Saturday, 30 May 2015

நின்று கொல்லும் புகை: சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்- மே31


சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் மே 31
உலகில் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது புகைபிடிக்கும் பழக்கம். புகைபிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்கள் காலம்காலமாக உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, புகைபிடிப்பவர்கள் விடும் புகையைச் சுவாசித்துப் பாதிப்புகளுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் புகைபிடிக்க ஆரம்பித்திருப்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருமாறிவருகிறது. புகைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், நோய்கள், தடுப்பு நடவடிக்கைகளை உலகச் சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது:
புகையின் தாக்கம்
# சிகரெட் மட்டும்தான் என்றில்லை, பீடி, பான் பொருட்கள், புகையிலை மெல்லுதல் என எல்லா வகை புகையிலைப் பொருட்களும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு வாங்கிக் கொண் டிருக்கின்றன. 

# ஒவ்வோர் ஆண்டும் புகை யிலை பழக்கங்கள் 60 லட்சம் பேரைக் கொல்கின்றன. இதில் 50 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள். 6 லட்சம் பேர் புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பதால் மட்டும் இறப்பவர்கள். 

# புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். 

# புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழை, வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள். 

# உலகளவில் 10 சதவீத வருவாய் புகையிலை சார்ந்த பொருட்கள் மூலம்தான் கிடைக்கிறது. பொருளாதார ரீதியில் இது நல்லதாகப் பார்க்கப்பட்டாலும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், தேவையற்ற மருத்துவச் செலவு, மனித உழைப்பு வீணடிப்பு ஆகியவற்றையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
இந்தியாவில்...
# இந்தியாவில் 53 சதவீதம் ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

# புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம்.

# 2020-ம் ஆண்டில் இந் தியாவில் 13 சதவீத இறப்புகளுக்குப் புகையிலைப் பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 
பாதிப்புகள்

# புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் கொடிய தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை.

# புகைபிடிப்பவர்களில் பாதி பேரின் மரணத்துக்கு நச்சு கலந்த புகையைச் சுவாசிப்பதுதான் முதன்மைக் காரணம்.

# எந்த வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக் குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.

# ஒவ்வோர் ஆண்டும் 1.50 கோடிப் பெண்கள் புகையிலை பயன்பாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கிறார்கள்.

# சிகரெட்டில் நோயை உண்டாக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. தொடர்ந்து புகைப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படலாம். மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காச நோய், மலட்டுத் தன்மை என மற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
 
பக்கத்தில் நின்றால்

# புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிக்கும் வயதுவந்தோரில் பலரும் கடுமையான சுவாச நோய்களுக்கும், இதய நோய், நுரையீரல் புற்று நோய்க்கும் ஆளாகிறார்கள். புகையைச் சுவாசிக்கும் சிசுக்களுக்குத் திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் எடை குறைந்த குழந்தையைப் பிரசவிக்கிறார்கள்.

# வீட்டில் புகைபிடிப்பதால் 40 சதவீதக் குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் 31 சதவீதம் பேர் இறக்கவும் செய்கிறார்கள்.

# புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிக்கும் குழந்தைகளுக்குக் காது தொற்று, ஆஸ்துமா பாதிப்பு, சுவாசக் கோளாறுகள் உண்டாகின்றன.

# பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களுக்குப் புகையிலைப் புகைதான் முதன்மைக் காரணம்.

# வீட்டில் யாராவது ஒருவர் புகைப்பதால் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத மற்றவர், ஒன்றரை முதல் இரண்டு மடங்கு புகையைச் சுவாசிக்கிறார்.
 
எப்படித் தடுக்கலாம்

# புகைபிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் உலகளவில் 94 சதவீத மக்களைப் பாதுகாக்கவில்லை

# புகைபிடிக்கத் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டாலும்கூடப் புகைபிடிப்பவர்கள் விடும் புகையிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க முடிவதில்லை. 100 சதவீதப் புகையில்லாப் பகுதியை உருவாக்கினால் மட்டுமே, புகை பரவுவதைத் தடுக்க முடியும்.

# புகைபிடிப்பதைத் தடுக்கப் புகையிலை மீதான வரிகளை அதிகரிப்பது முக்கியமான வழி.

# சிறுவர்களுக்குப் புகையிலை சார்ந்த பொருட்களை விற்க முழுமையான தடை விதிக்க வேண்டும்.

# புகைபிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். மன நல, மருத்துவ உதவிகள் இரண்டும் தேவை. புகைபிடிப்பதை ஒருவர் கைவிட்டால், அதன் பிறகு மீண்டும் அந்தப் பழக்கத்தை மீண்டும் தொடராமல் இருக்கத் தொடர் கவுன்சலிங்கும் அவசியம்.
 
பெண்களும் புகையும்

# ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் அதிக அளவில் புகைபிடிக்கிறார்கள் என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு. உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 100 கோடிப் பேரில் 20 கோடிப் பேர் பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு.

# பெண்கள் புகைபிடிப்பது சில நாடுகளில் வேகமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு காரணங்களுக்காகப் பதின்ம வயதுப் பெண்களும் புகைபிடிக்கிறார்கள்.

# பெண்கள்தான் என்றில்லை, 12-15 வயது சிறுவர்களின் கையில்கூட இன்றைக்குச் சிகரெட்டைப் பார்க்க முடிகிறது. இதனால் புகையிலை சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

Wednesday, 6 May 2015

நம் கல்வி... நம் உரிமை!- அஜிதனும் அரசுப் பள்ளியும்



அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், “பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை” என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.
நான் ஐந்தாம் வகுப்பு வரை அடம்பிடித்தவன். “நீ இப்படி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்படி ஸ்கூலுக்குப் போவான்..?” என்று என் மனைவி கேட்பாள். அதற்காகப் பிள்ளையைக் கொஞ்சாமல் விட முடியுமா? ஆக, அஜிதன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.
நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால், எழுத்துகள் மிகமிகச் சிக்கலாக இருக்கும். சுந்தர ராமசாமியிடம் ஒருமுறை இதைப் பற்றிச் சொன்னேன். “நீங்க டீச் பண்ணாதீங்கோ… நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு, அவன் மேல ஏறி உட்கார டிரை பண்ணுவீங்க… வேணுமின்னா, ட்யூஷன் வைங்க… அப்டியே விட்டுருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது. குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…” என்றார்.
அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால், டியூஷன் ஆசிரியர்கள் என்னைத் தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். “இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமா சொல்லித் தாறேன் சார்…” என்பார்கள். அவன் எப்படியோ ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டான். அது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்ற பாவனை. இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதைத் தொடர ஆரம்பித்தான். ஆனால், இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.
இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னார், “சார், பையனுக்கு எதாவது டிரீட்மென்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேன்னு சொல்லப்படாது.”
அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் “என்ன மேடம்?” என்றேன்.
“அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்….”
நான் கடும் சினத்துடன், “சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கையக் கெடுத்திராதீங்க… அவனுக்கு ஒண்ணு மில்லை. கைமாறி எழுதவெச்சதுனால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்… அதுக்காக?” என்றேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
“நாங்க சொல்லியாச்சு... இனி எங்க மேலே பழி சொல்லக் கூடாது.”
“ ஏய்… இனி இந்தப் பேச்சை யாராவது எடுத்தீங்கன்னா வெட்டிப் போட்ருவேன்…” என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.
என் மனைவியிடம் சொன்னபோது அவள் கதறிவிட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்கப் புத்தகங்கள். இரவுபகலாகப் புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்த வயதிலேயே நான் அவனுக்குப் பல நூறு கதைகளைச் சொல்லியிருந்தேன். கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மந்த புத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளரத்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.
சில நாட்கள் கழித்துத்தான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால், அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸும் ‘கெட்ட மிஸ்’தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். எல்லாப் பாடங்களிலும் அவனுக்குச் சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால், அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை.
ஆனால், மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். அவன் ‘சிவகாமியின் சபத’த்தை வாசிக்கும்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். ஆசிரியையோ அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தார். சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல் நூல்களை இரவுபகலாகப் படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் அ.க.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான். வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.
முதல் பிரச்சினை எழுத்துதான். பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாகப் பள்ளி மேலேயே கடும் துவேஷம்.
அதன் பின் நகர்கோவிலில் புகழ்பெற்ற கிறிஸ்துவப் பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே, என் வாழ்க்கையையும். அனேகமாகத் தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படி பள்ளிக்குச் சென்றால், மணிக் கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். அப்புறம், கொலைக் குற்றவாளியை நடத்துவதுபோல நடத்துவார்கள். இதுநாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால், அது அந்தப் பள்ளியில்தான்.
அஜிதனை, அவன் ஒரு உதவாக்கரை என்றும் முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். அடித்திருக்கிறேன். புத்தகங்களைக் கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்துக் கண்ணீருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன்.
அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணெயைப் போட்டு நீவிவிட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். மனைவி அவ்வழியாகச் சென்றாள். என்னிடம் “ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிட மாட்டேனா?” என்றாள்.
“இதுல போட்டிருக்கு… உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்பப் பிடிக்குமோ அவங்கதான் போட்டுவிடணும்னு…” என்றேன்.
சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுதுகொண்டிருந்தான்.
“என்னடா?” என்றேன்.
குறுகி அமர்ந்து அழுதவன், “உனக்கு நெஜமாவே என்னைய ரொம்பப் பிடிக்குமா?” என்றான். “என்னடா… இது முட்டாள்தனமா கேட்டுட்டு… அப்பாவுக்கு உலகத்துலயே உன்னைத்தாண்டா ரொம்பப் பிடிக்கும்” என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். “நான் நெனைச்சேன், உனக்கு என்னைப் பிடிக்கல்லேன்னு… நீ பெரிய ஆளு… எனக்கு ஒண்ணுமே தெரியல. அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க. நான் இனிமே ஸ்கூலுக்குப் போகல. என்னைய ஓட்டலிலே சேத்துவிடு. நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்.”
அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு மனைவி வாயில் வந்திருக்கிறது - படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக்கொண்டேன். “நீ மக்குனு யாருடா சொன்னா?” என்றேன்.
“எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க. அம்மாவும் சொன்னாங்க. நீகூடத்தான் சொன்னே...” என்றவனை அணைத்துக்கொண்டு, “நீ மக்குன்னா உலகத்துல யாருமே புத்திசாலி இல்லடா” என்றேன்.
அன்று அவனை வெளியே கூட்டிப்போய்ப் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னைப் பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்குக் கணக்கு கொஞ்சம் கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூடத் தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.
“எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்படி இல்லை. நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி. இன்னும் மூணு மாசம். இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து உன்னைக் கூட்டிட்டுப்போய் கவர்மென்ட் ஸ்கூலிலே சேர்க்கிறேன். இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க… போருமா?”
மறு வருடம் அரசுப் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் பலரும் எதிர்த்தார்கள். ஆனால், அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல், பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருப்பார்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள், பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி, ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட, அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன், இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன் களுடன் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு விடுவான். புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். பழைய பள்ளியில் விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம். அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து, சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே அங்கே நட்பு இருந்தது.
இந்த அரசுப் பள்ளியில் எல்லாமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிடத் தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தைய நாள் இரவில் கூப்பிட்டுப் பொங்கும் பேரார்வத்துடன் சிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார்தான் அஜிதனின் உயிர் நண்பன். ஒருவனின் பையிலிருந்து பணத்தைப் பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். “எங்க வீட்ல அம்மை தேங்காத் தொவையலையே போட்டுக் கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோழியா குடுத்தனுப்பச் சொல்லு’’ என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு.
அவனுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவனிடம் நான் எதை வேண்டுமானாலும் பேசலாம். “தோளுக்கு மேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா” என்பான். “ஆமாடா. அது ரைட்டுதான்..” என்றால், “அப்றம் சொல்லு மச்சி…” என்பான். அதுதான் அவன் பாணி.
ஒரு கட்டத்தில் அஜிதனுக்குப் புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம், சு.தியடோர் பாஸ்கரன். இரண்டாம் காரணம், அ.முத்துலிங்கம். அது தீயாகப் பற்றிக்கொள்ள அதிலேயே நாட்கள் நகர்ந்தன. பறவைகளைப் பார்ப்பது ‘லைஃப் லிஸ்ட்’ தயாரிப்பது, அதைப் பற்றிய நூல்களைச் சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக்கொண்டது. ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக்கொண்டிருந்தன.
“எவ்ளவு பேரு…” என்றேன். “அந்த லிஸ்ட்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்” என்றான். அவனிடம் ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ, எப்படியோ தீர்மானமாகிறது. ஆனால், இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.
அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இடையில் படி என்று சொல்வதும் இல்லை. அவன் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முடிந்தன. 460/500. 92%. கணிதத்தில் 99%. அறிவியலில் 97%. “அப்பா உன் மூஞ்சியில கரிய அள்ளிப் பூசிட்டேன்ல?” என்றான் சிரித்தபடி. “ஆமாடா” என்றேன். அஜிதன் சொன்னான்: “சும்மா ஜாலியாச் சொன்னேன்பா… உனக்காகத்தானே நான் படிச்சதே!”
(ஜெயமோகன் எழுதிய ‘தேர்வு’ கட்டுரையின் சுருக்கம் இது. அஜிதன் இப்போது உதவி இயக்குநர். ‘ஓ காதல் கண்மணி’யில் பணியாற்றியிருக்கிறார். )
- ஜெயமோகன்,

