Thursday, 13 August 2015

கொண்டாட்டம் யாருக்கு?




இன்னும் இரண்டு நாளில் நாம் விடுதலை பெற்றதற்கான 68-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடி மகிழப் போகிறோம். நாம் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தான். ஆனால், 56 சதவீத மன்னர்களுக்கு (மக்களுக்கு) சொந்த வீடுகூட இல்லை. குருவிகளுக்காவது தங்கிக்கொள்ள கூடுகள் இருக்கின்றன. மனித இனம் காட்டுமிராண்டிகளாக இருந்து, மனிதர் களாகப் பரிணமித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும்கூட இன்னும் வீடுகள் இல்லாமல் வீதிகளிலும், மரத் தடிகளிலும் வாழ்வதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. இந்நிலை யில் ‘இந்தியா ஏழைநாடு’ என சொல் லிக் கொள்ளவும் மறுக்கிறது. அத்துடன் வெட்கமே இல்லாமல் பணக்கார நாடு களில் ஒன்றாகக் காட்டிக் கொள்ளவும், வல்லரசு நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளவும் படாதபாடுபடுகிறது.
இப்போதே இந்தக் குடிமகன்களின் நிலை இதுவென்றால், எதிர்காலத்தில் பிறக்கப் போகும் தலைமுறை எப்படி வாழப் போகிறதோ?
ஒருபக்கம், நாள் முழுக்க உழைத்து நமக்கெல்லாம் உணவளித்து, சுகமாக வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுத்து, விரைந்து செல்ல சாலைகளை அமைத் துக் கொடுத்துவிட்டு வீதியோரம் படுத்துக் கொள்ளும் மக்களும்; உழைத்த பணத்தில் பாதி பணத்தை வீட்டு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத் தேவைகளை சுருக்கிக் கொண்டு தினம்தினம் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மிகுதியாக இருக்கும் நாடு இது.
மற்றொரு பக்கம், ஆட்களே இல்லாத ஆண்டுக்கொரு முறையோ, இரண்டு முறையோ சில நாட்கள் மட்டும் தங்கும் பல ஆயிரம் சதுர அடிகளைக் கொண்ட அரண்மனை வீடுகள்; இரண்டுபேர் மட்டுமே வாழ்வதற்கு பலமாடி வீடுகள்; ஆட்களே இல்லாமல் அடைத்து மூடி வைத்திருக்கும் வீடுகளும் இருக்கின்றன.
ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லாத நிலையில், ஒரே குடும்பத்துக்கு 10 வீடுகள் இங்கே வைத்துக்கொள்ளலாம். பணம் இருந்தால் எந்த வீட்டையும், எத்தனை வீட்டையும் வாங்கி பூட்டி வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ் நாளில் ஒரு சொந்தவீடு என்பதுதான் பெருங்கனவு. சிலருக்கு மட்டுமே பலப் போராட்டங்களுக்கு இடையில் அது நிறைவேறிவிடுகிறது. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கிற விலையும், நிம்மதி இழப்பும் வாழ் நாள் முழுக்க அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வாழ் நாளின் இறுதிவரை வாடகை வீட்டி லேயே வாழ்பவர்களின் நிலை எல்லா வற்றையும்விடக் கொடியது. பல லட்சங்கள் செலவழித்து இடம் வாங்கி, அதேபோல் இன்னும் பல லட்சங்கள் செலவழித்து வீட்டை உருவாக்கி, அந்த வீட்டை சில ஆயிரத்துக்கு வாடகைக்குத் தருபவர்களின் நிலை இன்னும் மோசம். சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்பட்டு ஒவ்வொரு நாளும் உறக்கத்தை இழந்தவர்களும் கணக்கிலடங்காதவர்கள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம்மவர்கள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து, உறவுகளைப் பிரிந்து சேமித்தப் பணத்தில் மற்றவர் களுக்குத் தெரிய வேண்டும் என்பதற் காகவே கொண்டுவந்த பணத்தையெல் லாம் செலவழித்து, மாடி வீட்டைக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.
