Friday, 27 March 2015

ஏற்றத்தாழ்வு இயற்கையானதா?




உலக மகா பணக்காரர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்? அவர்களுடைய தேவைகள்குறித்து யார் சிந்திப்பார்கள்? வாழ்க்கை அவர்களுக்கு ‘எளிதாக’ இருக்கப்போவதில்லை; உலக மக்கள்தொகையில் 1% மட்டுமே இருக்கும் உலக மகா பணக்காரர்கள் அடுத்த ஆண்டு உலக மக்கள்தொகையில் 99% மக்கள் கொண்டிருப்பதைவிட அதிகச் சொத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட முறையில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு அவர்களுக்கு நிறையச் செலவு பிடிக்கிறது. ஏற்றத்தாழ்வு அதிகமாகிக்கொண்டே வருவதால் சமூகத்தில் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கிறது. இது அவர்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியக் கூடும்.
பெரும் செல்வம், பெரும் சிந்தனைகுறித்துப் பேச டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அரங்கின் மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ‘ஆக்ஸ்ஃபாம் சர்வதேசம்’ என்ற அமைப்பினர், உலகப் பெரும் பணக்காரர்களின் செல்வம் மட்டும் அதிகரிப்பதுகுறித்தும் ஏழை - பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போவதுகுறித்தும் கேள்விகள் எழுப்பினார்கள். “ஒரு சிலர் கைகளிலேயே செல்வம் குவியும் போக்கு, சர்வதேசப் பொருளாதாரச் சுணக்கத்துக்குப் பிறகு மேலும் அதிகரித்து விட்டது; அது வளர்ச்சிக்கும் நல்ல நிர்வாகத்துக்கும் உகந்ததல்ல” என்று ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் தலைமை இயக்குநர் வின்னி யான்யிமா எச்சரித்தார். ஏற்றத்தாழ்வு என்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, பெரும் பணக்காரர்களுக்கும் நல்லதல்ல. அதனால்தான், ஐ.எம்.எஃப். தலைவர் கிறிஸ்டைன் லகார்டே போன்ற வர்கள்கூட ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
ஏழைகளின் தலையெழுத்து அப்படியா?
‘எல்லா இடங்களிலும் காணப்படும் ஆழமான ஏற்றத்தாழ்வானது பார்ப்பவர்களுடைய கண்களில்தான் இருக்கிறது, உண்மையில் இல்லை’ என்று கூறுகிறார்கள். ஏழ்மைக்குக் காரணம் ஏழைகள்தானே தவிர, வேறு எதுவும் இல்லை என்றும், அவர்களுடைய நெறிபிறழ்வுதான் அவர்களுடைய ஏழ்மைநிலை என்றும் கூறுகிறார்கள். அதாவது, பெரும் பணக்காரர்கள் அந்த நிலையில் இருப்பதில் தவறில்லை, அது அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பரிசு என்றே கருதுகிறார்கள். உண்மையில், பெரும் பணக்காரர்களில் ஏராளமானோரிடம் குவியும் செல்வம் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த சம்பாத்தியம் அல்ல; ஏற்கெனவே பெருஞ்செல்வத்தைத் தனது மூதாதையர்களிடமிருந்து பெற்றவர்கள்தான் அவர்கள். அந்தச் செல்வம் மேலும் அதிகமாகிறது அவ்வளவுதான். அதற்குக் காரணம் அவர்களுடைய அபாரத் திறமையல்ல, இப்படி நடப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் பொருளாதார அமைப்புதான் காரணம்.
பொருளாதாரச் சூழலானது பருவநிலையைப் போல இயற்கையானது - கட்டுப்படுத்த முடியாத காலநிலை போன்றது - என்கிறார்கள். புவிவெப்பம் அதிகரிப்பதைப் போல பெரும் பணக்காரர்களுக்கும் வருவாய், லாபம், சொத்து மதிப்பு போன்றவை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. உண்மையில், இந்த நிலையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே தவிர, தவிர்க்க முடியாதவை அல்ல. இப்படிச் செல்வம் குவிய அனுமதிப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன, வேண்டுமென்றேதான் இப்படிச் செல்வம் குவிய அனுமதிக்கப்படுகிறது.
பணக்காரர்களின் துதிபாடிகள்
செல்வங்கள் ஏழைகளுக்கு மறுவிநியோகம் செய்யப்படுவதைப் பணக்காரர்கள் தடுத்துவிடுவார்கள். இடைத்தரகர்கள் மூலமும், தங்களுக்கு அணுக்கமான வரி ஏற்பாடுகள் மூலமும் அவர்கள் இதைச் சாதித்துக்கொள்கிறார்கள். ஆக, ஏற்றத்தாழ்வு என்பது தவிர்க்க முடியாதது அல்ல, அது வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. இப்படிப் பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைப் பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் ஏனென்று கேட்பதே இல்லை. ஏற்றத்தாழ்வும் பொருளாதார வளர்ச்சியின் துணை விளைவுதான் என்று கூறியும், பொருளாதார வீழ்ச்சியைக் கணித்து முன்கூட்டியே அரசுகளை எச்சரிக்கத் தவறியும்கூட இந்தப் பொருளாதார அறிஞர்கள் மீதான மதிப்பு மக்களிடையே குறையவில்லை.
ஒரு ஜனநாயகம் சிறப்பாகச் செயல்படத் தனியார் துறை நலனைவிடக் குடிமக்கள் நலன் அவசியம் என்கிறார் தாமஸ் பிக்கெட்டி. பணக்காரர்களுக்கே சாதகமாகப் பொருளாதார அறிஞர்கள் நடந்துகொள்ளும் இந்தச் சூழலில், பிக்கெட்டியின் சித்தாந்தம் புரட்சிகரமானதுதான். நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு உழைக்கும்போது செல்வம் ஒருசிலருடைய கைகளில் மட்டும்தான் குவியும் என்ற கட்டுப்பெட்டிகளின் வாதத்துக்குச் சவால் விடுகிறார் தாமஸ் பிக்கெட்டி.
