது. ‘இந்திய தொலைத் தகவல் ஒழுங்காற்று
ஆணையம்’(டிராய்) எனும் அமைப்பு இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வொரு
துறைக்கும் இப்படி அதிகாரமுள்ள தனிப் பிரிவுகளைத் தொடங்கினால்தான் அந்தத்
துறையின் தேவைகள் முன்னுரிமை தரப்பட்டுக் கவனிக்கப்படும்.
செய்ய வேண்டியது என்ன?
இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை வெளிநாடுகளிலிருந்து கொள்முதல்
செய்யும்போது, அவற்றை உள்நாட்டிலேயே இணைந்து தயாரிக்கவும், அதன் பாகங்களைத்
தயாரித்து வைத்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன்
தொழில்நுட்ப, வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்வது அவசியம். அதற்கான தனிப்
பிரிவு முழுமையாக ஏற்படுத்தப்பட வேண்டும். இது இல்லாததால் இப்போது ஒவ்வொரு
கொள்முதலுக்கும் 10% முதல் 15% வரையில் கூடுதலாக நாம் பணம்
கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
பிரான்ஸிலிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்கள், 400 கோடி டாலர் மதிப்பில்
கொள்முதல் செய்யப்படவிருக்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு
10,000 கோடி டாலர்களாகக்கூட அதிகரிக்கலாம். இவ்வளவு பெரும் தொகையைச்
செலவிடப்போகும் பிரிவில் வேலை பார்க்கும் அலுவலர்களின் எண்ணிக்கை எத்தனை
தெரியுமா? 10 பேர்தான்! தனிப் பிரிவுக்கு உடனே ஆட்களை வேலைக்கு எடுக்க
முடியாது என்றால், அயல்பணிக்காக அனுப்பப்படும் அதிகாரிகளுக்குக்
குறைந்தபட்சம் ‘5 ஆண்டுகள் தொடர் பணி’என்றாவது உத்தரவிட்டு அனுப்ப
வேண்டும்.
இது போன்ற துறைகளுக்கான அதிகாரிகளை, இப்போது வரவிருக்கும் ‘தேசிய ராணுவப்
பல்கலைக்கழகம்’ மூலம் படிக்க வைத்து, பயிற்சி தந்து அனுப்புவது அவசியம்.
பாதுகாப்புத் துறையை அடி நிலையிலிருந்து வலுப்படுத்தும் பணியைப் புதிய அரசு
தனது இரண்டாவது ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும். எந்தப் பகுதிக்கு ஆபத்து
வந்தாலும் நம்முடைய முப்படைகளும் அங்கே சென்று பாதுகாப்பளிக்க வேண்டும்
என்று நாடு எதிர்பார்க்கிறது. அதற்கேற்ற வசதிகளை அரசும் செய்து தர
வேண்டும். ராணுவ ஊழியர்களுக்கு முறையான நல்ல ஊதியம், வீட்டு வசதி, ஓய்வு
பெறும்போது ‘ஒரே மாதிரியான பதவி வகித்தவர்களுக்கு ஒரே மாதிரியான
ஓய்வூதியம்’ என்பனவற்றை நிறைவேற்ற வேண்டும்.
- மன்மோகன் பகதூர்,
விமானப் படையில் துணைத் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக: சாரி
விமானப் படையில் துணைத் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக: சாரி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.