எழுத்துப் பணிக்காக அண்மையில் இரண்டு வாரங்கள் கொடைக்கானல் சென்று தங்கினேன். அமைதியான இடம் தேடி அலைந்தபோது எல்லா திசைகளிலும், எல்லா மலைகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் வீடுகள். நகரமே பரவாயில்லை என்றிருந்தது. புதுமையாக இருக்க வேண்டும் என்பதற் காக பாறைகளை உடைத்து அதில் வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை அங்கேதான் பார்க்க முடிகிறது. எப்படிப்பட்ட மலைக்கும் சாலை கள் அமைத்து கார்களை வீட் டுக்கு முன் நிறுத்தும் வசதியை உருவாக்கிவிடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மலை களின் சரிவில் தொங்கிக் கொண்டி ருக்கின்றன. எங்கு திரும்பினாலும் வீடு கட்டும் பணிகளும், சாலை அமைக் கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றை அமைப்பதற்கான ஒவ்வொரு மூலப் பொருளும், கட்டுமான பொருட் களும் கீழேயிருந்துதான் கொடைக் கானலுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.
நாள்தோறும் வேளாண்மை செய்து கொண்டிருக்கும் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வீட்டுமனை களாக வேறொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. சிறுசிறு துண்டு நிலங்களை அதிக விலைக்குக் கொடுத்துவிட்டு அம்மண்ணின் மைந் தர்கள் ஆளுக்கொரு கார் வாங்கி ஊர்ச் சுற்றிவிட்டு ஆறே மாதத்தில் அனைத்தையையும் இழந்து, மதுக்கடை வாசலில் மதியிழந்து கிடக்கிறார்கள்.
தன்னைப் பண வசதி படைத்தவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவும், பேரப் பிள்ளைகள் மலைக் குளிர்ப் பிரதேசங்களில் தங்களுக்கு ஒரு வீடு இல்லையா என கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் இப்படிப்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன. நூற்றுக்குத் தொண் ணூத்தைந்து வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் கூட உரிமையாளர் தங்குவது இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை ஒரு வார காலம் வந்து குடும்பத்துடன் தங்கினாலே பெரிய காரியம். மற்ற நாட்களில் ஆண்டு முழுக்க வீடுகள் பூட்டியே கிடக்கின்றன.
இங்கே அரசியல் தொடர்புடைய, அதிகாரங்களில் இருக்கக்கூடிய, பிற துறைகளில் அங்கம் வகிக்கக்கூடிய அனைத்துப் பணக்காரர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் என அனைவருக் குமே அங்கே இடமும், வீடும் உண்டு.
நம் நாட்டின் பெருங்கொடைகளாக இருக்கிற இவைபோன்ற மலைப் பிரதேசங்களின் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் விதி மீறப் பட்டு ஒவ்வொரு மணி நேரமும் அழிந்துகொண்டே இருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வருமானம் வருகிறது என்பதற்காக இப்படிப்பட்ட இடங்கள் வணிகமயமாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, இயற்கைக்கு மாறாக அழிந்துகொண்டே இருக்கின்றன. கொடைக்கானலில் இருந்து 6 கி.மீ. தள்ளி யிருந்த சிற்றூரில்தான் நான் தங்கியிருந் தேன். ஆழ்துளை கிணறுகளை அமைக் கக்கூடாது என விதியிருந்தும் கிராம நிர்வாக அதிகாரிகளின் துணையுடன் நகர வளர்ச்சித் துறையின் ஒப்புதலுடன் நாள்தோறும் மலைகள் குடையப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வந்து தங்கப் போகும் செல்வந்தர்களுக்காக ஆழ் துளை கிணறு உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இயற்கையின் அழுகை யாருக்குமே தெரியவில்லை. யார் யாரெல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மேசையைத் தட்டித் தட்டி சட்டத்தை உருவாக்கினார்களோ… அவர்களா லேயே, அவர்களின் துணையுடனேயே கண்முன் இயற்கை அழிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே கோயம் புத்தூர் போலவே ஊட்டியும், திண்டுக்கல் போலவே கொடைக்கானலும், சேலம் போலவே ஏற்காடும் மாறிவிடும். காலம் முழுக்க உழைப்பவனுக்கு இங்கே வீடும் இல்லை; உழைத்து வாழ நிலமும் இல்லை. ஆனால், பணத்தை என்ன செய்வதென்று தெரியாதவர்களுக்கு கணக்கில்லாத வீடுகளும்; உல்லாசத் துக்காகப் பொழுதைக் கழிப்பவர் களுக்கு நூற்றுக்கணக்கில் ஏக்கர் தோட் டங்களும் உள்ள நாடுதான் நம் நாடு.