உலக மக்கள்தொகையில் 1% கூட இல்லாத பெரும் பணக்காரர்கள், அவர்களுடைய அபரிமிதமான ஆற்றலாலும், சுய முயற்சியாலும்தான் அவற்றைப் பெற்றார்கள் என்பதை மக்கள் ஏற்கத் தயாரில்லை. பணக்காரர்கள் அனைவருமே ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் போனோ (இசைக் கலைஞர்) போன்றவர்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள்தான் என்பது வெறும் மாயை. எல்லா தொழிலதிபர்களும் கற்பனாசக்தி கொண்டவர்களும், தொழில் மேலாண்மைத் திறன் உள்ளவர்களும், இணையற்ற உழைப்பாளிகளும் அல்லர். உண்மை என்னவென்றால், பரம்பரையாகக் கைமாறி வரும் சொத்துகளுக்கு அதிபராக இருப்பதாலும், தங்களுடைய திறமைக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறாமல், தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை நிர்ணயித்துக்கொள்வதாலும் அவர்கள் கொழுத்துக்கொண்டே வருகிறார்கள். வாராக் கடன் களால் வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தாலும் ஆண்டுக்கு 10 லட்சம் டாலருக்கு மேல் தங்களுக்கு ஊதியம் நிர்ணயித்துக்கொள்ளும் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளோடு இதை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
செல்வாக்கு இல்லாதவர்களுக்கு எதிராக, செல்வாக்கு உள்ளவர்கள் பக்கம் எப்போதுமே சிலர் சேர்ந்துகொள்வார்கள். பொருளாதார அறிஞர்கள் இதில் தனித்துவம் பெற்றவர்கள். “இப்போதுள்ள அரசு - பொருளாதார முறைமை பணக்காரர்களுக்கு ஆதரவாக இல்லை” என்று உண்மைக்கு மாறாகக் கூறியதற்காகப் பேராசிரியர் கிரிகோரி மான்கிவின் வகுப்பை, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
இப்போதுள்ள சர்வதேச நிதி அமைப்புகளில் உள்ள மூத்த நிர்வாகிகளை மாற்றிவிட்டு, வேறு ஆட்களை நியமித்தாலும் ஒன்றும் மோசமாகிவிடாது. ஆனால், அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்னால் வாங்கிய சம்பளத்தைப் போல இரண்டு மடங்கு சம்பளத்தைத் தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்துக்கொள்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால், தங்களைத் தனிப் பிறவியாக நினைத்துக்கொள்ளட்டும், நாம் அப்படி நினைக்க வேண்டாம்.
முதலாளித்துவத்தின் புதிய அவதாரம்
‘புதிய தாரளமய’த்தைப் பற்றி நாம் பேசும்போது, இந்த ஏற்றத்தாழ்வு ஏன் பெரிதாகிக்கொண்டே போகிறது, 1% பணக்காரர்கள் எப்படி செல்வத்தின் பெரும் பங்கைத் தங்களுக்கு உரியதாக்கிக்கொள்ள முடிகிறது என்று பேச வேண்டியிருக்கிறது. நிதிச் சந்தைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொதுச் சேவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, நலவாழ்வுத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி, உழைக்கும் மக்களுடைய உரிமைகளைக் களையும் சட்டங்களை இயற்றி, தொழிற்சங்கங்களைப் பொது அமைதிக்கு எதிரியாகச் சித்தரித்துப் புதிய அவதாரம் எடுத்துள்ளது ‘முதலாளித்துவம்’ என்பதால்தான் இந்த ஏற்றத்தாழ்வு.
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆதரவாக, ‘வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’என்று தொடங்கிய மக்கள் இயக்கம், ஊக்கமின்றிச் சிதறிவிட்டது. பிரிட்டனில் மக்கள் மௌனமாக ஏற்றுக்கொண்ட அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐரோப்பாவில் - குறிப்பாக கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் - கிளர்ச்சிகள் தொடங்கியுள்ளன.
ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் வேண்டுகோள் சில பெரும் செல்வந்தர்களின் தர்ம சிந்தனையைத் தூண்டலாம், ஆனால் அது போதாது. பொருளாதாரத்தைச் சுணக்கத்திலிருந்து மீட்க நினைக்கும் அரசுகளின் முயற்சி தோல்வியில்தான் முடியும் - மக்களுடைய எதிர்ப்பால் அல்ல - மக்களுடைய வருவாய் குறைந்ததால், நுகர்வும் குறைவதால். உழைக்கும் வர்க்கம்குறித்து அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. ஆனால், மத்தியதர வர்க்கம் ஏமாற்றமடைந்துவருகிறது என்று தெரிந்தால் கவலைப்படுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டும் என்றால், அதைத் தவிர்க்க முடியாது என்ற உணர்வை முதலில் விலக்க வேண்டும். இது ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் இடத்தில் நாம் இல்லை. ஏழைகள் எப்போதுமே நம்மோடுதான் இருக்கின்றனர். இப்போது பெரும் பணக்காரர்களும் நம் பக்கம் வருகிறார்களோ? என்ன செய்வது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இந்த (பொருளாதார) பருவநிலையும் மாறக் கூடும்.

மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!









பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவர்களுக்கான அஞ்சலி!
இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு! பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
நீண்ட காலம் சிறையில் வாழ்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு. “தூக்கு தண்டனைக் கைதி களில் பலர், சிறையில் தூக்குமேடைக்குக் கொண்டு போவதற்கு முன்பே அதிர்ச்சியில் ஏறக்குறைய இறந்துவிடுவார்கள். உயிர் இல்லாத உடல்களைத் தூக்கு போடுவதுபோலத்தான் தூக்கு தண்டனைகள் நிறைவேறும்” என்கிறார்.
ஆனால், பகத் சிங்கின் சிறை வாழ்வும் உயிர்த் தியாகமும் தனித்தன்மையானவை.
புரட்சிவாதிகள் இறக்க வேண்டும்
பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்களது சிறை அறை களுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார், பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“புரட்சிவாதிகள் இறக்க வேண்டும்” என்று பதிலளித் தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடை யும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
“நான் விடுதலை அடைந்தால் அது பெரும் பிழையாக மாறிவிடும். நான் புன்னகையுடன் மரணத்தை எதிர்கொண்டால், இந்தியாவின் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளும் பகத் சிங்கைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உறுதியான சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தவுடன் புரட்சியின் வெற்றிநடையைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது” என்றார் அவர்.
‘எப்போது விடுதலை அடைவோம்’ என்ற ஏக்கத்துக்கும் முழுச் சம்மதத்துடன் உயிர்த் தியாகம் செய்யும் மனநிலைக்கும் என்ன இடைவெளி?
நாட்டுக்குச் செய்தி
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய அவரது வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா, பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக அவரைச் சந்தித்தார். செல்லுக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போலக் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யூஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தீர்களா என்று கேட்டார்.
புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார் பகத் சிங். “நாட்டுக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள். எதேச்சாதிகாரம் ஒழியட்டும்... புரட்சி ஓங்கட்டும்.”
“நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும்போல.”
“ஏதாவது ஆசை இருக்கிறதா?” என்று மேத்தா கேட்டார்.
“ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
மீண்டும் சந்திப்போம்!
பகத் சிங்கைச் சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுக்தேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு, அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர் கள் தூக்கிலிடப்படப்போவதாகத் தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்குப் பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்தப் புத்தகத்தின் ஒரு சில பக்கங் களையே படித்து முடித்திருந்தார். “ஒரு அத்தியாயத்தை முடிக்கவிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடையில் “யாரை முதலில் தூக்கிலிட வேண்டும்” என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுக்தேவ் தான் போக விரும்புவதாகச் சொன்னார்.
அவர்களது தைரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரி சடலங்களை அடையாளம் காட்டுமாறு தனக்கு இடப்பட்ட கட்டளையை ஏற்க மறுத்தார். அவர் அந்த இடத்திலேயே இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் அவருக்குக் கீழிருந்த வேறொரு அதிகாரி அந்த வேலையைச் செய்தார்.
நாயகர்களின் சிதைக்குக் காவல்
முதலில் இறுதிச் சடங்கை ராவி ஆற்றின் கரையில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நதியின் ஆழம் மிகவும் குறைவாக இருந்ததால் சட்லஜ் நதிக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. சட்லஜ் நதிக்கு அருகில் இருந்த பெரோஸ்பூர் நகருக்கு லாரி சென்றபோது லாரியில் சில பிரிட்டிஷ் படையினரும் இருந்தார்கள். சட்லஜ் நதிக்கரையில் சடலங்களுக்குத் தீ மூட்டப்பட்டவுடனேயே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
கிராமப்புறத்தில் குறிப்பாக கந்தா சிங் வாலா கிரா மத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், தீ ஜுவாலை களைப் பார்த்து அந்த இடத்துக்கு விரைந்தார்கள். அவர்களைப் பார்த்த படைவீரர்கள் சடலங்கள் பாதி எரிந்துகொண்டிருந்தபோதே விட்டுவிட்டு வண்டியில் ஏறி லாகூருக்கு விரைந்துவிட்டார்கள். அந்தத் தனிமையான இரவு முழுவதும் தங்கள் நாயகர்களின் உடல்களின் அருகில் அமர்ந்திருந்தார்கள் அந்தக் கிராமத்தினர்.
ஆயிரம் மடங்கு வணங்குவோம்
‘யங் இந்தியா’வில் காந்தி, ‘பகத் சிங்கும் தோழர்களும் தூக்கில் போடப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வீணாகிவிட்டன. அவர்கள், மாவீரர்கள். அவர்களை 1,000 மடங்கு வணங்குவோம். ஆனால், அவர்களைப் பின்பற்ற முடியாது. நமது மக்கள் நொறுங்கிப்போனவர்கள்; ஆதரவற்றவர்கள். வன்முறையை நாம் நமது வழியாகக் கொண்டால் நிலைமை மோசமாகிவிடும்’ எழுதினார்.
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக் கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா, வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதே போல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.
ஒருமுறை பகத் சிங், தன்னுடைய தாய் வித்யாவதி கவுருக்கு எழுதிய கடிதம், இந்தியாவைப் பற்றியும் உண்மையான சுதந்திரத்தைப் பற்றியும் பகத் சிங் கொண்டிருந்த எண்ணத்தைக் கச்சிதமாகச் சொல்லிவிடுகிறது:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரம் அடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”

