பெண்களுக்கான இரவுப் பணி - மோடி வித்தையின் மற்றொரு காட்சி
இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களுக்கு வயது 90. ஆனால், இந்தியத்
தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட வரலாற்றின் வயதோ 400. இந்த 400 ஆண்டுகளில்
ஆண்-பெண் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். பஞ்சாலைகளிலும்
தேயிலைத் தோட்டங்களிலும் சுரங்கத் தொழிலிலும் அதன் முதலீட்டாளர்கள்
சுரண்டிய அளவுக்குப் பெண் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளிலும், சமூகத்திலும்
சுரண்டப்பட்டே வந்துள்ளனர். ஆண் தொழிலாளி ஒரு முறை சுரண்டப்படுபவரென்றால்,
பெண் தொழிலாளி அதே நேரத்தில் இரண்டு முறை சுரண்டப்படுகின்றனர்.
முதுகு முறிக்கும் வேலை, ஆலைகளில் பெண்களுக்கான தனித்துவம் பேணாமை,
உச்சவரம்பற்ற வேலை நேரங்கள், மகப்பேறுக்கான ஆதாயமின்மை, ஆலை அதிகாரிகளின்
பாலியல் தொல்லைகள், பெண் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தல் இவற்றையெல்லாம்
தவிர்த்து, ஆண் தொழிலாளி களைவிடக் குறைந்த ஊதியம். அதுமட்டுமல்லாமல், பெண்
தொழிலாளிகளுக்கு வேலை முடிந்த பின்னும் வீட்டு வேலைகள் வேறு.
சுதந்திரத்துக்கு முன்…
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் நடந்த தொழிலாளர் மாநாட்டுத்
தீர்மானத்தின்படி, பம்பாய் மாகாண அரசு மகப்பேறு ஆதாயச் சட்டம் ஒன்றை
1929-ல் கொண்டுவந்து, பேறுகாலத்தில் ஊதியத்துடன் ஓய்வு கொடுக்க
உத்தரவிட்டது. முதல் உலகப் போர் முடிந்தவுடன் ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்ட
சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தில் பிரிட்டிஷ் இந்தியாவும் ஒரு
உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது. அந்தச் சமயத்தில் பிரிட்டனிலிருந்து
முதன்முறையாக 1929-ம் வருடம், இந்தியாவில் தொழிலாளர் நிலைமைகளை ஆய்வுசெய்ய
அனுப்பப்பட்டதுதான் முதல் ராயல் லேபர் கமிஷன்.
ஆங்கில அரசின் தொழிலாளர் ஆணையம் இந்தியா முழுவதும் விசாரித்து
சாட்சியங்களைப் பதிவுசெய்தது. சாட்சி சொன்ன பம்பாய் தொழிலாளர் அலுவலகப்
பெண் ஆய்வாளர், “ஆண் தொழிலாளர்களைவிடப் பெண் தொழிலாளர்கள் மிகவும்
பாதிக்கப்படுகிறார்கள். ஆலை வேலை களுடன் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுவதால்
இரண்டு முறை இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வேலைப் பளுவினால் அவர்களது
உடல் பலம் குன்றுகிறது” என்று கூறினார்.
ஆணையம் முன் தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர், “ஆலைகளில் தற்போதைய வேலை
நேரங்கள் பெண்களுக்கு உகந்ததல்ல. காலை 5.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை
சுமார் 10½ மணி நேரம் வேலை வாங்குவது அவர்களது ஓய்வு நேரத்தைக்
குறைத்துவிடுகிறது. வேலைக்கு வருவதற்கு அவர்கள் 5 மணிக்கே தயாராகி,
குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஆலைக்கு வர வேண்டும். மீண்டும் வீடு
திரும்புவதற்கு இரவு 8.00 மணிகூட ஆகலாம்” என்று சொன்னார்.
பெண் தொழிலாளிகளோ வேலை நேரம் குறித்தும், மேற்பார்வையாளர்களால் தங்களுக்கு
இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும் முறையிட்டனர். அது மட்டு
மல்லாமல், மகப்பேறு காலங்களில் ஆலை முதலாளிகள் அவர்களுக்கு எவ்விதச்
சலுகையையும் காட்டியதில்லை. குறைந்த கூலியில் சுரண்டப்பட்ட பெண்
தொழிலாளிகள் பெற்ற குழந்தைகளும் சத்துணவும் பராமரிப்பும் இன்றிப்
பெருமளவில் இறக்க நேரிட்டது.
