- ‘தி காட்ஃபாதர்’ படத்தில் மார்லன் பிராண்டோ.லாஸ் ஏஞ்சலீஸ் நகர். 45-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா. கிளிண்ட் ஈஸ்ட்வுட், சார்லஸ் ஹெஸ்டன் உள்ளிட்ட ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் மாபெரும் திரை விழா இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாகத் தொடங்குகிறது. 1972-ல் வெளியாகி உடனடியாக ‘கிளாஸிக்’ அந்தஸ்தைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்த ‘தி காட்ஃபாதர்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைக்கின்றன, சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில்! சிறந்த நடிகருக்கான விருது, ‘தி காட்ஃபாதர்’ படத்தில் மிகப் பெரிய நிழல் உலக தாதாவாகவும் பொறுப்புள்ள குடும்பத் தலைவராகவும் தன் நடிப்பால் வாழ்ந்துகாட்டிய மார்லன் பிராண்டோவுக்கு. அவரது பெயரை அறிவிக்கிறார், நடிகர் ரோஜர் மூர் (ஜேம்ஸ் பாண்ட் புகழ்!). அனைவரின் கண்களும் மார்லன் பிராண்டோவைத் தேடுகின்றன. ஆனால், அவருக்குப் பதில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறுகிறார். குழப்பமும் ஆச்சரியமுமாக அரங்கம் நிசப்தமாகிறது.பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதாகப் புரிந்துகொண்டு, ஆஸ்கர் விருதை அவரிடம் நீட்டுகிறார் ரோஜர் மூர். கையை உயர்த்தி அதை மறுக்கும் சாஷீன், மைக் முன் சென்று நிற்கிறார். தனது கையில் இருக்கும் கடிதத்தைப் பார்வையாளர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். விருதை வாங்க மறுத்து பிராண்டோ எழுதிய கடிதம் அது.“இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!” என்கிறார். அவ்வளவாக அறியப்படாத சாஷீன் ‘நேஷனல் நேடிவ் அமெரிக்கன் அஃபர்பேடிவ் இமேஜ் கமிட்டி’ எனும் அமைப்பின் தலைவரும்கூட!பிராண்டோவின் தார்மிகக் கோபத்தைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்கிறார்கள். அவரது நீண்ட கடிதம் முழுமையாக வாசிக்கப்படும் அளவுக்கு நிகழ்ச்சியில் நேரம் இருக்கவில்லை. அதனால், அதற்கு அடுத்த நாள் அந்தக் கடிதம் நாளிதழ்களில் வெளியாகிறது.அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர் களை முற்றிலுமாக ஒடுக்கி தங்கள் ராஜ்ஜியத்தை நிறுவிய வெள்ளை இனத்தவர்கள், திரைப்படங்களிலும் அம்மக்களை மோசமான விதத்திலேயே சித்தரித்தனர். அத்துடன், செவ்விந்திய இன நடிகர்களுக்கு மிகச் சிறிய பாத்திரங்கள்தான் வழங்கப்பட்டன. இன்னும் மோசமாக, பிரதானமான வேடம் என்றால் செவ்விந்தியராக வெள்ளையின நடிகர்களே நடித்தனர். அத்துடன், சரியாக அதற்கு ஒரு மாதம் முன்புதான் தெற்கு டகோடா மாகாணத்தின் ‘வூண்டடு நீ’ பகுதியில் ஒக்லாலா இன நல்வாழ்வுத் துறைத் தலைவர் ரிச்சர்டு வில்ஸன் (இவரும் செவ்விந்தியர்தான்!) ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகப் போராடிய செவ்விந்திய இனப் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் மனதளவில் பெரிதும் காயம்பட்டிருந்தார் பிராண்டோ. அவரது அறச் சீற்றத்தின் பின்னணி இதுதான். சமூக அக்கறை நிறைந்த கலைஞரான மார்லன் பிராண்டோ கருப்பின மக்கள், யூதர்கள், பூர்வகுடிகளான செவ்விந்தியர் களுக்காகக் குரல் கொடுத்தவர். தனது வங்கிக் கணக்கை, செவ்விந்திய உரிமைப் போராளிகள் பயன்படுத்தும் விதத்தில் திறந்துவைத்தவர் என்று ஒரு தகவலும் உண்டு. அப்படிப்பட்டவருக்கு சக மனிதருக்கான மரியாதையைவிட ஆஸ்கர் விருதா முக்கியமாக இருக்கும்!
Friday, 27 March 2015
1973 மார்ச் 27: மார்லன் பிராண்டோ: ஆஸ்கரை வாங்க மறுத்த அற்புத மனிதர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.