லீ: சிங்கப்பூரின் சிற்பி!




சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!
உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!
லீயுடன் ஓர் உரையாடல்
உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ - சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் - நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.
மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் - இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”
மாறாத வடு
சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”
தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.
ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்
19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.
சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை - இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.
அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.
அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?
அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”
இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.
வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை
“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.
இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.
இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.
தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.
கல்லறையிலிருந்து வருவேன்
தன் மீதான விமர்சனங்கள் மீது - கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு - பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.
சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”
இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!
லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.
“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!
நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்' என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.
இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

நீரின்றித் தள்ளாடும் இந்தியா


 

அதிகரிக்கும் நீர்த் தேவை வரலாறு காணாத பஞ்சத்தில் இந்தியாவைத் தள்ளிவிடக் கூடும்.
இந்தியாவில் நீர் தொடர்புடைய சண்டைகள் கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடிப்பதற்குத் நீர் இல்லை என்ற அவல நிலையுடன், விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நீரை மற்ற துறைப் பயன்பாட்டுக்குத் திருடுவதும் தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நீருக்காக விவசாயிகள் கொலைகூடச் செய்யப்பட்டுள்ளார்கள்.
மத்திய நீர்வள அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஓர் ஆண்டில் பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு 11,21,000,00,00,000 கன மீட்டர். இவற்றில் 6,90,000,00,00,000 கன மீட்டர் நீரைப் பூமிக்கு மேற்பகுதியிலுள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் மூலமாகவும், 431,000,00,00,000 கன மீட்டர் நீரைப் பூமிக்கு அடியிலிருந்து கிணறுகள் மூலமாக எடுத்துப் பயன்படுத்த முடியும். ஆனால், தொடா்ந்து அதிகரித்துவரும் மக்கள்தொகையாலும், விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் வேகமான மாற்றங்களாலும், நீரின் தேவை பல மடங்கு உயா்ந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, மத்திய நீர்க் குழுமம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தத் நீர்த் தேவை, நம் நாட்டின் நீர் இருப்பைவிட அதிகரித்துவிடும். அப்படியென்றால், நம் நாட்டில் தற்போது நீர்ப் பஞ்சம் இல்லை என்று அர்த்தமில்லை.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பகுதிகளிலும் தற்போதே நீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது என்பதே உண்மை. எங்கெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்காக ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய 1,700 கன மீட்டர் நீரைவிட குறைவாக நீர் கிடைக்கிறதோ அங்கே நீர்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம். இதன்படி, இந்தியாவில் தற்போது ஏறக்குறைய 76% மக்கள் நீர்ப் பஞ்சத்தில் உள்ளார்கள். அதாவது, மத்திய நீர்க் குழுமத்தால் மொத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ள 20 பெரிய ஆற்றுப் படுகைகளில், வெறும் 9 படுகைகளில் வசிப்பவர்கள் மட்டும்தான் தற்போது நீர்ப் பஞ்சத்தைச் சந்திக்காமல் உள்ளார்கள் என்பது கசப்பான உண்மை. தமிழகத்தில் ஒரு ஆண்டில் சராசரியாக தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு வெறும் 750 கனமீட்டர் என்பது மேலும் அதிரவைக்கிறது.
துறைவாரியான நீர்ப் பயன்பாடு
இந்தியாவில் தற்போது மொத்தமாகப் பயன்படுத்தப் படும் 6,34,000,00,00,000 கன மீட்டர் நீரில், ஏறக்குறைய 85% விவசாயத்துக்கும், 7% வீட்டு உபயோகத்துக்கும், 2% தொழிற்சாலைகளுக்கும், மீதம் இதரப் பயன் பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், இந்தப் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் 2050 ஆண்டு வாக்கில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நீரின் மொத்தத் தேவை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. விவ சாயத் துறையில் நீரின் பயன்பாடு 85%-லிருந்து 74% ஆகக் குறைந்து, தொழில் மற்றும் இதரப் பயன்பாடு களின் அளவு பன்மடங்காக அதிகரிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீரின் தேவை ஒவ்வொரு துறையிலும் பன்மடங்கு அதிகரிக்கப்போகிறது என்பது தான் இந்தப் புள்ளிவிவரங்கள் தரும் கடுமையான எச்சரிக்கை.
மீள்வது எப்படி?
இரண்டு வகையான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, மற்றொன்று நீரைச் சேமித்துத் தட்டுப்பாட்டைப் போக்குவது. அணைகள் கட்டியும், புதிய குளங்களை வெட்டியும், ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தும் நீர் ஆதாரங்களின் கொள்ளளவை உயர்த்தலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், நீரின் கொள்ளளவை நினைத்தபோதெல்லாம் உயர்த்த எந்த மாநிலத்திலும் முடியாது. ஒரு நாட்டின் ‘மொத்த சாத்தியமான நீரின் அளவு’ வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். அதை மீறி அணைகள் கட்டுவதால், பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அது உகந்ததாக அமையாது.
நீரைச் சேமிக்க நடவடிக்கை வேண்டும்
குறைந்துவரும் ‘சாத்தியமான நீரள’வைக் கருத்தில் கொண்டு, நீரைச் சேமித்து நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டியது தற்போது அவசியம்.
ஏறக்குறைய 85% நீரைத் தற்போது பயன்படுத்திவரும் விவசாயத் துறையில், நீரைச் சேமிக்க பல்வேறு முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் பழங்கால பாசன முறையில் நீர் உபயோகத் திறன் வெறும் 35% - 40% என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீரை வாய்க்கால் மூலமாகப் பயிர்களுக்கு நிலம் முழுவதும் கொடுப்பதால் ஏறக்குறைய 60% நீர் பல்வேறு வழிகளில் வீணாக்கப்படுகிறது. ஆனால், புதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் முறைகளின் மூலமாகக் குறைந்த பட்சம் 50% நீரைச் சேமிக்க முடிவதோடு 40% - 60% வரை அதிக மகசூலும், குறைந்த சாகுபடிச் செலவும், மின்சார சேமிப்பும் சாத்தியமாகும்.
நுண்நீர்ப் பாசனத் திட்டம்
மத்திய வேளாண் அமைச்சகத்தால் 2004-ல் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் அமைக்கப்பட்ட ‘நுண்நீர்ப் பாசனத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற் கான குழு’வின் மதிப்பீட்டின்படி, குறைந்தது 85 பயிர்களை இந்த நீர்ப் பாசன முறையின் கீழ் இந்தியாவில் லாபத்துடன் பயிர்செய்ய முடியும் என்றும், ஏறக்குறைய 7 கோடி ஹெக்டேர்கள் சாத்தியமான பரப்பளவாக இந்தியாவில் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், தற்போது ஏறக்குறைய 40 லட்சம் ஹெக்டேர்கள் மட்டுமே இந்த நவீனப் பாசன முறையைப் பயன்படுத்திவருகின்றன. இந்தப் பரப்பளவை அதிகரித்து, நீரைச் சேமிக்க முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இந்தியாவில் தற்போதுள்ள மொத்த நீர்ப்பாசனப் பரப்பான 9.2 கோடி ஹெக்டேரில், நிலத்தடி நீர்ப் பாசனத்தின் பங்கு ஏறக்குறைய 65%. நிலத்தடி நீர் தற்போது கட்டுப்பாடில்லாமல் உறிஞ்சப்படுவதால் நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளும் அதனால் ஏற்படுகிறது. மத்திய அரசின் ‘நிலத்தடி நீர் வாரிய’த்தின் அறிக்கைகள் இதைக் கோடிட்டுக் காட்டியுள்ளன. ஆகவே, நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, திறனற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தினால், நீரைச் சேமித்து நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.
வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால், மழையளவு குறைந்து தற்போது நிலவிவரும் நீர்ப் பஞ்சம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுமார் 125 கோடி மக்கள்தொகையுடன், விவசாயத்தைப் பெரிதும் நம்பியுள்ள நம் நாட்டில், அதிகரித்துவரும் நீர்த் தட்டுப்பாடு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை பெரிய அளவில் ஏற்படுத்திவிடும். நீர்த் தட்டுப்பாடு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வறுமையை அதிகரித்துவிடும். நீர் ஆதாரத்தைப் பெருக்கி நீர்த் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. நீர்த் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்குக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே, போர்க்கால அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை கள் மூலமாக முடிந்த அளவில் நீரைச் சேமித்து வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
- அ. நாராயணமூர்த்தி, துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: narayana64@gmail.com

1973 மார்ச் 27: மார்லன் பிராண்டோ: ஆஸ்கரை வாங்க மறுத்த அற்புத மனிதர்!