சுதந்திரத்துக்குப் பின்…
இதற்கிடையேதான் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் தன்னுடைய உறுப்பினர்
நாடுகளில் தொழிற்சாலைகளில் பெண்களை இரவுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தக்
கூடாது என்று தீர்மானித்தது. சுதந்திரத்துக்குப் பின் இயற்றப்பட்ட
அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டதுடன்,
அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டங்கள் இயற்றவும் வழிவகுக்கப்பட்டது. சம
வேலைக்குச் சம ஊதியம் என்பதும், மகப்பேறு கால நிவாரணம் வழங்குவதும் அரசின்
கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டன.
தொழிற்சாலைகள் சட்டம் 1948-ம் வருடம்தான் கொண்டு வரப்பட்டது. அந்தச்
சட்டத்தின் 66-வது பிரிவில், பெண்களைத் தொழிற்சாலைகளில் இரவு 10.00 மணி
முதல் காலை 5.00 மணி வரை எவ்வித வேலைகளிலும் உட்படுத்தக் கூடாதென்றும்,
தொழிற்சாலைகளுக்கு இவ்விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கூடாதென்றும்
ஆணையிடப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாததால்
தொலைபேசி இயக்குபவர்களாகவும், மருத்துவத் துறையில் செவிலியர்களாகவும்
பெருமளவில் பெண்கள் அமர்த்தப்பட்டு இரவுப் பணியும் வழங்கப்பட்டன. 1961-ம்
வருடம் கொண்டுவரப்பட்ட மகப்பேறு ஆதாயச் சட்டம், மகப்பேறு காலத்தில்
பெண்களுக்கு 12 வாரங்களுக்கு ஊதியத்துடன் சம்பளம் வழங்க உத்தரவிட்டது.
விமானப் பணிப்பெண்கள்
பெண் தொழிலாளர்களுக்கு அளிக்கும் சலுகைகளினால் ஏற்படும் புதிய
செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காகச் சில தனியார் நிறுவனங்கள்
திருமணமாகாத பெண்களையே வேலைக்கு அமர்த்தி, அவர்கள் திருமணம் செய்துகொண்டால்
வேலையிலிருந்து நிறுத்துவதற்கும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, சட்டப்படி
செல்லாது என்று தொழிலாளர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை 1965-ல் உச்ச
நீதிமன்றம் உறுதிசெய்தது. ஆனால், விமானப் பணிப்பெண்கள் அவர்களின் பயிற்சிக்
காலத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற விதியை உச்ச நீதிமன்றம்
ரத்துசெய்ய மறுத்தது வியப்பை அளிக்கிறது. அதேசமயம், விமானப் பணிப்பெண்கள்
ஓய்வு பெறும் வயது 45 என்பது தவறென்றும், அவர்களும் ஆண் பணியாளர்களைப்
போலவே 58 வயது வரை பணியாற்றலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதாகவும் தொழில் வளர்ச்சி
பாதிக்கப்படுவதாகவும் நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டுவந்ததால், மத்திய
அரசு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கஜேந்திர கட்கர் தலைமையில் தேசியத்
தொழிலாளர் ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் 1969-ம் ஆண்டு சமர்ப்பித்த
அறிக்கையில், தொழிலாளர் சட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்த பரிந்துரை களைச்
செய்ததோடு, பெண்களுக்கான இரவுப் பணி தடைச் சட்டப்பிரிவை ரத்துசெய்வதற்குப்
பரிந்துரைக்க மறுத்து விட்டது. 1989-ல் முன்னாள் அமைச்சர் ரவீந்திர வர்மா
தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது தேசியத் தொழிலாளர் ஆணையமும் இது தொடர்பாக
எவ்விதப் பரி்ந்துரையையும் செய்யவில்லை.
உலகமயத்துக்கு வரவேற்பு
இதற்கிடையேதான் மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார்மயக் கொள்கைகளைத்
தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு
நிறுவனங்களுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. அமெரிக்காவின்
கொல்லைப்புறமாக இந்தியா மாறியது. அமெரிக்காவுக்காக இரவில் பணியாற்றும்
மையங்கள் இங்கே உருவாக்கப்பட்டன. அவற்றில் பெருமளவுக்குப் பெண் ஊழியர்கள்
வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆயத்த ஆடை உற்பத்தி, நூற்பாலைகள், சிறப்புப்
பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகளிலும் பெருமளவுக்குப் பெண்கள் வேலைக்கு
அமர்த்தப்பட்டனர்.