‘ஒருவர் பெயரில் ஒரு வீடுதான், அதற்குமேல் இருந்தால் அது அரசுக்கு சொந்தம்’ எனும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் வீடு கிடைக்க வழிவகை செய்யும் அன்றைக்குத்தான் இது சுதந்திர இந்தியா. அப்போதுதான் வீடு இல்லாத இம்மக்களுக்கும் சுதந்திரக் கொண்டாட்டம். அதுவரை, எம்மக்களுக்கு ‘ஆகஸ்ட் 15’ ஒரு விடுமுறை நாள்தான்!
- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com


நகரம் உங்களை விரும்பவில்லை





வசிப்பதற்கு வீடில்லாத ஏழைகளுக்கு நிலம் ஒதுக்கி வீடுகட்ட அரசு முன்வர வேண்டும்.
கொள்கைவழிப்பட்ட கோஷங்கள் என்பவை ஒரு முழு வாக்கியத்தின் சிறு பகுதி மட்டுமே. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘அனைவருக்கும் வீடு’, ‘தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) ஆகியவை அவற்றில் சில. இந்த கோஷங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்றால், யாராவது இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும், நகரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், வீடுகளைக் கட்ட வேண்டும். சரி, இவற்றையெல்லாம் யார் செய்வது?
வீடமைப்பு என்பது சவாலான வேலை. நகர்ப்புறங்களில் மட்டும் தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. 2012-ல் 1,87,80,000 வீடுகள் தேவையாக இருந்தன. இப்படி வீடு தேவைப்படுவோரில் 95% வறுமைக்கோட்டுக்கும் கீழே வசிப்பவர்கள். ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் கீழே இருந்தால், அந்தக் குடும்பம் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்வதாகக் கருதப்படுகிறது. நகர்ப்புற வறுமை ஒழிப்பு, வீடமைப்பு அமைச்சகத்தின் கணக்குப்படி, வீடு கட்டுவதற்கு ஒரு குடும்பத்தால் அதிகபட்சம் தனது ஆண்டு வருமானத்தைப் போல 5 மடங்கைத்தான் செலவிட முடியும்.
அனைவருக்கும் வீடு என்றால், ஒரு கோடியே 70 லட்சம் வீடுகளைக் கட்ட வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் தேவை.
இந்த வீடுகளைக் கட்டுவது யார்? ஒரு குடும்பம் கவுரவமாக வாழ ரூ. 10 லட்சத்துக்குள் நல்ல வீட்டை இதுவரை கட்டியிருப்பது யார்? வீடுகளைக் கட்டுவோர் மூன்று பிரிவினர். அரசாங்கம், தனியார் வீடு கட்டுவோர், நகரங்களில் வசிக்கும் ஏழைகள்.