நம் கல்வி... நம் உரிமை!- ஜெயமோகன்களாலேயே அஜிதன்கள் உருவாகிறார்கள்



 


வணக்கம் ஜெயமோகன். என்னை உங்களுக்குத் தெரியாது. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் உங்கள் ரசிகன் அல்ல. சொல்லப் போனால், உங்களை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது; காரணம் ஏதும் இல்லை.
நவீனப் புதினங்கள் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், உங்களைப் பற்றியும், உங்கள் சகாக்களான சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் தொடர்பாகவெல்லாம் ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்படும் விஷயங்களையெல்லாம்கூட இதுவரை ஆர்வம் இல்லாமல் தான் கடந்து சென்றிருக்கிறேன்.
நீங்கள் எத்தனையோ ஆயிரம் பக்கங்களை எழுதியிருக்கிறீர்கள். ஆனால், உங்களின் ஆயிரத்துச் சொச்சம் வார்த்தைகளை மட்டுமே கொண்ட ஒரு கட்டுரை என்னுள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது ஜெயமோகன்.
ஏப்ரல் 27 காலை 7 மணி இருக்கும். நண்பரின் வீட்டுக்கு ஒரு துக்கத்துக்காகச் சென்றிருந்தேன். யதேச்சையாக, அங்கு இருந்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் புரட்டியபோது, உங்கள் கட்டுரை படிக்க நேர்ந்தது. நிச்சயம் அந்தக் கட்டுரையை உங்களுக்காகப் படிக்கவில்லை. அரசுப் பள்ளி என்ற வார்த்தை மட்டும் தலைப்பில் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் அந்தக் கட்டுரையைப் படித்திருக்க மாட்டேன். அரசுப் பள்ளி எனும் வார்த்தை ஏற்படுத்திய ஈர்ப்பால், கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன்.
முழுக் கட்டுரையும் படித்து முடிப்பதற்குள் இரண்டு முறை அழுதுவிட்டேன். இருந்தது ஒரு துக்க வீட்டில், இறந்தவருடன் எனக்கு நேரடி அறிமுகம் கிடையாது. அவருடைய மகன் நல்ல நண்பர். அறிமுகமே இல்லாத ஒருவருக்காக நான் ஏன் அழுகிறேன் என்று நினைத்து துக்க வீட்டில் இருந்த பலரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாக உணர்ந்தேன்.
உங்கள் மகன் அஜிதனுடன், உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு புள்ளியிலும் என்னைத் தொடர்புபடுத்திக்கொண்டேன் ஜெயமோகன்.
நான் படித்தது ஓர் அரசு உதவி பெறும் பள்ளியான தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில். தஞ்சையில் நான் படித்த காலகட்டத்தில் அது ஒரு சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதே மிகவும் கஷ்டம். ஆனால், அந்தப் பள்ளியின் துரதிர்ஷ்டம் எனக்கு அங்கு இடம் கிடைத்தது. பத்தாவது வரை அங்குதான் படித்தேன். படித்தேன் அல்ல; சென்று வந்தேன் என்பதே சரி.
மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே ஒரு மாணவனின் திறமைகளை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நான் ஒரு உருப்படாத மாணவன்.
எதற்குமே லாயக்கில்லாதவனோ நான்?
உங்களைப் போல என் தந்தையும் பிஎஸ்என்எல் ஊழியர் தான். எழுத்தாளர்தான். அப்போது மாலை நேரங்களில் அந்தப் பகுதிக் குழந்தைகளுக்கு வீட்டின் மேல் தளத்தில் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சிவப்பு மை அடித்தல்களால் நிறைந்த என் தேர்வு விடைத்தாளை அவரிடம் நீட்டுகிறேன். எல்லா விடைத்தாள்களிலும் கையெழுத்திட்டுவிட்டுச் சொன்னார்: “இனி, நீ மேல் தளத்துக்கு வராதே. உன் மதிப்பெண்களைப் பார்த்தால் மற்ற குழந்தைகளும் கெட்டுவிடும்!”
நான் முழுவதுமாக உடைந்துபோனேன். அன்றிரவு என் படுக்கைத் தலையணைகள் கண்ணீரால் ஈரமாயின. அந்தப் பருவ மாணவர்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட்டும் அப்போது எனக்கு விளையாட வராது. அவர்களும் என்னைக் கிண்டல் செய்த காலம் அது. எனக்கே என் மீது கடும் அவநம்பிக்கை ஏற்பட்டது. “எதற்குமே லாயக்கில்லாதவனோ நான்?”
தந்தையின் மாயாஜாலம்!
ஆனால், ஒரு மாயாஜாலம்போல என் தந்தை அனைத்தையும் அடுத்த நாளே சரிசெய்தார். அப்போது, தஞ்சை ராஜராஜன் திரையரங்கில் ‘முதல்வன்’ படம் திரை யரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல விஸ்தாரமான அந்தத் திரையரங்குக்கு என்னை அழைத்துச் சென்றார். டிக்கெட் எடுத்துவிட்டு, திரையரங்கு வளாகத்தில் இருந்த செயற்கை நீர் ஊற்று அருகே உட்காருகிறோம்.
“டேய்... உனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்டா... மார்க்கெல்லாம் சும்மா. அதுக்கும் அறிவுக்கும் சம்பந்த மில்லை. எது செஞ்சாலும் முழு ஈடுபாட்டோட செய்... அவ்ளோதான். உனக்கு என்னவாகணும்னு ஆசை ?” என்கிறார்.
“தெரியலை பாப்பு” (அப்பாவை அப்படித்தான் அழைப்பேன்).
“சரி, உனக்கு எதுல ஈடுபாடு வருதோ, அப்ப சொல்லு. அதுல உன்னை நீ வளர்த்துக்கிறதுக்கு என்னால முடிஞ்சதை யெல்லாம் பண்றேன்.”
எனக்கு அந்தக் காலகட்டத்தில்தான் ஊடகத் துறையின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்பு ஆண்டு விடு முறையில், சுட்டி விகடன் திருச்சியில் ஒரு வார ஓவிய வகுப்பு நடத்தியது. அதில் சேர வேண்டுமென்று ஆசை. அதில் சேர்த்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஒரு வார காலம் முழுவதும் என்னை அழைத்துக்கொண்டு திருச்சிக்கும் தஞ்சைக்குமாக அலைந்தார்.
சூப்பர்டா... சூப்பர்டா
பத்தாம் வகுப்புக்கு வந்தேன். என் குடும்பம் என்னிடம் அதிகபட்சம் எதிர்பார்த்ததே நான் தேர்வில் தேர்வாகிவிட வேண்டும் என்பதை மட்டும்தான். ஏனென்றால், அப்போதெல் லாம் 40 மதிப்பெண்களை நான் எடுப்பதே பெரிய காரியம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 423 மதிப்பெண்கள் எடுத்தேன். அப்பாவின் அலுவலகத்துக்கு ஓடினேன். மதிப்பெண்களைச் சொன்னபோது அவரால் நம்ப முடியவில்லை.
“டேய்... ஒண்ணும் சொல்ல மாட்டேன், உண்மையைச் சொல்லு… எவ்வளவு மார்க்?”
“பாப்பு... உண்மையிலயே இதுதான்...”
“டேய் சூப்பர்டா... சூப்பர்டா” என்றவர் கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னார். “ஆனாடா, இப்பவும் சொல்றேன்... மார்க்குக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. இதையெல் லாம் பெரிசா மண்டையில ஏத்திக்காத... உனக்கு என்னா வாகணும்னு தோணுதோ அதையே செய்யி.”
முதல்முறையாகச் சொல்கிறேன். “சினிமா டைரக்டர் ஆகணும் பாப்பு...”
எல்லாமே தந்தையால்தான்
சினிமா பார்ப்பதையே ஹராம் என்று ஒதுக்கும் ஒரு மதப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன், சினிமா எடுக்கச் செல்ல வேண்டும் என்கிறேன். ஆனால், அதற்கு அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. “நல்ல விஷயம்டா... நிறைய புத்தகம் படி, தினமும் பேப்பர் படி...” என்றார்.
உடன் படித்த எல்லா மாணவர்களும் ப்ளஸ் டூ முடித்த பிறகு மெடிக்கல், இன்ஜினீயரிங்குக்காக கவுன்சலிங், கோச்சிங் என்று பரபரப்பாக இருந்தபோது, எனக்கு எந்த நெருக்கடியும் அவர் கொடுக்கவில்லை. த்ரீடிஸ் மேக்ஸ், மாயா என்று நான் விரும்பிய அனிமேஷன் படிப்புகளில் சேர்த்துவிட்டார். அடுத்து என்னை விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்த்துவிட்டார்.
கல்லூரிக் காலத்தில் என் விருப்பம் அச்சு ஊடகம் மீது மாறியது. விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வானேன். அந்தப் பிரிவில் சிறந்த மாணவப் பத்திரிகை யாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எல்லாமே என் தந்தையால்தான்!
அரணாகத் தந்தை
இதுநாள் வரை பெரிதாக ஏதும் சம்பாதிக்கவில்லை. சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதி பயணத்துக்கும், புத்தகங்களுக்குமே செலவாகிறது. ஆனால், இதுவரை அவர் எதுவும் என்னிடம் கேட்டதில்லை. ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கென்றே சில அபிலாஷைகள் இருக்கும். இதுவரை அவற்றில் நான் எதையும் நிறைவேற்றியதில்லை. அதனால், என் சுற்றத்தார் என் மீது எறியும் எந்தக் கல்லும் என் மீது விழாமல் ஒரு அரணாக அவர் இருக்கிறார்.
அன்புக்குரிய ஜெயமோகன்... என்னை எப்படி அஜிதனுடன் நான் பொருத்திப்பார்த்தேனோ, அதேபோல உங்களை என் தந்தையுடன் பொருத்திப் பார்க்கிறேன். ஆமாம், ஜெயமோகன். அரசுப் பள்ளிகள் மட்டும் அஜிதன்களை உருவாக்குவதில்லை... ஜெயமோகன்களும் சேர்ந்துதான் அஜிதன்களை உருவாக்குகிறார்கள்!
பின்குறிப்பு: நீங்கள் ஆனந்த விகடன், குமுதம் வாசகராக இருந்தால் தஞ்சை தாமு என்ற புனைபெயரில் எழுதும் என் தந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. வல்லம் தாஜூபால் என்ற பெயரில் கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். ஐம்பதின் பிற்பகுதியில் இருந்தாலும் அவர் என்னைவிட அதிகம் வாசிக்கிறார்; உழைக்கிறார்!
- நியாஸ் அஹம்மது,
‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர்.
தொடர்புக்கு: nomadniya@gmail.com

