வசிப்பதற்கு
வீடில்லாத
ஏழைகளுக்கு
நிலம்
ஒதுக்கி
வீடுகட்ட
அரசு
முன்வர
வேண்டும்.
கொள்கைவழிப்பட்ட
கோஷங்கள் என்பவை ஒரு முழு
வாக்கியத்தின் சிறு பகுதி மட்டுமே.
‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘அனைவருக்கும் வீடு’, ‘தூய்மை இந்தியா’
(ஸ்வச் பாரத்) ஆகியவை அவற்றில்
சில. இந்த கோஷங்கள் செயல்வடிவம்
பெற வேண்டும் என்றால், யாராவது இந்தியாவிலேயே தயாரிக்க
வேண்டும், நகரைச் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும், வீடுகளைக் கட்ட வேண்டும். சரி,
இவற்றையெல்லாம் யார் செய்வது?
வீடமைப்பு என்பது சவாலான வேலை.
நகர்ப்புறங்களில் மட்டும் தேவைப்படும் வீடுகளின்
எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. 2012-ல்
1,87,80,000 வீடுகள் தேவையாக இருந்தன. இப்படி
வீடு தேவைப்படுவோரில் 95% வறுமைக்கோட்டுக்கும் கீழே வசிப்பவர்கள். ஒரு
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.
2 லட்சத்துக்கும் கீழே இருந்தால், அந்தக்
குடும்பம் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்வதாகக் கருதப்படுகிறது.
நகர்ப்புற வறுமை ஒழிப்பு, வீடமைப்பு
அமைச்சகத்தின் கணக்குப்படி, வீடு கட்டுவதற்கு ஒரு
குடும்பத்தால் அதிகபட்சம் தனது ஆண்டு வருமானத்தைப்
போல 5 மடங்கைத்தான் செலவிட முடியும்.
அனைவருக்கும்
வீடு என்றால், ஒரு கோடியே 70 லட்சம்
வீடுகளைக் கட்ட வேண்டும். ஒவ்வொரு
வீட்டுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் தேவை.
இந்த வீடுகளைக் கட்டுவது யார்? ஒரு குடும்பம்
கவுரவமாக வாழ ரூ. 10 லட்சத்துக்குள்
நல்ல வீட்டை இதுவரை கட்டியிருப்பது
யார்? வீடுகளைக் கட்டுவோர் மூன்று பிரிவினர். அரசாங்கம்,
தனியார் வீடு கட்டுவோர், நகரங்களில்
வசிக்கும் ஏழைகள்.
அரசாங்கம் கட்டும் வீடுகளின் எண்ணிக்கை
கடந்த 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது. அப்படியும் வீடுகளுக்கான பற்றாக்குறை நீங்கவேயில்லை. ஓரளவுக்கு நல்ல நிர்வாகம் நடைபெறும்
கர்நாடகத்தில், மத்திய - மாநில அரசுகள் கடந்த
15 ஆண்டுகளில் 3,60,000 வீடுகளைக் கட்டியுள்ளன. கர்நாடகத்தில் இப்போது நகர்ப்புறங்களில் வீடுகளின்
பற்றாக்குறை 10 லட்சம். புதிதாக யாரும்
வீடு கேட்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும், இந்தப்
பற்றாக்குறையைத் தீர்க்க இன்னும் 30 ஆண்டுகள்
ஆகும்.
தனியார்களின்
நிலை எப்படி?
சமீப காலமாகத் தனியார்கள் கட்டித்தரும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அரசு உதவியில்லாமல் அவர்களால்
ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான செலவில் வீடுகளைக்
கட்டித்தர முடியாது. அரசு ஊக்கம் தந்தால்,
ரூ.5 லட்சம் முதல், ரூ.10
லட்சம் வரை மதிப்புள்ள வீடுகளைக்
கட்டித்தர முடியும். ஆனால், உண்மையில் வீடுகளைக்
கட்டித்தர ரூ.15 லட்சம் முதல்
ரூ.20 லட்சம் வரை தேவைப்படும்.
ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான செலவில் வீடுகள்
கட்டுவதைப் பெருநகர்ப்புற குடிசைப் பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
மும்பை, ஆமதாபாதில் இது சாத்தியமானது. ஆனால்,
பிற நகரங்களில்தான் வீடுகளின் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது.
எனவே, அரசுக்கு யாருடைய உதவியாவது அவசியம்
தேவை. அதற்கு அரசின் வீட்டுவசதிக்
கொள்கை மாற்றப்பட வேண்டும்.
அப்படியானால்,
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தக்கூடிய மற்றவர்கள் யார்? நகர்ப்புற ஏழைகளும்
சமூகங்களும்தான் இந்தப் பணியை மேற்கொள்ள
உதவக்கூடியவர்கள். 2012-ல் குடிசைப் பகுதிகள்
என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள
குடியிருப்புகளின் எண்ணிக்கை மட்டுமே 7.5 லட்சம். இவற்றைத் தவிர,
அதிகாரபூர்வமற்ற குடியிருப்புகளின் எண்ணிக்கை இதேபோல் இன்னொரு மடங்காக
இருக்கலாம். இப்போதுள்ள வீடுகளை எடுத்துக்கொண்டால், செங்கல்
செங்கல்லாக எடுத்துவைத்து அவற்றைக் கட்டியவர்கள்தான் அதில் வசிப்பவர்கள். 10 முதல்
15 ஆண்டுகளில் அரசு கட்டித்தரும் வீடுகளின்
எண்ணிக்கையைப் போல இவற்றின் எண்ணிக்கை
மூன்று மடங்காகும். இந்த வீடுகளுக்குக் கீழேயுள்ள
நிலம்தான் இவர்களுடையது இல்லை. ஆனால், அவர்களால்
உரிமை கோரப்படக்கூடியது. இந்த இடமும் வீடும்
ஏழைகளின் வருமான வரம்புக்கு உட்பட்டவை.