  • ‘தி காட்ஃபாதர்’ படத்தில் மார்லன் பிராண்டோ.
    தி காட்ஃபாதர்’ படத்தில் மார்லன் பிராண்டோ. 
    லாஸ் ஏஞ்சலீஸ் நகர். 45-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா. கிளிண்ட் ஈஸ்ட்வுட், சார்லஸ் ஹெஸ்டன் உள்ளிட்ட ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் மாபெரும் திரை விழா இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாகத் தொடங்குகிறது. 1972-ல் வெளியாகி உடனடியாக ‘கிளாஸிக்’ அந்தஸ்தைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்த ‘தி காட்ஃபாதர்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைக்கின்றன, சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில்! சிறந்த நடிகருக்கான விருது, ‘தி காட்ஃபாதர்’ படத்தில் மிகப் பெரிய நிழல் உலக தாதாவாகவும் பொறுப்புள்ள குடும்பத் தலைவராகவும் தன் நடிப்பால் வாழ்ந்துகாட்டிய மார்லன் பிராண்டோவுக்கு. அவரது பெயரை அறிவிக்கிறார், நடிகர் ரோஜர் மூர் (ஜேம்ஸ் பாண்ட் புகழ்!). அனைவரின் கண்களும் மார்லன் பிராண்டோவைத் தேடுகின்றன. ஆனால், அவருக்குப் பதில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறுகிறார். குழப்பமும் ஆச்சரியமுமாக அரங்கம் நிசப்தமாகிறது.
    பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதாகப் புரிந்துகொண்டு, ஆஸ்கர் விருதை அவரிடம் நீட்டுகிறார் ரோஜர் மூர். கையை உயர்த்தி அதை மறுக்கும் சாஷீன், மைக் முன் சென்று நிற்கிறார். தனது கையில் இருக்கும் கடிதத்தைப் பார்வையாளர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். விருதை வாங்க மறுத்து பிராண்டோ எழுதிய கடிதம் அது.
    “இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!” என்கிறார். அவ்வளவாக அறியப்படாத சாஷீன் ‘நேஷனல் நேடிவ் அமெரிக்கன் அஃபர்பேடிவ் இமேஜ் கமிட்டி’ எனும் அமைப்பின் தலைவரும்கூட!
    பிராண்டோவின் தார்மிகக் கோபத்தைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்கிறார்கள். அவரது நீண்ட கடிதம் முழுமையாக வாசிக்கப்படும் அளவுக்கு நிகழ்ச்சியில் நேரம் இருக்கவில்லை. அதனால், அதற்கு அடுத்த நாள் அந்தக் கடிதம் நாளிதழ்களில் வெளியாகிறது.
    அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர் களை முற்றிலுமாக ஒடுக்கி தங்கள் ராஜ்ஜியத்தை நிறுவிய வெள்ளை இனத்தவர்கள், திரைப்படங்களிலும் அம்மக்களை மோசமான விதத்திலேயே சித்தரித்தனர். அத்துடன், செவ்விந்திய இன நடிகர்களுக்கு மிகச் சிறிய பாத்திரங்கள்தான் வழங்கப்பட்டன. இன்னும் மோசமாக, பிரதானமான வேடம் என்றால் செவ்விந்தியராக வெள்ளையின நடிகர்களே நடித்தனர். அத்துடன், சரியாக அதற்கு ஒரு மாதம் முன்புதான் தெற்கு டகோடா மாகாணத்தின் ‘வூண்டடு நீ’ பகுதியில் ஒக்லாலா இன நல்வாழ்வுத் துறைத் தலைவர் ரிச்சர்டு வில்ஸன் (இவரும் செவ்விந்தியர்தான்!) ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகப் போராடிய செவ்விந்திய இனப் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் மனதளவில் பெரிதும் காயம்பட்டிருந்தார் பிராண்டோ. அவரது அறச் சீற்றத்தின் பின்னணி இதுதான். சமூக அக்கறை நிறைந்த கலைஞரான மார்லன் பிராண்டோ கருப்பின மக்கள், யூதர்கள், பூர்வகுடிகளான செவ்விந்தியர் களுக்காகக் குரல் கொடுத்தவர். தனது வங்கிக் கணக்கை, செவ்விந்திய உரிமைப் போராளிகள் பயன்படுத்தும் விதத்தில் திறந்துவைத்தவர் என்று ஒரு தகவலும் உண்டு. அப்படிப்பட்டவருக்கு சக மனிதருக்கான மரியாதையைவிட ஆஸ்கர் விருதா முக்கியமாக இருக்கும்!
     

Monday, 16 March 2015

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!


ணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான். ராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே கணேஷைவிட மிக மிக அதிக மதிப்புடையவையாக இருந்தது. இத்தனைக்கும் படிப்பு விஷயத்தில் கணேஷைவிட ராஜன் பெரிய புத்திசாலியல்ல. பிறகு எப்படி ராஜன் இந்த அளவுக்கு முன்னேறினான்?
அடுத்தடுத்த சந்திப்பில் ராஜனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான் கணேஷ். ‘‘பெரிய அற்புதம் எதையும் நான் செய்துவிடவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது தான். நம் எல்லோருக்கும் ஒருநாளில்  கிடைக்கும் 24 மணி நேரமானது பொன் போன்றது. அதைக் கண்ணும் கருத்துமாக நிர்வகித்து, ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல், நமது வேலைகளைத் திறனோடு முடித்தால், நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைவது நிச்சயம். வெற்றியாளர்களால் செய்ய முடிந்த விஷயத்தை; இன்னொருவரால் செய்ய முடிவதில்லை என்றால், அதற்கு மிக முக்கிய மூலகாரணம் வெற்றியாளர் களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருப்பதே’’ என்று சொன்னான்.
வீடு திரும்பும் வழியில் ராஜன் சொன்னதை நினைத்துப் பார்த்தான் கணேஷ். கல்லூரிப் படிப்பு  முடிந்ததும், நல்ல வேலையில் இருந்தாலும், அந்த வேலையை நன்றாகச் செய்து, உயர்பதவி களை அடைய வேண்டும் என்கிற லட்சியம் எதுவும் இல்லாமல், காதல், சினிமா, பீச் எனப் பலநாட்கள் அலைந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான் கணேஷ். இந்த கணேஷைப்போல, நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக...
1 உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவைகளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.
2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.
3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.
4 தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.
5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.
6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் ‘do not disturb’ என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.
இதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமான தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.
7 சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டிபோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.
8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.
9  நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை ‘டிக்’ செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.
10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.
முடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங்களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்

Tuesday, 10 March 2015

சொல்லத் தோணுது : கருகும் பிஞ்சுகள்!