பெண்களுக்கு இரவுப் பணிக்கான தடையிருப்பதால் அந்தத் தடையை நீக்கி, பிரிவு
66-ஐ ரத்துசெய்யவும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த சென்னை உயர்
நீதிமன்றம், பிரிவு 66 சட்டப்படி செல்லாது என்றும், ஆண்களுக்கும்
பெண்களுக்கும் சம உரிமை இருப்பதால், அவர்கள் மூன்று ஷிஃப்ட்டுகளிலும் வேலை
செய்யலாம் என்றும் அறிவித்தது. பெண் அமைப்புகள் சார்பாகத் தெரிவித்த
எதிர்ப்புகளைப் புறக்கணித்த நீதிமன்றம், பெண் ஊழியர்கள் மீதிருந்த ‘அதீத
கரிசனத்தால்’ சில வழிகாட்டுதல்களையும் வழங்கியது. இரவில் பாதுகாப்பு,
மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் இரவில் வேலை செய்ய ஏற்பாடு, பாலியல்
சீண்டல்கள் பற்றிய புகார்களை உடனடியாக விசாரித்தல், பெண்கள் நலனைக்
கவனிக்கத் தனி அதிகாரிகள், தனிப் போக்குவரத்து வசதிகள், மாதவிலக்கு
சமயத்தில் ஊதியத்துடன் கூடுதலான விடுமுறை என்றெல்லாம் அறிவித்தது.
சட்டப்பிரிவை ரத்துசெய்தது குறித்து மகிழ்ந்த நிர்வாகங்கள், தீர்ப்பில்
உள்ள வழிகாட்டுதல்கள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் தொழிலாளர்
சட்டத்தின் ஒரு பிரிவை ரத்துசெய்ததைப் பற்றிக் கவலைப்படாததோடு, அதற்கான
மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் மறந்துவிட்டது
அன்றைய காங்கிரஸ் அரசு.
மது விடுதிகளில் பெண்கள்
பெண்கள் இரவு ஷிஃப்டில் வேலை செய்வதைச் சட்டப்படித் தடைசெய்வதால்
பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிக்கப்படலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.
உச்ச நீதிமன்றமும் உலகமயமாக்கலைப் பற்றிய தனது கருத்துகளைப் பல
தீர்ப்புகளில் பதிந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தீர்ப்பில் (2005) மெட்ரோ
நகரங்களில் மது பானக் கடைகள் திறக்கப்படுவதைப் பற்றித் தனது
மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது. இதையொட்டிதான் டெல்லியில்
மதுக்கூடங்களில் இரவு நேரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்த
டெல்லி அரசின் உத்தரவு ரத்துசெய்யப்பட்டது (2007). மகாராஷ்டிர அரசு
மதுக்கூடங்களில் பெண்களின் நடனக் காட்சியைத் தடைசெய்த சட்டத்தையும் உச்ச
நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது (2013).
பெண்கள் இரவில் பணிக்குச் செல்லும்போது அவர்கள் பலவிதமாகப் பாலியல்
கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படு வது, சில நேரங்களில் கொலை செய்யப்படுவது
பற்றிய செய்திகள் தினசரிகளில் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் பிரச்சினை குறித்த
விவாதங்கள் முற்றுப்பெறாத நிலையில், அனைத்துத் தரப்பினரையும்
கலந்தாலோசிக்காமல், தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 66-ஐ ரத்துசெய்ய
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
“என்றைக்கு ஒரு பெண் நடுநிசியில் நகைகளுடன் சுதந்திரமாக நகரங்களில் உலவ
முடியுமோ அன்றுதான் இந்தியா உண்மையில் சுதந்திரம் பெற்றது என்று நான் கூறு
வேன்” என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் மகாத்மா காந்தியின் கூற்று
என்றைக்கு மெய்ப்பிக்கப்படுகிறதோ, அன்றைக்குத்தான் பெண்கள் இரவுப்
பணிக்குச் செல்லலாமா என்பதைப் பற்றி முடிவெடுக்க முடியும். மேலும்,
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கு இரவுப் பணி என்பது இரட்டைச் சுரண்டல்
என்பதே நிதர்சனம்.
புகழைக் குவிப்பதையே குறியாகக் கொண்ட இப்படிப்பட்ட மோடி வித்தைகள் எப்போது நிறுத்தப்படும் என்பதே கேள்வி.
- கே. சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.