Tuesday, 5 May 2015

போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்

படம்: ஜோதிராமலிங்கம்

முப்பதைத் தாண்டியவர்களா நீங்கள்? அப்படி யென்றால், உங்களில் பெரும்பாலானோருக்கும் இப்படிப்பட்ட பள்ளிப் பருவம் வாய்த்திருக்கும்.
காலை 8.30. இட்லியைப் பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருப் பீர்கள். வாசலிலிருந்து குரல் கேட்கும், “ஏய், மணிமாறா வாடா. பள்ளியோடத்துக்கு லேட்டாவுது.” உங்களோடு மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் குமாரின் குரல்தான் அது. “தோ வந்துட்டேன்டா” என்று எழுந்துபோய், கையைக் கழுவிவிட்டு வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் மஞ்சப் பையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சொல்லியதும் சொல்லாததுமாக ஓட்டம் பிடிப்பீர்கள். குமாரும் நீங்களும் சேர்ந்து அடுத்த தெருவில் இருக்கும் பீட்டரையும் கூட்டிக்கொண்டு நடைபோடுவீர்கள். இப்படியாக ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிடும்.
பள்ளி போய்ச் சேர்வதற்குள் பேச்சு, பாட்டு, ஓட்டம், சண்டை என்று உங்களுக்குள் பெரும் கச்சேரியே நடந்து முடிந்திருக்கும். பள்ளி முடிந்த பிறகும் இப்படித்தான். வீர சாகசங்களையெல்லாம் முடித்த பிறகுதான் வீடு திரும்பல். வீடு திரும்பியதும் அம்மா தரும் டீ, காபி, நொறுக்குத் தீனியையெல்லாம் முடித்துவிட்டு, விளையாட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியது. கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளெல்லாம் சற்று தாமதமாகத்தான் நம் பள்ளிப் பருவத்தில் நுழைந்திருக்கும். விளையாட்டென்றால், திருடன் - போலீஸ், நாடு பிடித்தல், பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்கிச்சுத் தாம்பலம், கூட்டாஞ்சோறு முதலானவைதான். சிறுவர்-சிறுமியர் எல்லோரும் கலந்துகட்டி ஆடும் விளை யாட்டுகள் இவை. தவிர, அந்தந்த நேரத்துக்கு, அந்தந்த இடத்துக்கு ஏற்றாற்போல் நீங்களே கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டுகளும் உண்டு. இருட்ட ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா சொல்லாமலேயே பாடப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பிப்பீர்கள். இதுதான் அன்றாட நிகழ்வுச் சுழற்சி.
வாழ்வின் பொற்காலம்!
குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகள், நெருக்கடிகள், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கண்டிப்பு, வீட்டுப்பாடம் போன்றவற்றைக் கழித்துவிட்டு நம்முடைய பள்ளிப் பருவத்தைப் பற்றிக் கருத்து சொல்லச் சொன்னால் என்ன சொல்வோம்? “பள்ளிப் பருவம்தான் என் வாழ்வின் பொற்காலம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று தானே பெரும்பாலானோர் சொல்வோம்! அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான பள்ளிப்பருவத்தை நாம் நம்முடைய குழந்தைகளுக்குத் தருகிறோமா என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொண்டால் எப்படிப்பட்ட துரோகத்தை நம் பிள்ளைகளுக்குச் செய்துவருகிறோம் என்பது தெரியும். சிறுவர்களுக்கு, கற்பனையூட்டத்துடன் கூடிய துடிப்பான ஒரு பொழுதுபோக்கு (என்லைட்டன்டு லெஷர்) தேவை என்பது உலகமெங்கும் உளவியலாளர்கள் முன்மொழியும் கருத்து. அந்தப் பொழுதுபோக்கை நாம் அவர்களுக்கு அனுமதிக்கிறோமா?
நம்மில் பெரும்பாலானோர் தெரிந்தே செய்கிறோம். ‘நம்ம காலத்துல எவ்வளவு ஜாலியா ஸ்கூல் போவோம். பாவம்! இந்தக் காலத்துப் பசங்க’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே காலை 7 மணிக்கே பெரிய புத்தக மூட்டை, சாப்பாடு எல்லாம் கட்டிக்கொடுத்து, வீட்டுவாசலுக்கோ தெருமுனைக்கோ வரும் பள்ளிக்கூட வேனில் நம் பிள்ளைகளை ஏற்றிவிடுகிறோம். என்ன செய்வது? போட்டி உலகம். நம் பிள்ளைகளின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இப்போதிருந்து அவர்கள் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். நம் காலம் போல இல்லையல்லவா! என்றெல்லாம் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வோம். எல்.கே.ஜி-யில் அந்தக் குழந்தைகள் ஏற ஆரம்பித்த வேன்கள் அல்லது பேருந்துகள்… 12-வது முடித்து, கல்லூரி (பெரும்பாலும் பொறியியல் கல்லூரி) முடித்து, டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர்களை வேன்களோ பேருந்துகளோ பொத்திப் பொத்தி ஏந்திச்சென்றுகொண்டிருக்கும். இப்படி ஒரு ‘பேக்கேஜ்’ வாழ்க்கையின் தொடக்கமாகவே எல்.கே.ஜி. வேன் அமைந்து விடுகிறது.
சுயகற்றலின் பரவசம்
பள்ளி மட்டுமல்ல; பெற்றோர் மட்டுமல்ல; பள்ளி போகும் வழியும் நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தரும். தாங்களாகவே வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான ஆரம்பப் பயிற்சியை அது அவர்களுக்குத் தரும். குட்டி சகாக்கள் ஒன்றாகப் பள்ளிக்குப் போவதென்பது, பெரியவர்களாக வளர்ந்த பிறகு சமூகத்துடன் உறவுகொள்வதற்கான மாபெரும் பயிற்சி. எல்லாவற்றையும்விட உலகைச் சுயமாகவே கற்றுக்கொள்ளும் பரவசம்தான் இதில் மிகவும் முக்கியமானது.
சமூகத்தின் சூழலையும் இயற்கையையும் எதிர்கொள்வது என்பது கற்றல் பருவத்தில் மிகவும் இன்றியமையாதது. சகாக்களுடன் பள்ளி செல்லும் வழியில் சாலையோரம் தென்படும் சிறு சிறு உயிரினங்கள், செடிகொடிகள், மரங்கள், வழியில் குறுக்கிடும் சிற்றாறு, ஒற்றையடிப் பாதை, தோப்பு, அஞ்சல் அலுவலகம், கடைவீதி இவையெல்லாமே பள்ளிக் கல்வியைத் தாண்டிய மகத்தான கல்வியை அவர்களுக்குத் தரும்.
சைக்கிள் சாகசம்
நடந்து செல்லும் சிறுவர்கள் ஒரு பருவத்துக்குப் பிறகு சைக்கிளில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அதுவும் ஒரு தொடர்ச்சிதான். அதுவும் பெரிய சாகசம்தான். தங்களைத் தாங்களே கையாள்வதில் வேறு ஒரு பரிமாணத்தை அடை வதன் அடையாளம். சைக்கிளில் செல்லும்போதும் கூட்டாகச் சேர்ந்துதான் செல்வார்கள். இப்படிச் செல்வது தோழமை உணர்வு, சூழலைக் கற்றல் என்பவற்றோடு பாதுகாப்பும்கூட.
இப்படி ஒன்றாக அவர்கள் செல்லும்போது, அவர் களுக்குள் சிறு சிறு பிரச்சினைகள், சண்டைகள் ஏற்படும். அவற்றைப் பெரும்பாலும் ஆசிரியர்களிடமோ பெற் றோரிடமோ எடுத்துச்செல்லாமல் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளும் திறனும் அவர்களுக்கு இயல்பிலேயே ஏற்படுகிறது. சமூகத்துடனான ஊடாட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒரு பண்பு இது.
வாழ்க்கையோடு தொடர்புபடுத்துதல்
கிராமமோ நகரமோ அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்தான் இன்னமும் தாங்களாகவே பள்ளிக்குச் செல்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்கள் இயற்கையான சூழலுடன் கைகோத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றால், நகரத்துச் சிறுவர்கள் தாங்கள் வாழும் சூழலுடன் கைகோத்துக்கொண்டு செல்கிறார்கள். இயற்கைச் சூழலாக இல்லாவிட்டாலும் வாழும் சூழலோடு சேர்ந்து செல்வது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. கிராமங்களிலும் நகரங்களிலும் தங்கள் பள்ளிக்குச் சகாக்களுடன் நடந்தோ அல்லது அரசுப் பேருந்துகளில் உற்சாகமாகப் பேசிக் கொண்டோ செல்லும் சிறுவர்கள் வாழ்க்கையோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடன் இருக்கிறார்கள்.
வாழ்க்கையுடன் குழந்தைகளைத் தொடர்புபடுத்துவதுதான் மிகவும் முக்கியமானது. உண்மையான கல்வி அதைத்தான் செய்யும். ‘பேக்கேஜ்’ கல்வி முறையோ வாழ்க்கையிலிருந்து கல்வியைப் பிரித்துவிடும். கல்வி என்பதை வெறும் அறிவாகப் பார்க்கும் கல்வி அது. அறிவும் உணர்வும் சேர்ந்ததுதான் உண்மையான கல்வி. உலகமெங்கும் ‘உணர்வுசார் அறிவு’ குறித்து (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) பேசிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் இன்னும் அறிவை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குகிறோம்.
ஆனால், குழந்தைகள் அற்புதமான திறமை கொண்டவர்கள். நாம் அவர்களை வேன்களில் கொண்டுபோய் அடைத்தாலும் அவர்கள் அதற்குள்ளும் ஒரு சிறு உலகத்தை, நட்பை சிருஷ்டித்துக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்கான இடத்தை எவ்வளவு குறுக்கினாலும் அந்தச் சிறு இடத்திலும் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடியவர்கள். ஆனால், போகப்போக அந்த உயிர்ப்பையும் அவர்களிடமிருந்து நாம் பறித்துவிடுகிறோம் என்பதுதான் வேதனையானது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் மிக எளிமையானது; பள்ளி செல்லும் வழியையும் நம் பிள்ளையின் ஆசிரியராக ஆக்கிவிடுவதுதான் அது.
‘ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னைத் தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்…
மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே’
என்று தற்காலத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான தேவதேவன் கவிதை எழுதியிருப்பார். மரத்தடி நிழலைப் போலவே பள்ளி செல்லும் வழியும் நம் பிள்ளை களுக்கு எல்லாவற்றையும் அறிமுகப்படுத்திவிடும். அவர் களை அவர்களாகவே இருக்க விடுவோமே!
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

