Tuesday, 1 March 2016

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!







வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.






தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- சுயேச்சை முதல்வர் சுப்பராயன்!

சுப்பராயன்














சுப்பராயன்
மதுவிலக்கு என்பது மக்களின் மனதுக்கு நெருக்கமான பிரச்சினை. அதைக் காங்கிரஸ் கையி லெடுத்துப் போராடினால் மக்கள் செல்வாக்கு பெருகும் என்றும் அதைக்கொண்டு நீதிக்கட்சியை வீழ்த்தலாம் என்றும் கணித்தார் ராஜாஜி. அதை சத்தியமூர்த்தி போன்றோர் ஏற்க மறுத்த போது, “மதுவிலக்கு கோரிப் போராடினால், வரும் தேர்த லில் உங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்” என்றார். ஆகட்டும் என்று தலையசைத்தனர் சுயராஜ் ஜியக் கட்சியினர்.
நீதிக்கட்சி அரசும் பல முற்போக்கான காரியங் களைச் செய்திருந்தது. முக்கியமாக, மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதியை நீக்கியது, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழக உருவாக்கம், 5 முதல் 12 வயது குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி போன்றவற்றைச் சொல்லலாம்.
ஆனால் தேர்தல் என்று வந்தபோது சுயராஜ்ஜியக் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே கடும் போட்டி. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியின்படி சுயராஜ்ஜியக் கட்சிக்காக ராஜாஜி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது நீதிக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டியவர், பெரியார். காங்கிரஸ் தொண்டராக இருந்த அவர், வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் இப்போது நீதிக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.
வழக்கம்போல,
“தேர்தலில்
வென்றால் ஆட்சியமைக்க மாட்டோம்” என்று பிரச்சாரம் செய்தது சுயராஜ்ஜியக் கட்சி. மாறாக,
“தேர்தலில் வென்று ஆட்சி நிர்வாகத்தைச் சிறப்பாகத் தொடர்வோம்” என்றது நீதிக்கட்சி. ஆனால் மக்களின் தீர்ப்போ நீதிக்கட்சிக்கு எதிராக வந்தது. வெற்றிபெற்ற 98 பேரில் 41 பேர் சுயராஜ்ஜியக் கட்சியினர். இருமுறை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சிக்கு வெறும் 21 இடங்களே கிடைத்தன. மிச்சமுள்ள 36 பேரும் சுயேச்சைகள்.
சென்னை மாகாணம் சந்தித்த விநோதமான தேர்தல் முடிவு அது. தனிப்பெருங்கட்சியான சுயராஜ்ஜியக் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். பிரிட்டிஷாரின் ஆட்சிமுறைக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதே எங்கள் முதன்மைப் பணி என்று சொல்லிவிட்டது சுயராஜ்ஜியக் கட்சி. பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்பது நீதிக்கட்சியின் நிலைப்பாடு.
இந்த நிலையில் அரசியல் காட்சி மாற்றங்கள் நடந்தன. நீதிக்கட்சி சார்பில் வெற்றிபெற்ற பி.சுப்பராயன் திடீரென அதிலிருந்து விலகினார். சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்தார். அதன் பின்னணியில் சுயராஜ்ஜியக் கட்சி இருந்தது. 4 டிசம்பர் 1926 அன்று சென்னை மாகாணத்தில் சுயேச்சை முதல்வர் பி.சுப்பராயன் தலைமையில் புதிய சுயேச்சை அமைச்சரவை உருவானது. அதில் அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் இடம்பெற்றனர். இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர்கள்.
தேர்தல் அரசியலை எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் கட்சி, அடுத்த தேர்தலிலாவது நேரடியாகக் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்தது!
ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?




வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.
இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும்

2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும்.

3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.

4. மெனுவில் whatsapp web என்ற தேர்வுக்குச் செல்லவும்.

5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR Code) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)

6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்



ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி



அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம்.
ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்ஆப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.
ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 98765*****)
அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்ஆப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்ஆப் பக்கம் உருவாகிவிடும்.
ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ்ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.




Wednesday, 13 January 2016

அடுத்த முதல்வர் சகாயம்?





அடுத்த முதல்வர் சகாயம்?








தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தின் குறியீடே சகாயத்தை நோக்கி நீளும் அழைப்புகள்
எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றதும்!
சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை.
நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘அரசியலில் சகாயம்எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது.
அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?”
அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?
அற வறட்சி
இந்த வெள்ளத்திலும் இடையறாது ஓடிக்கொண்டிருந்த வர்களில் ஒருவரான அரசு பஸ் ஓட்டுநர் ஜெயராமனைச் சமீபத்தில் பேட்டியெடுத்தேன். “நீங்கள் எப்படி இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றபோது ஜெயராமன் சொன்னார். “சின்ன வயசுல எங்க ஊர்ல பஸ் ஓட்டுன ஒரு அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரு ரொம்ப நல்லவரு. யாராவது உடம்புக்கு முடியலைன்னு சொன்னா, அவங்க நிறுத்தச் சொல்ற எடத்துல வண்டியை நிறுத்துவாரு. பாதி வழியில பெரியவங்க கை நீட்டினாலும் வண்டியை நிறுத்தி ஏத்திக்குவாரு. பஸ்ல நாங்க பள்ளிக்கூட பசங்க நின்னுக்கிட்டு வந்தோம்னா, கூப்பிட்டு அவருக்குப் பின்னாடி உக்காரச் சொல்லுவாரு. அந்த அண்ணனப் பாக்கும்போதெல்லாம் நம்மளும் இப்படி வண்டி ஓட்டணும்னு தோணிக்கிட்டே இருக்கும்; அப்படியே ஓடியாந்துட்டேன்.”
நாமெல்லாம் அப்படித்தானே வளர்ந்தோம்! ஒரு நல்ல ஆசிரியரைப் பார்த்து நாமும் ஆசிரியராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து நாமும் நல்ல மருத்துவராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல காவல் அதிகாரியைப் பார்த்து நாமும் காவல் அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பது! பல தலைமுறைகள் அப்படித்தானே உருவாயின? இன்றைய பிள்ளைகள் எடுத்த எடுப்பில் கண்ணுக்குத் தெரியாத லட்ச ரூபாய் வேலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களில் ஒன்று, நேர்மையான முன்னுதாரணங்களையும் விழுமியங்களைச் சுமந்த மனிதர்களையும் நாம் அழித்தொழித்ததும்கூட!
லோகநாதன் ஞாபகங்கள்
மொழிபெயர்ப்பாளரும் பேராசிரியருமான .வி.தனுஷ்கோடியின் தந்தை .வி.லோகநாதன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். “அப்பா சொத்துன்னு எதுவும் எங்களுக்கு மிஞ்சலை. ரொம்ப சாதாரணப் பின்னணியிலதான் வாழ்ந்தோம். ஆனா, காமராஜரே அப்பாவை உயர்வா பேசுவார். ஒருமுறை காமராஜருக்கு மிக நெருக்கமான ஒருத்தர், தன் நெருக்கத்தைச் சொல்லி ஒரு காரியத்துக்காக அப்பாகிட்ட வந்திருக்கார். ‘விதிகளுக்குப் புறம்பா எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் முதல்வர்கிட்டேயே வேணும்னாலும் சொல்லிக்குங்கஎன்று வழக்கம்போலச் சொல்லி அனுப்பியிருக்கார் அப்பா. விஷயம் காமராஜர் காதுக்குப் போயிருக்கு. ‘நான் நேர்மையானவன்னு சொல்லித்தானே என்னை இங்கெ உக்கார வெச்சிருக்கீங்க? எனக்குக் கீழ இருக்கவங்களையும் அப்படி நேர்மையானங்களாக இருக்க விட்டாத்தானே நிர்வாகம் நேர்மையா நடக்கும்? எனக்கு நெருக்கமானவங்களே அதைக் கெடுக்கலாமா? கலெக்டரு அப்படித்தான் இருப்பாரு. நீங்க செஞ்சதுதான் தப்பு!’ன்னு சொல்லி அந்த நண்பரைத் திருப்பி அனுப்பிச்சுட்டாராம் காமராஜர். நேர்மை தவறி எத்தனை வீடு வாங்கி வெச்சிட்டுப்போயிருந்தாலும், இந்தப் பெருமையை எங்களுக்கு எங்கப்பாவால கொடுத்திருக்க முடியாதுஎன்று அடிக்கடி சொல்வார் தனுஷ்கோடி.
ஏன் கூப்பிடுகிறார்கள்?
அன்றைக்கெல்லாம் யாரும் லோகநாதனை அரசியலுக்கு வா என்று கூப்பிட்டிருக்க மாட்டார்கள். களத்தில் காமராஜர்களும் கக்கன்களும் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிகளை அரசியலுக்குக் கூப்பிட மக்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது! இப்போது வீதிக்கு வந்து சகாயத்தைக் கூப்பிடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? இன்றைய அரசியல் களத்தில் நிற்கும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்; உங்களுடைய நம்பிக்கைத் துரோகங்களால் அவர்கள் வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அரசியலில் சூனியம் நிலைகொண்டிருக்கிறது என்று அர்த்தம்!
சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான பசியே தமிழக மக்களை இப்போது வாட்டியெடுக்கிறது. முடிந்தால் அந்தப் பசியைப் போக்க மக்களுக்கு ஏற்ற செயல்திட்டங்களோடும் நல்ல தலைமையோடும் மக்களைச் சந்தியுங்கள்; இல்லையேல் வாயை மூடிக்கொள்ளுங்கள்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in