ஊரைவிட்டுத் துரத்துவதற்காக வும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதை சிறப்பாக செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னா ளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்கு, கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.
பள்ளிக்கூடம்திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டு களுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடினேன். நான் கூர்ந்து கவனிக்கக்கூடிய முகங்கள் அவர்களுடையதாகவே இருக்கின்றன.
அந்தப் படத்துக்குப் பின் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எத்த னையோ பள்ளிக்கூடங்கள் முன்னாள் மாணவர்களால் மீண்டும் உயிர்பெற்றன. அத்துடன் இளமைக் கால நட்புகளும் உயிர்பெற்றன. தாய் தந்தையர், உற வினர் போலவே தன்னை உருவாக்கிய பள்ளியையும் நன்றிப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள்.
எனது படைப்பின் பாத்திரங்கள் போலவே, அண்மையில் நான் பங் கேற்ற பாலக்கோடு அரசினர் பள்ளியின் மாணவர்கள் சந்திப்பும் இருந்தது.
இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து அந்த அரசுப் பள்ளியில் கல்விப் பயின்று, அஸ்ஸாம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றும் முன்னாள் மாணவரையும் அந்த நிகழ்வுக்கு அழைத் திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் காலடி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் நடந்தபோது அவருக் குள் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், மாணவர் களுடனான உரையாடலும், அவரின் ஆசிரியர்களைப் பற்றிய பின்னோக்கிய நினைவுகளும் மீண்டும்பள்ளிக்கூடம்திரைப்படத்துக்கே என்னை அழைத்துச் சென்றன.
தன்னை மீட்டெடுத்து சமூகத்தில் தன்னை அடையாளப்படுத்தக் காரண மாக இருந்த அந்தப் பள்ளிக்கு, அவர் நன்றி செலுத்திய விதம் என் கண்களைக் கலங்கச் செய்தது. ‘பள்ளிக்கூடம்படத் தின் உச்சக்கட்டக் காட்சியில் கதை நாய கன் பேசுவது போலவே அது இருந்தது.
அதன்பின் நான் அந்த மாணவர்களு டன் நெருக்கமாக உரையாடினேன். ஏற்கெனவே எல்லா தளத்திலும் முன் னேறிய கல்வி பெற்ற குடும்பத்தில் இருந்து ஒருவனை உருவாக்குவது எளிது என்பதையும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் பொருளா தாரத்தில் பின்தங்கிய படிப்பறிவற்ற குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறை கல்வியைப் பெறுகிற, ஏழைக் குழந் தையை வளர்த்தெடுப்பதில் இருக்கின்ற தடைகளையும் எடுத்துக்கூறினேன்.
இப்படிப்பட்டவர்கள் அனைவருமே தஞ்சம் அடையும் புகலிடம் அரசுப் பள்ளிதான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? குரோட்டன் செடிகள் போல ஒவ் வொரு நாளும் பார்த்து நீர் ஊற்றி பராமரித்து வளர்ப்பது போல வளரும் பிள்ளைகளுக்கு இடையில்தான் இவர் களும் வளர்கிறார்கள்.
எப்போது மழை வரும்? எப்போது புயல் வரும்எனத் தெரியாது. நீரில் லாதக் காட்டில் உயிரைப் பிடித்துக் கொண்டு நாலு இலைகள் துளிர்விட்டால் திடீரென ஆடு, மாடு கடித்துவிடும். மீண் டும் துளிரெடுத்து ஆளாகி மரமாககாட்டுச் செடிகள் படும் போராட்டங் களைப் போன்றதுதான் அரசுப் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளின் நிலை!
அரசாங்கம் நடத்துகின்ற அரசுப் பள்ளிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளை களோ, மற்ற எந்த அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளோ படிப்பதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளி களுக்குத்தான் அனுப்புகிறார்கள்.