நம் கல்வி... நம் உரிமை!- தப்பித்த குரங்குகள்!




வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ, அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம் என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. நாங்கள் கல்வி உரையாடலில், வேடிக்கையாக இதைத் ‘தப்பித்த குரங்குகள்’ என்று குறிப்பிடுவோம். யார் கைகளும் படாமல், யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் அசல்; வடிவமைக்கப்பட்டதெல்லாம் நகல்தான்! பள்ளிக்கூடம் - உலகின் மிகப்பெரிய நிறுவனம் - தப்பிப்பது சுலபமா? அசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம்!
இப்போது என் பள்ளிப் பருவம் ஞாபகத்துக்கு வருகிறது.1950-களின் இறுதியில் பெரியகுளம் வி.எம்.போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். வராகநதி ஆற்றங்கரையில் இருந்த பள்ளி. எந்தக் காலத்திலும் வராக நதியில் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும். வகுப்பறை ஓய்ந்த நேரங்களில் வராகநதி ஆறும் ஆற்றங்கரையும்தான் எங்கள் கல்விக்கூடம். ஆசிரியர்கள் பல மாதிரிகளில் இருந்தார்கள். ஆழ்ந்த புலமையால் எங்களை விட்டுச் சற்றுத் தள்ளி நின்ற சர்மா, சிவக்கொழுந்து; ‘அட போடா!’ என்று சொல்லி எங்களோடு எப்போதும் கலந்துநின்ற பாண்டியராஜன்; பரம சாதுவான ஓவிய ஆசிரியர், குமுறும் வார்த்தைகளில் எங்களுக்கு அரசியல் கற்றுத்தந்த கைத்தொழில் ஆசிரியர் - எனப் பலர். ஆசிரியர் பலவிதமாக இருந்தபோதும் எவரும் எந்த நிர்ப்பந்தத்தையும் அழுத்தத்தையும் எங்கள்மீது ஏற்றியதில்லை. மாணவர்களுக்குள் சாதிமத பேதங்கள் இருந்ததும் இல்லை. கவிஞர் மு.மேத்தா அன்று எங்கள் பிரியத்துக்குரிய மாணவர் தலைவர். எதிர்காலம்குறித்த கனத்த சிந்தனைகளும் அன்று கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி-யில் எங்களில் பலர் 500-க்கு 240 மதிப்பெண் வாங்கி ‘பார்டர் பாஸ்’ பண்ணுவோம். அதற்கே, “மாப்ள, புரோட்டா வாங்கிக் கொடுய்யா!” என்று மச்சான்மார்கள் ட்ரீட் கேட்பார்கள்.
என் சொந்த முகம் எங்கே?
பள்ளியை விட்டு வெளியேறும்போது வடிவமைக்கப்படாத சொந்த முகங்களோடு வெளியேறினோம். அதற்கான சுதந்திர வெளி எங்கள் பள்ளியில் இருந்தது. அந்தச் சுதந்திரவெளி முக்கியமானது. வர்த்தகமும், நிர்ப்பந்தமும் இல்லாத சுதந்திர வெளி. ஆளுமைகளைச் சிதைக்காத சுதந்திர வெளி. எந்த நேரமும் வெற்றியை நோக்கித் துரத்தி அடிக்காத பொதுவெளி!
இப்போது அது எங்கே? ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப்போட்ட முகம், மத்திய வர்க்க ஆணாதிக்கப் பாடத் திட்டம் வழங்கிய முகம், வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. என் சொந்த முகம் எங்கே? எங்கே எனக்கான சுதந்திர வெளி? கல்வி உரிமைச் சட்டம் போன்றவை ‘அதட்டல் அதிகாரங்கள்’ மீது கேள்வி எழுப்பலாம். ஆனால், அக்கறை என்ற பெயரில் உலவும் ‘நுட்பமான அதிகாரங்கள்’ எப்போதும் நிலைத்திருக்கின்றன. வடிவமைத்தல், மதிப்பிடுதல், வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான அதிகாரங்கள்.
எட்டாம் வகுப்பு வரை தேர்வு வைத்து வடிகட்ட முடியாமல் போகலாம். ஆர்வத்துடன் மேடையேற வந்த முகங்களில் ‘எண்ணெய் வடியும் கறுப்பு மூஞ்சிகளை’ வடிகட்டித் துரத்து வதில் யார் குறுக்கிட முடியும்? வடிகட்டும் வேலையைச் செய்வோர் பலர் கறுப்பர்களாக இருப்பதும் ஒரு முரண்!
வெட்டிச் சாய்க்கும் வடிவமைப்பு
மதிப்பிடுவதும் அதிகாரம்தான்! விடையில் எப்போதும் நாங்கள் தேடுகிற சில வார்த்தைகள் தென்பட வேண்டும். முழு விடையையும் வாசிக்க நேரம் கிடையாது. நீ எப்படி யோசித்து விடை எழுதினாலும் ‘நாலு வரிக்கு ரெண்டு மார்க்’ என்று நான் முடிவு செய்துவிட்டால் ரெண்டு மார்க்தான். மாவட்டப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்யும்போது இயல்பாகப் பேசுகிறவனை ‘அப்படியில்ல! ஏத்த எறக்கத்தோடு பேசு!’ என்று வெட்டிச் சாய்ப்போம். அதுதான் வடிவமைத்தல்!
விளம்பரங்களை நம்பும் மூளை
எதுவும் இயல்பாக இருப்பதோ, விதவிதமாக இருப்பதோ வடிவமைக்கும் எங்கள் அதிகாரத்துக்கு எதிரானது. சிந்திக்க அனுமதிப்பதுகூட வடிவமைக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். எனவேதான், கிளப், கேம்ப், ஒர்க்‌ஷாப் என்று பிஸியாக இருக்கவும், படிப்பது என்ற பெயரில் திரும்பத் திரும்ப டிரில் பண்ணவும் பிள்ளைகளைப் பழக்கியாயிற்று. ‘பிஸி’யான பிள்ளை எதைச் சிந்தித்தது? படித்த மனிதர்கள் மத்தியில்தான் பகை வளர்க்கும் மதவாதம் நிரம்பிக் கிடக்கிறது. அவர்கள் மத்தியில்தான் உளுத்துப்போன வைதிகச் சடங்குகள் புதுப்புது ரூபம் எடுக்கின்றன. அப்படியானால், ‘படிப்பும் பள்ளிக்கூடமும்’ கற்றுத் தந்தது என்ன? வடிவமைத்தது எதை? விளம்பரங்களை நம்பும் மூளைகளைத்தானே அவை வடிவமைத்திருக்கின்றன. எங்கே பிள்ளைகளுக்கான சுதந்திர வெளி?
வகுப்பறை தாண்டிய வாசிப்பு
இன்றைக்கும் கொஞ்சம் சுதந்திரவெளி மிச்சம் இருக்கும் இடம் அரசுப் பள்ளிகள்தான். அதனால்தான் அரசுப் பள்ளி களுக்காக வாதாடுகிறோம். அரசுப் பள்ளிகளுக்காக வாதாடுவது குழந்தைகளின் சுதந்திரத்துக்காக வாதாடுவதாகும். அவர்களின் ஆளுமைக்காக வாதாடுவதாகும். பல ஆண்டு களாக ஆசிரியர், மாணவரைச் சந்தித்து வருவதன் அடிப் படையில் சில உண்மைகளை இங்கு என்னால் நம்பிக்கை யுடன் பகிர முடியும். ஒப்பிட்டுச் சொல்வதானால், அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம்தான் வகுப்பறை தாண்டிய வாசிப்பு கூடுதலாக இருக்கிறது.
மனந்திறந்த உரையாடலும் அவர்கள் மத்தியில் சாத்தியமாக இருக்கிறது. விவாதத்தின்போது அவர்கள் வாயொடுங்கி நின்று நான் பார்த்ததில்லை. அரசுப் பள்ளி மாணவர்போல வெடிப்புறப் பேசக்கூடிய, விவாதிக்கக்கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில் காண்பது அரிது. பாட்டு, நாடகம் என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள். தலையிட்டுத் தலையிட்டு வடிவமைக்கப்படாத திறமைகள். கூண்டுக்குள் சிக்காத குரங்குகள்... இந்தச் சுதந்திர வெளி, கவனிப்பும் பராமரிப்புமற்ற பாழ்வெளியாக மாறிவருவதுதான் நம் கவலை. ஆசிரியர்கள் மட்டுமே இதை ஓரளவு சரிசெய்ய முடியும். எனவேதான் அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கி அடிக்கடி பேசுகிறோம்.
நேசத்தின் வழி நெருங்குவோம்
எதையும் ஒரு நிர்ப்பந்தத்தோடு பேசியே நமக்குப் பழக்கம். அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கிப் பேசுவது ஒருபுறம் நியாயத்தின் குரலாக இருந்தாலும் மறுபுறம் அதிகாரத்தின் குரலாகவும் இருக்கிறது. தேவையில்லை. அதிகார வழியிலான நிர்ப்பந்தத்தின் மூலம் அல்ல - நேசத்தின் வழி ஆசிரியர்களை நெருங்குவோம். மாற்றம் நிச்சயம் சாத்தியமாகும்!
ச. மாடசாமி, கல்வியாளர்,
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

நம் கல்வி... நம் உரிமை!- ஆங்கிலமும் நம் கல்விமுறையும்




ஆசிரியர்களான பிறகுதான் சிலர் மாணவர்களாக இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள். மொழி ஆசிரியர்களுக்கு இது நன்றாகவே பொருந்தும். நானும் அப்படித்தான்.
அச்சக உரிமையாளரிடமிருந்தும், அச்சுக் கோர்ப்பவரிடமிருந்தும் சுருக்கமாக எழுத நான் கற்றேன். விண்ணப்பம் எழுதிக்கொடுங்கள் என்று ஒரு சமூக ஆர்வலர் அடிக்கடி என்னிடம் கேட்பார். “அரசின் உயரதிகாரி அரைப் பக்கத்துக்கு மேல் படிக்க மாட்டார். அதற்குள் அடங்குமாறு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்” என்பார். ஒரு பொருளைச் சொல்லி, விவாதத்தை முன்வைத்து, அதிலிருந்து கோரிக்கையை வடிவமைக்க அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஒரு வைணவப் பெரியாரின் சமயச் சொற்பொழிவிலிருந்து தமிழ் இலக்கிய மரபுகள் சிலவற்றைக் கற்றேன்.
அறிவு என்று நாம் கண்டவற்றைக் கொண்டு, மாணவர்களின் நேரத்தைச் செருமச் செரும நிரப்பிவிடுகிறோம். அவற்றுக்கு அப்பால் அவர்கள் எதையுமே கற்பதற்கு அனுமதிப்பதில்லை. வேலைவாய்ப்பைப் பெற படிப்பு அவசியம் என்பது மறுக்க முடியாதது. ஆனால், அதற்காக மட்டுமே படிக்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணம் பெரிய குறைபாடு. கல்வி முறையிலும், பள்ளிகளிலும், பாடத்திட்டத்திலும், தேர்வு முறையிலும்தான் கோளாறு என்பதில்லை; கல்வியைப் பற்றிய நமது சமூகத்தின் அணுகுமுறையிலும் இருக்கிறது.
ஓ… அது அந்தக் காலம்
நான் படித்த கிறிஸ்துவப் பள்ளிக்கூடம் ஒழுங்கு போன்றவற்றில் கொஞ்சம் கெடுபிடி காட்டும். பிரிட்டனிலிருந்த பொதுப் பள்ளிக்கூடங்களையொத்த சட்டதிட்டங்கள். புதுடெல்லியில் இருந்தவர்கள்கூடத் தங்கள் பிள்ளைகளை இங்கே படிக்கட்டும் என்று விட்டிருந்தார்கள். வகுப்புக்குச் சட்டாம்பிள்ளை, ஒழுங்கீனத்துக்குக் கருப்பு மதிபெண்கள், அவை ஒரு எல்லையைத் தாண்டினால் சிவப்பு மதிப்பெண், அதையும் தாண்டினால் வீட்டுக்குச் செல்லும் சிவப்பு அட்டை எல்லாம் உண்டு. வகுப்புக்கு வராவிட்டால் தண்டம். கட்டாவிட்டால் இரட்டிப்புத் தண்டம். ஆனாலும், நாங்கள் கடுமையை உணராதவாறுதான் இவை அமலானது.
எங்களுக்கு ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகமானது. மெத்தப் படித்தவர்கள் ஆங்கிலத்தை காலனிய ஆதிக்கத்தின் எச்சம் என்று சொன்னார்கள். மற்றவர்கள் நமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் அது எதிரி என்று சித்தரித்தார்கள். ஆனாலும், அதை விட்டுவிட முடியாத சிக்கல் இருந்தது. எட்டாம் வகுப்பில் இருந்தபோது ஆங்கிலம் ஒரு நெருடலான மொழியல்ல என்று தமிழாசிரியர் எங்களுக்குத் தெளிவுபடுத்தினார். பிரதிப்பெயர்ச் சொற்களோடு வினைச் சொற்கள் சேரும்போது அவற்றின் கால வடிவங்கள் வெவ்வேறாக இருக்கும். இதனைக் கற்றுக்கொண்டால் ஆங்கிலத்தை வசப்படுத்திவிடலாம் என்று காட்டினார். அந்த ஆண்டு முடிவதற்குள் எங்களுக்கான ஆங்கிலக் கட்டுரைகளை நாங்களே சொந்தமாக எழுதிக்கொள்ள முடிந்தது.
எங்கள் பள்ளி நூலகத்தில் இன்ன புத்தகம் என்றில்லாமல் மாணவர்கள் எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பொதுத்தேர்வில் நாங்கள் அனைவருமே தேர்ச்சிபெற்றுப் பள்ளிக்கு 100% பெற்றுக்கொடுத்தோம். மாணவர்கள் பல சமூகப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். மனனம் செய்வதைப் பள்ளி ஊக்குவித்ததில்லை. கட்டுரைகளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்ததில்லை. யாராவது நோட்ஸ் வைத்திருப்பதைக் கண்டால் பிடுங்கிக் கிழித்து எறிந்துவிடுவார்கள். பெற்றோர்கள் பள்ளியின் மீது வைத்திருந்த நம்பிக்கையளவுக்குப் பள்ளியும் மாணவர்களை நம்பியது. பெற்றோர்கள் உட்பட, யாருமே இப்போது மாணவர்களின் அறிவுத்திறனை நம்புவது இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.
ஆங்கில அரசியல்
ஆங்கில ஆசிரியராகக் கல்லூரியில் வேலையில் சேர்ந்த பிறகு, ஒரு மொழியைக் கற்பிப்பதிலும் கற்பதிலும் உள்ள சமூக உளவியல் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட்டன. வகுப்பில் ஆங்கிலத்தில் பேசினால், “தமிழில் பேசுங்கள்” என்று மாணவர்கள் கூச்சலிடுவார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலம் புரியவில்லையோ என்று நினைப்பேன். ஆங்கிலத்தில் பேசத்தானே எனக்குச் சம்பளம் தருகிறார்கள் என்று தர்க்கம் செய்து மேலும்மேலும் எளிமையாகப் பேசிப்பார்ப்பேன். புரியாமலில்லை. அது ஒரு வகையான எதிர்ப்பு என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள் அறியாமல் அது மனத்தளவிலும் இருந்திருக்கலாம். இந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் வகுப்பறையில் அழுதிருக்கிறேன்.
ஆங்கிலேயர்களின் உச்சரிப்பில் உள்ளவாறே ஏற்ற இறக்கம், அழுத்தத்தோடு பேசினாலோ பிரச்சினை இன்னும் சிக்கலானது. கல்லூரி ஆசிரியராகத் தரிக்க வேண்டும் என்றால், இந்த உச்சரிப்பை மறக்க வேண்டும் என்று ஆகிவிட்டது.
“ஒரு குக்கிராமத்திலிருந்து வந்தவன் நான். வீட்டில் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. தமிழ் வழியில்தான் பயின்றேன். ஆறாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துகளைக் கற்றேன். இன்றைக்கு ஆங்கிலப் பேராசிரியராகவில்லையா?” என்றெல்லாம் சொல்லி அவர்களைத் தேற்ற முயல்வேன். இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு நிகராக உச்சரிப்புத் திருத்தம் உடைய எனது ஆசிரியரை எடுத்துக்காட்டாகக் கூறுவேன்.
என்னுடைய ஆசிரியரிடம், “எங்கே ஆங்கிலம் பயின்றீர்கள்?” என்று கேட்டபோது இன்றைக்கும் பிற்பட்ட ஊராக இருக்கும் திருத்துறைப்பூண்டியைத்தான் குறிப்பிடுவார். அவரது ஆசிரியர் வானொலியில் வரும் ஆங்கிலச் செய்தி அறிக்கையைக் கேட்பதை நாள்தோறும் பாடமாக வைத்திருந்தாராம். இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே நானும் ஒரு வானொலிப் பெட்டியை வைத்துக்கொண்டு சிற்றலையின் ஆங்கில நிகழ்ச்சிகளைத் தூங்காமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.
பிபிசியின் ஆங்கிலத்தில் கொஞ்சம்கூடப் பயின்றுவந்த தன்மையோ, பாசாங்கோ இல்லாமலிருக்கும். முதலில் சப்பென்று இருந்தாலும், பின்னர் நமது ஆங்கிலத்தில் வெகுவாகப் பாசாங்குத்தனம் இருப்பதை அது மிக எளிதாக உணரவைத்தது. இந்திய வானொலியில் அப்போது லாதிகா ரத்னம் மிகச் சிறந்த செய்தி வாசிப்பாளர். மாணவர்களாக இருந்தபோது அவர் வாசிக்கும் செய்திகளைப் போட்டி போட்டுக்கொண்டு உச்சரிப்புக் குறியீட்டில் எழுதிக்கொள்வோம். மாணவர்களிடம் இதையெல்லாம் சொல்வேன். ஆனாலும், நான் வகுப்பறையில் தமிழில் பேச வேண்டும் என்று விரும்பிய மாணவர்களே அதிகம்.
மொழியில் மெய்மை இல்லை
இன்றைய சூழ்நிலையோ தலைகீழாகிவிட்டது. தமிழையே தொட மாட்டேன் என்ற உத்தரவாதம் இருந்தால்தான் பெற்றோர்கள் அந்தப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முயற்சியில் தாய்மொழி குறுக்கிடுகிறது என்ற ‘கண்டுபிடிப்பு’ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. எதிரெதிரான இந்த இரண்டு நிலைகளுமே தவறானவை.
தமிழானாலும், ஆங்கிலமானாலும், மொழியைப் பற்றிய புரிதல் இங்கு மிகவும் சொற்பம். பெரும்பாலான மாணவர்களுக்கு இரண்டு மொழிகளிலுமே போதிய பயிற்சி இருப்பதில்லை. சூத்திரத்தைக் கற்று ஒப்பிப்பதுபோல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். மொழியில் மெய்மையே இல்லை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு குழந்தைகளின் வரலாற்று நூலைப் பார்த்தேன். அந்தந்த மொழியில் எழுதியதாக இல்லாமல் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்ததுபோல் இருந்தன. விவரச்செறிவோ, கருத்தாக்கமோ இல்லாமல் கழுநீராக, வெற்றுச் சொற்களைத் தொடுத்து வைத்ததாக இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலப் புத்தகத்தின் தடிமனைப் பார்த்துப் பயந்துபோனோம். ஆசிரியரின், மாணவர்களின் கற்பனைக்கு இடமே கொடுக்காத நூல்கள். இருவருக்கும் கற்பனை உண்டு என்று நூலாசிரியர்கள் நம்பியதாகத் தெரியவில்லை.
ஒருமுறை என் மாணவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்: “சார், எவ்வளவுதான் படித்தாலும் ஒரு மொழியைப் பேசப் பேச, கேட்கக் கேட்கத்தானே நன்றாகக் கற்றுத் தேற முடியும்? நான் நாற்றுப் பறிக்கச் சென்றால்தான் என் குடும்பம் சாப்பிடலாம். கல்லூரியில் படித்துக்கொண்டே பாதி நாள் வயல் வேலைக்குப் போகிறேன். வயல் வேலை இல்லாதபோது கட்டிட வேலைக்குப் போகிறேன். இப்படியெல்லாமும் கஷ்டப்பட்டுக்கொண்டேதான் படிக்கிறோம் நிறைய பேர். ஆனால், நகரத்தில் எடுத்த எடுப்பில் ஆங்கில அறிவை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு ஒருவரை அளவிடுவதும் நிராகரிப்பதும் எந்த வகை நியாயம் சார்?”
ஒரு மாணவரின் கேள்வி மட்டும் அல்ல இது. ஒரு கல்வி அமைப்பின், சமூகத்தின் இயல்பே திசை மாறியிருப்பதை நோக்கிய முறையீடு; ஆங்கிலம் மட்டும்தான் உங்களுக்குத் தெரிந்த அளவுகோலா என்ற மாணவ சமுதாயத்தின் முறையீடு. எத்தனை தலைமுறைகளை இந்த ஒரே அளவுகோலால் அளந்து, கழித்து, ஒதுக்கிக்கொண்டிருக்கிறோம்!
இந்த ஆங்கிலம் எந்த ஆங்கிலம்?
ஆங்கிலம் ஆங்கிலம் என்றுதான் பிள்ளைகளை விரட்டுகிறோம். ஆனால், எந்த மாதிரி ஆங்கிலத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம்? ஷேக்ஸ்பியர், மில்டன் எல்லாம் அவர்களுக்குச் சரிவராது என்று முடிவெடுத்துவிட்டோம். மொழியை அவர்களுக்கு ஒரு பண்பாட்டுச் சாதனமாகச் சொல்லித் தரக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டோம். ஆங்கிலம் அவர்களுக்கு ஒரு தொடர்புச் சாதனமாக மட்டும் பயன்பட்டால் போதும். உள்ளீடில்லாத கருக்காய் வார்த்தைகளாக ஒரு மொழியைக் கற்பதைப் போல / கற்பிப்பதைப் போல ஒரு அவலம் உண்டா?
இதையெல்லாம் இன்றைக்குப் பேச முடியாது. உலக மயமாக்கலில் ஆங்கிலத்துக்கு இன்றைக்கு வந்துள்ள கீர்த்தி, நமது கல்விக் கொள்கை, மொழித்திட்டம், பாடத்திட்டம், கல்விச் சாலைகளின் இலக்கு, எல்லாமாகச் சேர்ந்து ஆங்கிலத்தை ஒரு வகையான வர்க்கபேதக் கருவியாக்கிவிட்டது. மாணவர்களுக்கு எப்போது விடுதலையோ?!
- தங்க. ஜெயராமன், மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத்
தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

நம் கல்வி... நம் உரிமை!- அந்த நாள் வந்திடாதோ?




பெங்களூரில் இன்னும் இருள் பிரியாத நேரம். காலை ஏழு மணிக்கு எங்கள் அடுக்குமாடிக் கட்டிட வளாகத்தின் கேட்டுக்கு வெளியே நிற்கிறது ஒரு பள்ளிப் பேருந்து. ஓட்டுநர் பொறுமையிழந்து இரண்டு முறை ஹாரன் அடிக்கும்போது, இரு சிறுவர் சிறுமியர் அவர்களது தாய்மார்கள் பின்தொடர ஓடுகிறார்கள். தாய்களின் கையில் பாதி பிரெட் துண்டு அல்லது ஒரு அரைக் கோப்பைப் பால். அவர்களது கெஞ்சல் ஓய்வதற்குள் சிறுவர்கள் வண்டியில் ஏறிவிட்டார்கள்.
கனத்த பைகள் முதுகை முன்னுக்கு வளைத்து முகம் அதில் மறைந்து... பள்ளிக்குச் செல்லும் இன்றைய சிறுமிகளையும் சிறார்களையும் கண்டால் எனக்குக் காரணம் புரியாமல் வயிற்றைக் கலக்குகிறது. இந்தப் பொதி சுமையும் அரை வயிற்று ஓட்டமும் மாலை களைத்துவந்ததும் வீட்டுப்பாடமும், களைப்பைப் போக்க கம்ப்யூட்டர் கேம்ஸும்... பறவைகளின் கீதத்தைக் கேட்கப்போதில்லை. பெங்களூரு மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை அண்ணாந்து பார்க்க முதுகு நிமிராது.
ரம்மியமான நாட்கள்
ஐம்பது அறுபது ஆண்டுக்கு முந்தைய பெங்களூரில் எனது பள்ளி நாட்களை நினைக்கும்போதே மனசு பொங்குகிறது உவகையில். எத்தனை ரம்மியமான, சந்தோஷமான வருடங்கள் அவை! எங்கள் பைகள் கனத்ததில்லை. முதுகு கூனியதில்லை. காலை உணவு முடித்த பிறகு, சவுகரியமாக பள்ளிப் பேருந்து வரும், எட்டரை மணிக்கு. வழி அனுப்பக் கவலை தோய்ந்த முகத்துடன் எவரும் நிற்க மாட்டார்கள். வீட்டில் வானொலிப் பெட்டிகூட இல்லாத காலம். தொலைபேசியா? கேள்விபட்டதுகூட இல்லை. வீடு நிறையப் புத்தகங்கள்.
நான் படித்தது கான்வென்ட் பள்ளி இல்லை. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த இந்து பள்ளி. திருவேங்கடசாமி முதலியார் என்ற பெருந்தகை, தனது மனைவி பேரில் கட்டியிருந்த மாபெரும் பள்ளி. ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர் நிலைப்பள்ளி முடிய. பெங்களூரின் தண்ணென்ற சூழலில் மரங்களும் பூச்செடிகள் நிறைந்த பூங்காவுடனான இரண்டு பிரம்மாண்ட கல் கட்டிடங்கள் எதிரும் புதிருமாக. இரண்டுக்கும் இடையே, மிக விசாலமான ஏற்றமும் இறக்கமுமாக பூங்கா. ஒரு சினிமா செட்டைப் போல இருக்கும். பலதரப்பட்ட, பல மொழி பேசும் மாணவியர். அதனால், படிப்பும் பேச்சும் இயல்பாக ஆங்கில வழியிலேயே அமைந்தது. ஆனால், அங்கு தமிழை இரண்டாம் மொழியாக எடுக்கும் வசதியும் இருந்தது. அதனாலேயே மதுரையைச் சேர்ந்த என் தந்தையின் யோசனையின் பேரில் அந்தப் பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன்.
மண்ணும் மணமும்
படிப்பு என்பதை ஒரு சுமையாகக் கலக்கத்துடன் நாங்கள் அணுகிய பேச்சே இல்லை. மிஸ் டேவிட், மிஸ் எட்வர்ட்ஸ், மிஸ் லீலா, மிஸ் லக்ஷ்மி என்று உற்சாகமாகப் பாடம் நடத்தும் ஆசிரியைகள். மிஸ் டேவிட் எங்களுக்கு மண்ணை நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். தோட்டம் போட என்று நேரம் உண்டு. எங்கள் வகுப்புக்கு என்று ஒரு சதுரமான இடம் இருந்தது. மண்ணைக் கிளறவும் பாத்தி கட்டவும் அளவாக நீர் ஊற்றவும் கற்றுக்கொண்டோம். மண்ணிலிருந்து சுருண்டு நெளிந்து வரும் மண் புழுக்கள் நமது சினேகிதர்கள் என்று புரிந்துகொண்டோம். மிஸ் டேவிட் சொல்வதெல்லாம் எங்களுக்கு வேதவாக்கு. விதையிலிருந்து செடி முளைத்து, இலை துளிர்விடும்போது எங்களுக்கு ஏற்படும் பரவசம் மிஸ் டேவிட்டுக்கும் ஏற்படும். ஆங்கிலத்தில் ரசனை ஏற்படுத்தியது மிஸ் டேவிட். வோர்ட்ஸ்வெர்த்தின் ‘தி டஃபடில்ஸ்’ கவிதையை மிஸ் டேவிட் படிக்கும்போது, நாங்கள் அவருடன் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டிருப்போம். மற்றவரைப் புண்படுத்தாமல் பேசச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட். எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட்.
தமிழ்க் கதாநாயகி
தமிழ்ப் பற்று என்னைச் சிக்கென்று பிடித்துக்கொள்ளவும் எங்களுக்கு வாய்த்த ஆசிரியைகளே காரணம். தமிழ் வகுப்பு எப்போது வரும் என்று நாங்கள் காத்திருப்போம். தமிழ்ப் பற்று என்பதால் அல்ல - அது பின்னால் வந்தது. தமிழ் டீச்சர் பிரேமா எங்களுடைய கதாநாயகி. கோயில் சிலைபோல உடம்பில் மிக ஸ்டைலாக சேலை அணிந்திருப்பார். நம்ப முடியாத நீளத்துக்கு ஜடை. அவரை எங்களுக்குப் பிடிக்க வேறு காரணம் இருந்தது. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்று கழுத்தை அறுக்காமல் எங்களுக்கு இணையாக ஆடவும் பாடவும் தயாராக இருப்பார். அவர் பாடம் நடத்துவதுபோலவே இராது.
மழையும் குளிரும் இல்லாத நாட்களில் மரத்தடியில் வெட்டவெளியில்தான் வகுப்பு. தமிழ்ப் பாடத்தோடு அது நிற்காது. பறவைகள், மலர்கள், மரங்கள், விலங்குகள், நட்சத்திரங்கள் என்று பிரபஞ்ச ரகசியமே அங்கு விரியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும். கதை மூலமே எனது உலகம் இதழ் இதழாகப் பூ விரிவதுபோல மலர்ந்தது, வண்ணங்கள் மிகுந்த சினேகிதமான உலகமாக. அதுவே சத்தியம் என்று தோன்றிற்று. அது ஒரு கற்பித உலகமாக நிச்சயம் இருக்கவில்லை. உயர் நிலைப்பள்ளியில் மிஸ் கோமளம் கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். பாண்டியனின் சபையில் கண்ணகி வந்து நின்று நீதி கேட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று பாண்டியன் இறந்ததும் ‘தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல் பெருங்கோப்பெண்டும் ஒறுங்குடன் மாய்ந்தனள்’ என்ற வரியைச் சொல்லிச் சொல்லி ரசிப்பார். ஆண்டாளின் ‘பால்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்ற வரிகளை அவர் விளக்கும்போது எங்கள் நாவில் நீர் ஊறும். இப்பவும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போதெல்லாம் மிஸ் கோமளத்தின் நினைவு வருகிறது.
ஜனகம்மாவும் பாரதியும்
தீவிர காந்தி பக்தையும் பாரதியின் உபாசகியுமான எங்கள் பாட்டு டீச்சர் ஜனகம்மா பாடும் ‘விடுதலை, விடுதலை, விடுதலை!’ என்ற ஓங்கிய குரல் மனசைச் சிலிர்த்து பாரதியிடம் நேசம் கொள்ளவைத்தது. பாரதியின் பல பாடல்கள் பாடம் ஆனது பத்து வயதில்.
ஆசிரியைகளின் ஈடுபாடே என்னைத் தீவிர வாசிப்புக்கு அழைத்துச் சென்றது. நான் எட்டாம் வகுப்பை முடிப்பதற்குள் ஜேன் ஆஸ்டின் , ப்ராண்டே சகோதரிகள், அலெக்சாண்டர் ட்யூமா, சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்று கைக்குக் கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்திருந்தேன். விகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிகைகளில் வந்த கதைகளையெல்லாம் வரி விடாமல் படிப்பேன். அத்துடன் அது நிற்காது. பள்ளிக்குச் செல்லும் வழியில் தமிழ் தெரியாத என் சினேகிதிகளுக்கு லக்ஷ்மி, கல்கி, ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வேன். அதைக் கேட்க ஆசிரியைகள்கூடக் காத்திருப்பார்கள்!
ஓடி ஓடி விளையாடு
இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது - பள்ளிப் படிப்பு மிகச் சரளமாக நகர்ந்ததும், பத்தாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் வாங்கித் தேர்ந்ததும், எந்தவித டென்ஷனும் இல்லாமல் முடிந்தது எப்படி என்று. அந்தக் காலத்தில் தரம் குறைவாக இருந்ததா? குறைவுதான் என்று இன்றைய பாடத்திட்டங்களைப் பார்க்கும்போது மலைப்பு ஏற்படுகிறது. இன்றைய குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களால் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள். சந்தேகமே இல்லை. ஆனால், அன்று பல திசைகளில் மனசு சிதறாமல் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் கவனம் குவிந்திருந்தது. விளையாட்டுக்கு என்று ஒரு வகுப்பு தினமும் உண்டு. விளையாடியே ஆக வேண்டும். நான் சற்று சோம்பேறி. ஒரு புத்தகத்துடன் ஒதுங்குவதைப் பார்த்தால் டீச்சர் உடனடியாகத் துரத்த வருவார். ‘‘வெறும் புத்தகப் புழுவாக இருந்தால் வெளி உலகத்தில் நீ சுழிப்பாய்’’ என்பார்.
கொண்டாட்டமோ கொண்டாட்டம்
எது எப்படியோ அன்று பெற்றோர்கள் அதிக நிம்மதியுடன் இருந்தார்கள். பள்ளியில் சுலபமாகச் சேர்க்க முடிந்தது. கட்டணம் மிகக் குறைவாக இருந்தது. பள்ளிச் சிறுவர்களுக்கோ வாழ்வே கொண்டாட்டமாக இருந்தது. படிப்பில் ஆசை இருந்தவர்கள் சுயமாகப் படித்தார்கள். நல்லாசிரியர்கள் அவர்களிடம் அக்கறைகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். எந்தத் திணிப்பும் இல்லை. நிர்ப்பந்தமும் இல்லை. இன்றைய வாய்ப்புகள் அன்று இல்லை. அதனாலேயே இன்றைய போட்டியும் அழுத்தமும் அன்று இல்லை.
ரொம்பப் படிக்காதே
எனது பள்ளிப் பருவத்துத் தாக்கமே எனது இரு குழந்தைகள் வளர்ப்பில் என்னை வழிநடத்திற்று. நல்ல வேளையாக அவர்கள் வளரும் சமயத்தில் அதிகபட்ச தொலைக் காட்சி அலைவரிசைகள், கம்ப்யூட்டர் கேம்ஸ், கைபேசிகள் என்கிற கவன ஈர்ப்புகள் இல்லை. நான் அவர்களுக்கு விளையாட்டுச் சாமான்களே வாங்கிக்கொடுத்ததில்லை. பரிசாக வந்தவையே வீட்டில் இருக்கும். நான் அவர்கள் முதல் வார்த்தை பேசுவதற்கு முன்பே புத்தகங்கள் வாங்க ஆரம்பிப்பேன். அவர்களது கவனமெல்லாம் புத்தகத்தில் செல்லும்படி கதைகள் சொல்வதும் சொற்களைப் பழக்குவதும் எங்களுக்குள் நடந்த விளையாட்டு. இருவரும் இன்றும் தீவிர வாசிப்பாளர்களாக இருப்பதற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது. அவர்கள் எனது ஆசான்களாக உணர்கிறேன். அவர்கள் பள்ளியில் படிக்கும்போது அவர்களை நான் ‘படி படி’ என்று வற்புறுத்தியதில்லை. ‘ரொம்பப் படிக்காதே’ என்று சொன்ன முட்டாள் தாய் நான்.
இன்றைய பள்ளிப் படிப்பு? நினைத்தாலே தலை சுற்றுகிறது. வாழ்க்கை இப்போது அதிக சிக்கலானது - பெற்றோர் களுக்கு. அது ஒரு பத்ம வியூகம். அதில் சிக்கிக் கொண்ட அபிமன்யுகள் நாம்.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

நம் கல்வி... நம் உரிமை!- ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்!





ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள், இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் மொத்தம் 20 பள்ளிகளுக்குக் குறைந்தவையே அரசுப் பள்ளிகள். மற்றவையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அல்லது உதவி பெறும் தனியார் பள்ளிகள். இந்த இரு வகைப் பள்ளிகளுக்கும் அரசு மானியம் மட்டும் வழங்கிவந்தது. அப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆய்வு நடத்தும் கடமை கல்வித் துறைக்கு இருந்தது. ஆண்டாய்வும், திடீர் ஆய்வுகளும் நடத்தப்பெற்றதால் பள்ளிகள் சீராக இயங்கின.
விடுதலை பெற்ற சமயத்தில் நான்கு நிலைகளில் ஆசிரியர் கல்வி அளிக்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு முடித்தவருக்கு கீழ்நிலை ஆசிரியர் (Lower Grade) சான்றிதழும், எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நிலைச் சான்றிதழும் (Higher Grade), எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவருக்கு இடைநிலைச் சான்றிதழும் (Secondary Grade) ஆசிரியர் கல்வி முடித்த பின் கல்வித் துறையால் வழங்கப்பட்டது. பட்டப் படிப்புக்குப் பின் ஆசிரியர் கல்வி முடித்தவர் பல்கலைக்கழகப் பட்டயம் பெற்றனர். பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களை ரத்துசெய்ய அரசுக்கு அதிகாரமில்லை என்பதால், ஆசிரியர் கல்வி முடித்தவரும் பொதுக் கல்வி இயக்குநர் அளிக்கும் ஆசிரியர் சான்றிதழைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் மீது அரசு ஒரு கண் எப்போதும் வைத்திருக்கும். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ரத்துசெய்யப்பட்டால் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய முடியாது.
சுதந்திரத்துக்குப் பின் புதிய பள்ளிகள் பட்டிதொட்டி யெல்லாம் தொடங்கப்பட்டன. அவற்றுக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பயிற்சி பெறாதவர்களையும் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கான பணித் தகுதி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலை ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இத்தகைய ஆசிரியர்களிடம் கற்றவர்கள் பல துறைகளிலும் முத்திரை பதித்துவருகிறார்கள். ஆசிரியர் பயிற்சிக்கும் கற்றலுக்கும் தொடர்பு இல்லையோ என்ற ஐயம் எழக்கூடும். இந்த தற்காலிக ஆசிரியர்கள் வேறு பணி கிடைக்கும் வரையில்தான் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். செய்யும் பணியை ஒரே நாளாயினும் நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதியே அவர்களது தொழில் வெற்றிக்குக் காரணம்.
ஒருகட்டத்தில் கீழ்நிலையும், பின்னர் உயர்நிலையும் நிறுத்தப்பட்டன. தற்போது இடைநிலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி மேனிலைக் கல்வியாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் பொதுத் தகுதி, ஆசிரியர் கல்விப் படிப்போடு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஆக, இன்றைய ஆசிரியரது தகுதிகள் முன்னர் இருந்ததைவிடப் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பழைய ஆசிரியர்களுக்கு இணையாக இவர்கள் இல்லை என்ற கூற்றை ஏற்பது கடினமாக உள்ளது.
அக்கால ஆசிரியர்கள்
அக்காலத்தில் மிகச் சாதாரணமான குடும்பங்களிலிருந்து தான் பெரும்பாலானோர் ஆசிரியர் தொழிலுக்கு வந்தனர். அவர்கள் ஆசிரியர் கல்வி படிக்கும்போது உதவித்தொகை கொடுப்பார்கள். ஆசிரியர் கல்வி பயிலக் கட்டணம் ஏதும் கிடையாது. உதவித்தொகை விடுதிக் கட்டணத்துக்கும் பிற செலவுகளுக்கும் போதுமானது. இன்னும் ஒரு வகை ஆசிரியர்கள் உண்டு. நிலபுலம் உள்ளவர்கள், வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள். பெரும்பாலும் உள்ளூரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணி மேற்கொள் வார்கள். வறுமை நிலையிலுள்ள ஆசிரியர்கள் தனிப்படிப்பு எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்வாகி உண்டு. அவர் பள்ளியின் செயல்பாட்டில் அக்கறை கொண்டிருப்பார். ஆசிரியர்கள் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருப்பார். விடுப்புகூட எடுக்க இயலாத நிலையில் ஆசிரியர்கள் இருப்பார்கள். நெடுங்காலத்துக்கு அரசு ஓய்வூதியம், விடுப்பு விதிகள் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது. 1971-ல்தான் அவை தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் அலைமோதிய அத்துமீறல்களை எதிர்த்து ஆசிரியர்கள் போராட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் 1976-ல் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளின் மீதான கல்வித் துறையின் பிடி இறுகியது மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் சிறிதளவு சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அதேசமயம், ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட இச்சட்டமே காரணமென்று நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
சுயநிதித் தனியார் பள்ளிகள்
1978-ல் அரசு மானியம் பெறாது நடத்த சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவை பல்கிப் பெருகிப் பட்டிதொட்டியெல்லாம் இன்று கோலோச்சுகின்றன. இப்பள்ளிகளுக்குத் தனியார் பள்ளி (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பொருந்தாது என்று அரசு முடிவெடுத்தது. ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பின்மை, விடுப்பு விதிகள் இல்லாமை போன்ற பல குறைபாடுகளுடன் இவை இயங்கிவருகின்றன. ஆசிரியர்களில் பலரும் தகுதி பெறாதவர். அரைச் சம்பளத்தில் எவ்விதச் சலுகையும் இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பள்ளி மீதோ மாணவர் மீதோ எப்படி உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடுதான் பெரும்பான்மையான சுயநிதிப் பள்ளிகள் நடைபெற்றன. ஒரு காலகட்டத்தில் பணியிலிருந்துகொண்டே சுயநிதிப் பள்ளிகளை ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கினார்கள். தம் முழு நேரப் பணியை ஓரங்கட்டிவிட்டு, தம் கவனம் முழுவதும் தம் சொந்தப் பள்ளிக்குச் செலுத்த ஆரம்பித்ததும் அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
இதேபோல தனியார் உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி களும் அதே வளாகத்திலோ அருகிலோ தம் பள்ளிக்குப் போட்டியாக சுயநிதிப் பள்ளியையும் தொடங்கி, அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொண்டனர். சுயநிதிப் பள்ளியில் சேர்க்கையை முடித்த பின்தான் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்க்கையைத் தொடங்குவார்கள்.
தமிழகக் கல்வித் துறை இம்முறைகேடுகளையெல்லாம் காணாதது மட்டுமின்றி ஆதரவும் கொடுத்தது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு.
உள்ளாட்சிப் பள்ளிகள்
உள்ளாட்சிப் பள்ளிகள் ஆங்கில ஆட்சியின்போது இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்கின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இவ்வமைப்புகள் செயல்பட்டன. இவற்றின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகள் சீராக இயங்குவதில் அவ்வமைப்பின் உறுப் பினர்கள் அக்கறை கொள்வார்கள். ஆசிரியர்கள் பணிபுரியும் ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்துக்குள் குடியிருக்க வேண்டும் என்பது விதி. பெரும்பாலும் ஆசிரியர்கள் அந்தந்த ஊரிலேயே வசித்துவந்தனர். மாணவர்களை மட்டுமின்றி அவர்களது பெற்றோரோடும் ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கம் இருந்தது. சமூகத்தின் சொத்தாக உள்ளாட்சிப் பள்ளிகள் திகழ்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வந்தவுடன் அவை அலசப்பட்டு, முன்னேற்றம் காண்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டும் சுணக்கமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டன.
படிப்படியாக இந்த உள்ளாட்சிப் பள்ளிகள் யாவும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1970-ல் கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தன. 35,000 தொடக்கப் பள்ளிகள், 8,000 உயர்நிலை-மேனிலைப் பள்ளிகளைச் சென்னையிலிருந்து நிர்வகிப்பது இயலாத காரியம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை.
ஆசிரியர்களால் முடியும்
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”
உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com