அரசாங்கம் கட்டும் வீடுகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது. அப்படியும் வீடுகளுக்கான பற்றாக்குறை நீங்கவேயில்லை. ஓரளவுக்கு நல்ல நிர்வாகம் நடைபெறும் கர்நாடகத்தில், மத்திய - மாநில அரசுகள் கடந்த 15 ஆண்டுகளில் 3,60,000 வீடுகளைக் கட்டியுள்ளன. கர்நாடகத்தில் இப்போது நகர்ப்புறங்களில் வீடுகளின் பற்றாக்குறை 10 லட்சம். புதிதாக யாரும் வீடு கேட்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும், இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்க இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.
தனியார்களின் நிலை எப்படி?
சமீப காலமாகத் தனியார்கள் கட்டித்தரும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அரசு உதவியில்லாமல் அவர்களால் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான செலவில் வீடுகளைக் கட்டித்தர முடியாது. அரசு ஊக்கம் தந்தால், ரூ.5 லட்சம் முதல், ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகளைக் கட்டித்தர முடியும். ஆனால், உண்மையில் வீடுகளைக் கட்டித்தர ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை தேவைப்படும்.
ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான செலவில் வீடுகள் கட்டுவதைப் பெருநகர்ப்புற குடிசைப் பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும். மும்பை, ஆமதாபாதில் இது சாத்தியமானது. ஆனால், பிற நகரங்களில்தான் வீடுகளின் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. எனவே, அரசுக்கு யாருடைய உதவியாவது அவசியம் தேவை. அதற்கு அரசின் வீட்டுவசதிக் கொள்கை மாற்றப்பட வேண்டும்.
அப்படியானால், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தக்கூடிய மற்றவர்கள் யார்? நகர்ப்புற ஏழைகளும் சமூகங்களும்தான் இந்தப் பணியை மேற்கொள்ள உதவக்கூடியவர்கள். 2012-ல் குடிசைப் பகுதிகள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை மட்டுமே 7.5 லட்சம். இவற்றைத் தவிர, அதிகாரபூர்வமற்ற குடியிருப்புகளின் எண்ணிக்கை இதேபோல் இன்னொரு மடங்காக இருக்கலாம். இப்போதுள்ள வீடுகளை எடுத்துக்கொண்டால், செங்கல் செங்கல்லாக எடுத்துவைத்து அவற்றைக் கட்டியவர்கள்தான் அதில் வசிப்பவர்கள். 10 முதல் 15 ஆண்டுகளில் அரசு கட்டித்தரும் வீடுகளின் எண்ணிக்கையைப் போல இவற்றின் எண்ணிக்கை மூன்று மடங்காகும். இந்த வீடுகளுக்குக் கீழேயுள்ள நிலம்தான் இவர்களுடையது இல்லை. ஆனால், அவர்களால் உரிமை கோரப்படக்கூடியது. இந்த இடமும் வீடும் ஏழைகளின் வருமான வரம்புக்கு உட்பட்டவை. இந்தக் குடியிருப்புகளுக்கு சாலை, மின் இணைப்பு வசதிகூடக் கிடைத்துவிடுகிறது. எனினும், எத்தனை ஆண்டுகளாகக் குடியிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற ஆபத்தை எதிர்நோக்கியே இம்மக்கள் வாழ்கின்றனர். வீட்டு மனைக்கோ வீடுகளுக்கோ அரசு நிர்ணயிக்கும் நியதிப்படி அங்கீகாரம் பெற முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புறத்தின் அங்கமாகச் சேர்ந்துவிட்டவை. நகரங்களுக்கு வேலை தேடிவந்து குடியேறுவோர் நகர்ப்புறவாசிகளாகிவிடுகின்றனர். இவர்கள்தான் நகர வளர்ச்சிக்கு, தொழில் பெருக்கத்துக்கு, அடித்தளக்கட்டமைப்புப் பணிக்குத் தங்களுடைய உழைப்பை மூலதனமாக்குகிறவர்கள். நகரங்களுக்குத் தங்களின் உற்பத்தித்திறனைக் குறைந்த கூலிக்கு அர்ப்பணிக்கிறவர்கள். ஆனால், வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் இவர்கள்.