எதற்கெல்லாமோ சட்டம் இயற்றுபவர் கள் மனது வைத்தால் அடுத்த ஆண்டி லேயே இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற முடியாதா? அந்தச் சிந்தனைக் கூட இல்லாமல் காரணம் தேடி, இப்படிப்பட்ட பள்ளிகளை வரிசையாக மூடிக்கொண்டு வர எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் எங்குப் பார்த் தாலும் மலைகள், வேளாண்மை நிலங் கள், பயிர் செய்யத்தான் ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றா லும், இந்த மாவட்டத்து மக்கள்தான் கூலியாட்களாக இருக்கிறார்கள்.
கர்நாடகத்துக்கும், ஆந்திராவுக்கும் பஞ்சம் பிழைக்க ஓடிய இவர்கள், ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊர்த் திருவிழாவுக்குத் திரும்புகிறார்கள். மீதியிருக்கிற மக்களையும் விட்டு வைக் காத மதுக் கடைகள் இல்லாத இடங்களே இல்லை. நூறு குடிசைகள் இருந்தாலும் அங்கும் பெயர்ப் பலகையோடு அரசு மதுக்கடை கடமையாற்றிக் கொண்டிருக் கிறது. குடிப்பதற்கு நீண்டதூரம் நடந்து போக வேண்டியது இல்லை. குழந்தைகளைப் படிக்க வைக்கவும், மருத்துவமனைக்கும்தான் நீண்ட தூரம் நடந்து போக வேண்டும்.
விபத்துக்களின் இறப்பானாலும், மதுக் குடியால் இறப்பவர்களானாலும், ஊட்டச் சத்து இல்லாமல் நோய் நொடி யில் இறப்பவர்களானாலும் இந்தப் பகுதி மக்களுக்குத்தான் முதல் இடம்.
மாணவர்களுடனான எனது உரை யாடல்களுக்கு இடையே அவர்களின் எதிர்காலம் பற்றியும் கேட்டேன். எல்லோரும்கலெக்டராக வேண்டும், ..எஸ் படிக்க வேண்டும்எனச் சொன்னார்கள். அதன் பின்தான் டாக்டர் கள், இன்ஜினீயர்கள் மற்ற படிப்பெல் லாம். ‘யார் யாரெல்லாம் தாத்தா, அப்பா செய்த விவசாயத் தொழிலைச் செய்யப் போகிறீர்கள்எனக் கேட்டேன். தயங்கித் தயங்கி மூன்று பேர் மட்டும் அதுவும் என் விருப்பத்துக்காக கையை உயர்த்தினார்கள். எல்லோருமே ஊரை விட்டு ஓடிவிட்டால் பின் யார்தான் மக் களுக்கு உணவைத் தருவது எனக் கேட் டேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை.
அதே போல் அன்போடு மேலும், ‘மறைக்காமல் சொல்லுங்கள், யார் யாரின் பெற்றோர் மதுக் குடிப்பவர்கள்எனக் கேட்டேன். ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக பாதி பேருக்கு மேல் கையை உயர்த்தினார்கள். பின், ‘யார், யாருக்கு பெற்றோர்கள் இல்லை, எதனால் இல்லைஎனவும் கேட்டேன். அந்த நேரத்தில் அந்த முகங்களைப் பார்த்தவர்களுக்குத்தான் உண்மை நிலைப் புரியும். கால் பகுதிக்கு மேல் தலை கவிழ்ந்து கை உயர்த்தியவர்களின் கண்களில் இருந்து முட்டியக் கண் ணீரை மறைக்க பெரும்பாடுபட்ட அந்த பிஞ்சுகளின் முகங்கள் கண்களிலேயே நிற்கிறது. அருகில் இருந்த தலைமை யாசிரியரும், முன்னாள் ஐஏஎஸ் மாணவரும் பதைத்துப் போனார்கள். குடியினால் அப்பா இறந்த பின் பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை இதில் அடங்காது.
இலவசப் புத்தகம், புத்தகப் பை, மிதி வண்டி, மடிக்கணினி கொடுப்பவர்கள் ஒருநாள் இந்த மாணவர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். அதன் பிறகாவது அவர்களுக்குத் தர வேண்டியது எது என்பது புரியும். ‘எல்லாவற்றையும் கொடுத்து அப்பாவை உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களேஉங்களுக்கு அப்பா வேண்டுமா? இந்த இலவசங்கள் வேண்டுமாஎனக் கேட்டேன். ‘அப்பாதான் வேண்டும்என உரக்கச் சொன்னார்கள்.
எதையும் காதில் போட்டுக்கொள்ளாத வர்களிடத்தில்உயிருடன் இருக்கிற எங்கள் அப்பாக்களின் உயிராவது எங்களுக்கு வேண்டும். உடனே மதுக் கடைகளை மூடுங்கள். அப்போதுதான் நாங்கள் தேர்வு எழுதுவோம்…’ என ஒவ்வொரு மாணவரும் சொன் னால்தான் இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கிடைக்கும் போலிருக்கிறது. அதுவரை யார் யாருக்கு என்ன கொடுக்கலாம் எனப் பட்டியல் தயா ரித்துக் கொடுப்பவர்கள், தயவு செய்து அப்பாவை இழந்தவர்களின் பட்டியலையும் அரசிடம் தயாரித்துக் கொடுங்கள். அதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்கட்டும்!
- சொல்லத் தோணுது