இந்தக் குடியிருப்புகளுக்கு சாலை, மின் இணைப்பு
வசதிகூடக் கிடைத்துவிடுகிறது. எனினும், எத்தனை ஆண்டுகளாகக் குடியிருந்தாலும்
எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற ஆபத்தை எதிர்நோக்கியே
இம்மக்கள் வாழ்கின்றனர். வீட்டு மனைக்கோ வீடுகளுக்கோ
அரசு நிர்ணயிக்கும் நியதிப்படி அங்கீகாரம் பெற முடியாதவையாக இருக்கலாம்.
ஆனால், நகர்ப்புறத்தின் அங்கமாகச் சேர்ந்துவிட்டவை. நகரங்களுக்கு வேலை தேடிவந்து குடியேறுவோர்
நகர்ப்புறவாசிகளாகிவிடுகின்றனர்.
இவர்கள்தான் நகர வளர்ச்சிக்கு, தொழில்
பெருக்கத்துக்கு, அடித்தளக்கட்டமைப்புப் பணிக்குத் தங்களுடைய உழைப்பை மூலதனமாக்குகிறவர்கள். நகரங்களுக்குத் தங்களின்
உற்பத்தித்திறனைக் குறைந்த கூலிக்கு அர்ப்பணிக்கிறவர்கள்.
ஆனால், வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் இவர்கள்.
ரூ. 15 லட்சத்துக்குள் வீடு
நகர்ப்புற வீடுகளைப் பொறுத்தவரை விநோதமான நிலையைப் பார்க்கிறோம். ஏழை மக்கள் தங்களுடைய
வருமானத்தில், தங்களுடைய தேவைகளுக்கேற்பச் சிறு வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள்.
அதற்குச் சட்டப் பாதுகாப்பு கிடையாது.
அதில் வசதிகளும் இல்லை. வசதியாக, சட்டபூர்வ
நிலத்தில் வீடுகளைக் கட்டித்தர தனியார் இருக்கின்றனர். ஆனால்,
அந்த வீடுகளை வாங்கும் சக்தி
மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. தனது நிலத்தில்
மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தரும் வேலையை அரசும் செய்கிறது.
ஆனால், அதனால் மக்களுடைய தேவைகளுக்கேற்பக்
குறைந்த செலவில், அதிக வீடுகளைக் கட்டித்
தர முடிவதில்லை.
வீடுகளைக் கட்டித்தரும் தனியார் நிறுவனங்கள், ரூ.
15 லட்சத்துக்குள் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்பதைச் சட்டபூர்வமாகக் கட்டாயமாக்க வேண்டும். குறைந்த வருவாய்ப் பிரிவு
மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தருவதை அரசு தொடர வேண்டும்.
ஏழைகளுக்கான வீடுகள் பற்றாக்குறையை அரசு
முயன்றால் தீர்க்கலாம். ஏழைகள் வீடுகளைக் கட்டியிருக்கும்
இடங்களிலேயே பலமாடி அடுக்ககங்களை ஏற்படுத்தி,
அவர்களுடைய வாங்கும் சக்திக்கேற்பச் சிக்கனமாகவும் உறுதியாகவும் கட்டிக்கொடுத்து, அவர்களுடைய வீடுகளுக்குச் சட்டபூர்வ அங்கீகாரத்தையும் வழங்கினால், ஒரு தலைமுறையின் வீட்டுத்
தேவையைப் பூர்த்திசெய்யலாம். குறைந்த செலவிலான வீடுகட்டும்
சாதனங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம்.
வழிகாட்டும்
வெளிநாடுகள்
தாய்லாந்து,
பிரேசில், எகிப்து போன்ற நாடுகளில்
இப்படிச் சாதித்திருக்கிறார்கள். கழிவறைகளுடன் கூடிய வீடுகள், குடிநீர்
இணைப்பு, கழிவு நீர்க்கால்வாய், மின்இணைப்பு,
சாலை வசதி, பூங்காக்கள், பள்ளிகள்,
மருத்துவமனை போன்றவற்றை அப்பகுதிகளில் ஏற்படுத்திவிட்டால், மக்களுடைய வாழ்க்கைத்தரமும் உயரும். இப்படி வீட்டுவசதிகளைச்
செய்வதன் மூலம், நகர்ப்புறப் பொருளாதாரம்
விரிவடைந்து வருவாயும் பண சுழற்சியும் பலமடங்காகும்.
இப்போது ஏழைகள் வசிக்கும் இடங்களையே
கையகப்படுத்தி அடுக்கு வீடுகளைக் கட்டித்
தருவதால், நிலத்துக்காக அரசு செலவுசெய்ய வேண்டியதில்லை.
ஏழைகளை குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றி, அந்த இடங்களைப் பணக்காரர்களுக்கு
அடுக்ககங்கள் கட்டி விற்றுப் பல
மடங்கு லாபம் சம்பாதிக்க வேண்டும்
என்ற எண்ணம் இல்லாமல் செயல்பட்டால்,
நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளை இல்லாமல் செய்துவிடலாம். அனைவருக்கும் வீடு என்ற லட்சியத்தையும்
எட்டிவிடலாம். ஒரு தலைமுறைக்கு வீடுகளைச்
சொந்தமாக்கிவிட்டால், அடுத்த தலைமுறை அதை
அப்படியே சுவீகரித்துக்கொள்ளும். வீடற்றவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும்.
- கவுதம்
பான், பெங்களூருவில் மக்கள் குடியிருப்புக்கான இந்தியக் கழகத்தைச் சேர்ந்தவர்.
© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.