ரூ. 15 லட்சத்துக்குள் வீடு
நகர்ப்புற வீடுகளைப் பொறுத்தவரை விநோதமான நிலையைப் பார்க்கிறோம். ஏழை மக்கள் தங்களுடைய வருமானத்தில், தங்களுடைய தேவைகளுக்கேற்பச் சிறு வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். அதற்குச் சட்டப் பாதுகாப்பு கிடையாது. அதில் வசதிகளும் இல்லை. வசதியாக, சட்டபூர்வ நிலத்தில் வீடுகளைக் கட்டித்தர தனியார் இருக்கின்றனர். ஆனால், அந்த வீடுகளை வாங்கும் சக்தி மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. தனது நிலத்தில் மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தரும் வேலையை அரசும் செய்கிறது. ஆனால், அதனால் மக்களுடைய தேவைகளுக்கேற்பக் குறைந்த செலவில், அதிக வீடுகளைக் கட்டித் தர முடிவதில்லை.
வீடுகளைக் கட்டித்தரும் தனியார் நிறுவனங்கள், ரூ. 15 லட்சத்துக்குள் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்பதைச் சட்டபூர்வமாகக் கட்டாயமாக்க வேண்டும். குறைந்த வருவாய்ப் பிரிவு மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தருவதை அரசு தொடர வேண்டும். ஏழைகளுக்கான வீடுகள் பற்றாக்குறையை அரசு முயன்றால் தீர்க்கலாம். ஏழைகள் வீடுகளைக் கட்டியிருக்கும் இடங்களிலேயே பலமாடி அடுக்ககங்களை ஏற்படுத்தி, அவர்களுடைய வாங்கும் சக்திக்கேற்பச் சிக்கனமாகவும் உறுதியாகவும் கட்டிக்கொடுத்து, அவர்களுடைய வீடுகளுக்குச் சட்டபூர்வ அங்கீகாரத்தையும் வழங்கினால், ஒரு தலைமுறையின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்யலாம். குறைந்த செலவிலான வீடுகட்டும் சாதனங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம்.
வழிகாட்டும் வெளிநாடுகள்
தாய்லாந்து, பிரேசில், எகிப்து போன்ற நாடுகளில் இப்படிச் சாதித்திருக்கிறார்கள். கழிவறைகளுடன் கூடிய வீடுகள், குடிநீர் இணைப்பு, கழிவு நீர்க்கால்வாய், மின்இணைப்பு, சாலை வசதி, பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனை போன்றவற்றை அப்பகுதிகளில் ஏற்படுத்திவிட்டால், மக்களுடைய வாழ்க்கைத்தரமும் உயரும். இப்படி வீட்டுவசதிகளைச் செய்வதன் மூலம், நகர்ப்புறப் பொருளாதாரம் விரிவடைந்து வருவாயும் பண சுழற்சியும் பலமடங்காகும்.
இப்போது ஏழைகள் வசிக்கும் இடங்களையே கையகப்படுத்தி அடுக்கு வீடுகளைக் கட்டித் தருவதால், நிலத்துக்காக அரசு செலவுசெய்ய வேண்டியதில்லை. ஏழைகளை குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றி, அந்த இடங்களைப் பணக்காரர்களுக்கு அடுக்ககங்கள் கட்டி விற்றுப் பல மடங்கு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் செயல்பட்டால், நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளை இல்லாமல் செய்துவிடலாம். அனைவருக்கும் வீடு என்ற லட்சியத்தையும் எட்டிவிடலாம். ஒரு தலைமுறைக்கு வீடுகளைச் சொந்தமாக்கிவிட்டால், அடுத்த தலைமுறை அதை அப்படியே சுவீகரித்துக்கொள்ளும். வீடற்றவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும்.
- கவுதம் பான், பெங்களூருவில் மக்கள் குடியிருப்புக்கான இந்தியக் கழகத்தைச் சேர்ந்தவர்.
© ‘தி இந்துஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரி